• Latest News

    December 10, 2014

    மு.காவின் உயர்பீடத்தில் நடந்தவை: மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்

    மஹிந்தவும் சிங்களவர் தான், மைத்திரியும் சிங்களவர் தான். இவர்களில் யார் வந்தாலும் கல்முனையில் புத்தர் சிலை வைப்பதை தடுக்க முடியாது. ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிக்கும் மைத்திரியிடம் முஸ்லிம்களுக்கு எதனையும் எதிர்பார்க்க முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர் அன்வர் தெரிவித்தார்.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர்பீடக் கூட்டம் நேற்றிரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

    இதில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஆறு பேர், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற தொனியில் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், ஏ.எம்.ஜெமீல், ஆர்.அன்வர், எம்.நஸீர் மற்றும் ஏ. தவம் ஆகியோர் பலத்த குரலில் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நேற்றைய கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் இவர்களின் அதிக்கமே அதிகம் காணப்பட்டதாக அக்கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

    இதன்போது ஆர்.அன்வர், எம்.நஸீர் மற்றும் ஏ. தவம் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் அதியுயர் பீட கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திலிருந்து அடிக்கடி வெளியேறி கையடக்க தொலைபேசியில் உரையாடியதையும் அவதானிக்க முடிந்தது.

    இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர் அன்வர் – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை உரத்த குரலில் கூறியிருக்கின்றார்.

    அத்துடன் மஹிந்தவும் சிங்களவர் தான், மைத்திரியும் சிங்களவர் தான். இவர்களில் யார் வந்தாலும் கல்முனையில் புத்தர் சிலை வைப்பதை தடுக்க முடியாது.

    தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உருமய அங்கம் வகிக்கும் மைத்திரியிடம் முஸ்லிம்களுக்கு எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றார் ஆர் அன்வர்.

    மாகாணசபை உறுப்பினர் தவமும் – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனும் தொனியில் பேசியுள்ளார். இருந்தாலும், ‘கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், மைத்திபாலவிற்கு ஆதரவு வழங்குவதாயின் அதற்குரிய பலமான விஞ்ஞான ரீதியான காரணங்களை கட்சி முன்வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான ஜவாத் – நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் மிகவும் உணர்சிவசப்பட்டு பேசியுள்ளார். “குர்ஆன், ஹதீஸ் மற்றும் மக்களின் நியாயமான விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு முடிவுகளை எடுப்பதற்கு கட்சித் தலைமை முன்வரவேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

    “மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற அழுத்தங்கள் ஏதாவது தலைவருக்கு இருந்தால் அதை இந்த இடத்தில் தலைவர் கூறுங்கள். உங்களோடு நாங்கள் இருப்போம். மக்களின் மனநிலைக்கு இணங்கவே நாம் செயற்பட வேண்டும். அந்தவகையில், நான் எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கே எனது ஆதரவை வழங்கவுள்ளேன்” என்றார் ஜவாத். TW
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் உயர்பீடத்தில் நடந்தவை: மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top