எம்.வை.அமீர் -
(நுரைச்சோலையில் இருந்து ஒரு
நேரடி ரிப்போர்ட்)
அண்மையில்
அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்த இன நல்லுறவு தொடர்பான
தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர், அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள், கடந்த
2004ல்
ஏற்பட்ட சுனாமி கடல்பேரலைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக
நிர்மாணிக்கப்பட்டு குறித்த மக்களுக்கு வழங்கப்படாது கைவிடப்பட்ட நிலையில்
இருக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்துக்கும் வருகைதந்து பார்வையிட்டுவிட்டு
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மசூர் மௌலானா பின்வருமாறு தெரிவித்தார்.
அக்கறைப்பற்று
நுரைச்சோலையில் வறுமைக்கோட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென சவூதி
அரசினால் நிர்மாணிக்கப்பட்ட
சகல வசதிகளும் அமையப் பெற்ற மாதிரி நகரம் இன்று யாருக்கும் பயனில்லாமல்
பற்றைக்காடுகளாய் பாம்புகளுக்கும்,பூச்சிகளுக்கு ம்,வன விலங்குகளுக்கும் இருப்பிடமாகி
பரிதவித்து காட்சியளிக்கிறது.
கிழக்கிலே
வாழும் எமது முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினர் சந்தோசமாய்
வாழ அன்றைய சவூதி
மன்னரும், மக்களும்
மனமுவந்து வழங்கிய ‘ஸதக்கத்துல்
ஜாரியா’ இனவாதிகளின்
முட்டுக்கட்டைகளால் ஏழை மக்களின் கரங்களுக்குச் சேராமல் இருப்பது முஸ்லிம் சமூகத்தின் உச்ச
அவலமும் துரதிஸ்டமுமாகும்.
கடந்த 22 ஆம்
(மார்ச்) திகதி நுரைச்சோலை மாதிரி நகரத்தை பார்வையிட நான் விஜயம் செய்தேன்.
அவ்விடத்தை அடைந்ததும் என் மனம் கடும் கவலை கொண்டது. ஒரு இனத்தின் ‘அமானிதம்’
குறுகிய ஒரு சிலரின் அரசியல் காரணங்களுக்காய் வழங்கப்படாமலிருப்பது
பெரும் அநீதியாகும்.
அழகாய்
கட்டி முடிக்கப்பட்ட அந்த நுரைச்சோலை மாதிரி நகரம், அலங்கோலமாகி யாருக்கும் பயனில்லாமல் போய் விடுமோ
என்று என் மனம் வேதனைப்படுகிறது.
அக்கறைப்பற்றின்
எல்லையில் இருக்கும் இந்த சவூதி வீட்டுத் திட்டம் அமையப்
பெற்றுள்ள நுரைச்சோலைக்
கிராமம் முஸ்லிம்களின் பூர்வீக நிலமாகும். அந்த பூர்வீக நிலத்தில் அவர்கள் வாழும் உரிமை
மறுக்கப்பட்டிருப்பது வேதனைக்குரிய
விடயமாகும்.
நுரைச்சோலையில் இருந்து பல மைல் தூரத்தில் ’தீகவாபி’
எனும் சிங்கள மக்கள் வாழும் கிராமம் அமையப் பெற்றிருக்கிறது.
எனவே, இவ்வீட்டுத்
திட்டத்திற்கு சம்பந்தமில்லாத
தூரத்தில் வாழும் சிங்கள மக்கள் சவூதி அரசாங்கம் தனியே
முஸ்லிம்களுக்கு மாத்திரம்
நன்கொடையளித்த நுரைச்சோலை வீடுகளுக்கு எவ்வகையிலும் உரிமையோ உரித்தோ கொண்டாட முடியாது.
இருந்த போதிலும்,
மேலோட்டமாக பார்க்கின்ற போது இது ஒரு கபடத்தனமான அரசியல்
நோக்காகும். அங்குள்ள
அப்பாவி சிங்கள மக்களுக்கும் இவ்விடயத்தில் உடன்பாடு இருக்க முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது.
ஏனென்றால், நுரைச்சோலைக்கு
சென்று பார்த்தால் தெரியும், இவ்வீட்டுத்திட்டம்
தனியே முஸ்லிம்களுக்கென-
முஸ்லிம்களின் மதம்,கல்வி,கலாச்சார பாரம்பரியங்களை உள்ளடக்கி
நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு நான் அது குறித்த படங்களை இணைத்திருக்கிறேன்.
நுரைச்சோலை மாதிரி நகரத்தை நான் சுற்றிப் பார்த்த போது, அங்கே வாழும் முஸ்லிம் மக்களின் ஐவேளை தொழுகைக்கென
பெரியதொரு பள்ளிவாசல் அமையப் பெற்றிருக்கிறது. இப்போது அந்த இறை இல்லம் பற்றைக் காடாய்
காட்சியளிக்கிறது.
மேலும், அங்கே
ஆண் பிள்ளைகளுக்கு வேறாக பாடசாலை ஒன்றும்- பெண் பிள்ளைகளுக்கு வேறாக பாடசாலை
ஒன்றும் மிகச் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இத்துடன் முஸ்லிம்களின் பாரம்பரியங்களை சிதைக்காத வகையில் பல்வேறு அடையாளங்களை என்னால் அவதானிக்க
முடிந்தது.
இத்துடன்
வைத்தியசாலை, ஷொப்பிங்
கொம்பிளக்ஸ், பஸ்
நிலையம், அழகான
வீதிகள், சன
சமூக நிலையம், மைதானம் என கோடிக்கணக்கான ரூபா செலவில்
பல தரப்பட்ட வசதிகளுடன் அமையப்
பெற்ற நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இன்று யாருக்கும் பிரயோசனமின்றி கொஞ்சம்
கொஞ்சமாய் சிதைந்து கொண்டிருப்பதை பார்க்கையில் இதயம் வெதும்புகிறது.
எனவே, அதிகப்படியான முஸ்லிம்களின்
ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்ட இந்த அரசு முஸ்லிம்களுக்கு சவூதி அரசால்
நன்கொடையாக வழங்கப்பட்ட நுரைச்சோலை
வீட்டுத்திட்டமான ஏழைகளின் ‘அமானிதத்தை’ துரிதமாகப் பெற்றுக் கொடுக்க முன் வர
வேண்டுமென தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இன்று
எமது தாய் நாடு நல்லாட்சியை நோக்கி பயணித்துக்
கொண்டிருக்கிறது. இதனை மென்மேலும்
உறுதிப்படுத்த முஸ்லிம்கள் மீதான நல்லெண்ணத்தை இவ்வரசு துரிதமான அபிவிருத்தி
வேலைத்திட்டங்களூடாக வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், அதிமேதகு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வட மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின்
காணிகளில் ஒரு பகுதியை மீளவும் அவர்களிடம்
கையளித்திருப்பதைப் போல நாட்டின் பல பாகங்களில் இனவாதிகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கும்
முஸ்லிம்களின் காணிகளை மிகத் துரிதமாக
ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பாக, கடந்த
9 வருடங்களாக
மக்களுக்கு கையளிக்கப்படாது
சேதாரம் அடைந்து கொண்டிருக்கும்
நுரைச்சோலை வீடுகளை உடனடியாக முஸ்லிம்களுக்கு வழங்கி, அவ்வீட்டுக்காய் காத்திருக்கும் வறுமைக் கோட்டில் வாழும்
முஸ்லிம்களின் துயர் துடைக்க
வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான
இந்தத் தேசிய அரசாங்கத்தை
மிக வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.

0 comments:
Post a Comment