• Latest News

    March 19, 2015

    தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட எந்த தடையும் இல்லை - மனோவுக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவாதம்

    பழுலுல்லாஹ் பர்ஹான்-  
    இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய  சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசனிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்துள்ளார்.  

    இந்த உறுதிமொழி இன்றைய தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தின்போது, மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, 

    தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிகளில் ஒரே மெட்டில், ஒரே அர்த்தம் தொனிக்கும் வண்ணம் நீண்ட காலமாக பாடப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியின் போது இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து அதை இனவாத நோக்கில் தடை செய்ய வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச மற்றும் அப்போது ஹெல உறுமய கட்சியில் இருந்த உதய கம்மன்பில போன்றவர்கள் முன்னெடுத்தார்கள். அந்நேரம் மொழி அமுலாக்கல் துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இது தொடர்பில் எவ்வளவு எடுத்து கூறியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியான நிலைபாட்டை எடுக்காமல், இனவாதிகளின் கருத்துக்கு இடம் கொடுத்து வந்தார். இந்த குழப்ப நிமை காரணமாக ஒரு பிரிவு தமிழ், முஸ்லிம் சிவில் மற்றும் கல்வி அதிகாரிகளும் தன்னிச்சையாக இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாடப்படுவதை தவிர்த்து அல்லது தடுத்து வந்தனர்.  இதனால் தமிழ் பேசும் பிரதேச நிர்வாக நிகழ்வுகளிலும், நாடு முழுக்க தமிழ், முஸ்லிம் பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் பாட முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த குழப்ப நிலைமை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் தமிழ் மொழியிலான தேசிய கீதம் நிகழ்வை நடத்துபவர்களின் விருப்பத்தின்படி பாடப்பட முடியும். இதை தடுக்க முயல்பவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் ஆவர். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட எந்த தடையும் இல்லை - மனோவுக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவாதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top