எஸ்.றிபான் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அடுத்த படியாக முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதொரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சியின் வளர்ச்சியின் வேகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாக திகழுமென்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் காலத்திலும் கட்சிக்குள் ஏற்படிருந்த முரண்பாடுகள் கட்சியின் செயலாளருக்கும், தலைவருக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் கொதிநிலையை அடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அடுத்த படியாக முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதொரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்குகின்றது. இக்கட்சியின் வளர்ச்சியின் வேகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாக திகழுமென்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் காலத்திலும் கட்சிக்குள் ஏற்படிருந்த முரண்பாடுகள் கட்சியின் செயலாளருக்கும், தலைவருக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் கொதிநிலையை அடைந்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினரால் றிசாட் பதியுதீன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டதொரு கட்சியாகும். இக்கட்சியினர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விமோசனத்திற்காக கட்சியை ஆரம்பித்தவர்கள் என்று சொல்வதனை விடவும், ரவூப் ஹக்கீமுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எதிரானதொரு கட்சியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பித்தார்கள் எனலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவுடன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், பின்னர் இந்த அடையாளத்தில் உள்ள முஸ்லிம் எனும் பதத்திற்கு பதிலாக மக்கள் எனும் சொல்லை சேர்த்துக் கொண்டார்கள். இதன் மூலமாக அன்றைய ஆளுந் தரப்பை திருப்திப்படுத்தினார்கள்.
இக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் ஆளுந் தரப்பிலிருந்து கொண்டது. றிசாட் பதியுதீன் அமைச்சர் பதவியிலும், கட்சியின் முக்கியஸ்தர்களில் பலர் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆயினும், இக்கட்சி முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்குரிய காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவையும், அன்றைய அமைச்சரவையும் திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்துக் கொண்டே இருந்தார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதனை கண்டிக்காது, பொது பலசேனவை கண்டித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்திற்கு தம்மை நல்ல பிள்ளையாக காட்டிக் கொள்வதில் அமைச்சர் றிசாட் பதியுதீனும், அவரது கட்சியின் முக்கியஸ்தர்களும் தமது கவனத்தை செலுத்தினார்கள். அதே வேளை, அரசாங்கத்தை முஸ்லிம்கள் மத்தியில் நல்லதாகக் காட்டவுமே தமது அதிகமான செயற்பாடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்த இக்கட்சியில் உள்ள சில உறுப்பினர்களுக்கும், தலைவர் றிசாட் பதியுதீனுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. இதனால், ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹுனைஸ் பாறூக் போன்றவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்கள். அரசியல் கட்சிகளிடையே இவ்விதமான நிகழ்வுகள் இடம்பெறுவது இயல்பானதாகும். ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அக்கட்சியின் வளர்ச்சிக்கும், நிலையான இருப்புக்கும் பெரும் ஆபத்தாகவே இருக்கின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இத்தொகை வாக்குகளை இக்கட்சி பெற்றுக் கொண்டமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களின் வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருந்தது. தமது கோட்டை எங்கே படிப்படியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரங்களுக்கு சென்று விடுமோ என அக்கட்சியின் தலைமை முதல் அனைவரும் அங்கலாயித்துக் கொண்டார்கள். இதனால், ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தில் தமது கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை அழிப்பதற்குமாக புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கும், கட்சியை புனரமைக்க வேண்டியதொரு கட்டத்திற்கும் தள்ளப்பட்டார்.
ஆனால், தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் உச்சம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சற்று நிம்மதியை கொடுக்குமென்பது நிச்சயமாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக றிசாட் பதியுதீன் தம்மை நியமிப்பார் என்று மனக் கோட்டை கட்டிக் கொண்ட கட்சியின் செயலாளருக்கு றிசாட் பதியுதீன் புத்தளத்தை சேர்ந்த நபவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியமை அதிர்ச்சியாகவே இருந்தது. பாராளுமன்ற தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் நிச்சயிக்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமது பெயரை குறிப்பிடாது விட்டமையை தொடர்ந்து கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக தலைவர் செயற்பட்டுள்ளார் என்றும், இதனால், அவரை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் செயலாளர் ஹமீட் அறிவித்தார். பதிலுக்கு தலைவர் றிசாட் பதியுதீன் கட்சியின் செயலாளர் ஹமீட் தற்காலியமாக அப்பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தார். இதே வேளை, கட்சியின் தலைவரை பதவி நீக்கம் செய்ததாக ஹமீட் அறிவிக்கவில்லை என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இந்தப் பின்னணியில் கட்சியின் செயலாளரும், தலைவரும் ஒற்றுமையுடன் செயற்படாது போனால் கட்சியை கலைத்து விடுவேன் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய றிசாட் பதீயுனுக்கும், ஹமீட்டுக்கும் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாப்பின் பிரகாரம் கட்சியின் செயலாளருக்கே அதிகாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சமரசத்திற்கு வருவதாகவும் தென்படவில்லை. இதே வேளை, கட்சியின் உயர்பீடத்தை கூட்டி கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமனம் செய்வதற்கு செயலாளர் ஹமீட் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு புதிய தலைவராக அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் ஆகியோர்களில் ஒருவர் நியமிக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் ஹிஸ்புல்லா நியமிக்கப்படலாமென்றும் தெரிவிக்கப்படுகிடுகின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்த வரை இக்கட்சியில் ஆரம்பத்தில் அமைச்சர் றிசாட் பதீயுதினுடன் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், அமைச்சர் ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.அமீரலி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.சுபையிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், சட்டத்தரணி என்.எம்.சஹீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.சுபையிர் போன்றவர்கள் இணைந்து செயற்பட்டார்கள். இவர்கள்; கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள். இவர்கள் தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் தூரமாகியுள்ளார்கள்.
இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மஹிந்தராஜபக்ஸவின் அரசாங்கத்தில் இணைந்து கொண்டமைக்கு முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை. நிபந்தனையற்ற ஆதரவையே வழங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு 20 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தது. இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் உங்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
முஹிந்தராஜபக்ஸ குறிப்பிட்ட 20 அம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இதன்போது உயர்பீட உறுப்பினர்களும் இருந்தார்கள். இந்நிலையில் அலரி மாளிகையில் நடைபெற்றதொரு சம்பவத்தின் பின்னர் றிசாட் பதீயுதீன் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முடிவு செய்தார். இதற்காக மைத்திரி மற்றும் ரணிலுடன் பேசினார். ஆனால், இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் எவரையும் அழைத்துச் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும், முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்தவொரு ஒப்பந்ததையும் றிசாட் பதீயுதீன் மேற்கொள்ளவில்லை என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் தற்போது குற்றம் சாட்டுகின்றார்கள். தேர்தல் காலத்தில் மௌனமாக இருந்தவர்கள்,; இன்று றிசாட் பதியுதீனை குற்றம் சாட்டுவது கூட முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள அக்கரையினால் அல்ல என்பதுதான் யதார்த்தமாகும். தங்களுக்கு பதவிகள் கிடைத்திருந்தால், செய்து கொள்ளாத ஒப்பந்தங்களை செய்ததாகவும் தெரிவிப்பார்கள். முஸ்லிம் கட்சிகள் ஒப்பந்தங்களை செய்து கொள்ளாது, தேர்தல் மேடைகளில் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டதாக பொய்களை கூறி மக்களை ஏமாற்றியமையை பகற்கொள்ளையாகும்.
வட மாகாண முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதி என்று தம்மை அடையாப்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்ளும் றிசாட் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை முழுமையாக்கிக் கொள்வதற்கு முடியாதுள்ளார். இதே வேளை, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாங்கள் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் தமிழர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டு வருவாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்டதனையும் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தாகவும் இணையங்களில் செய்திகளை காண முடிகின்றது.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம், காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவில்லை. அப்படியாக இருந்தால், முஸ்லிம் கட்சிகள் பதவிகளையே கோரியுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் கரிசனை இல்லை. யார் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. அந்த வகையில் வடமாகாண முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள றிசாட் பதீயுதீன் தமது கட்சி சார்பாக வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி உடன்படிக்கை செய்திருக்க வேண்டும். அதுவும் நடைபெற்றவில்லை என்றாலும், அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மற்றும் காணிப் பிரச்சினைகளில் உள்ள தமது இயலாமையை மறைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்திக் கொள்வதனால், வடமாகாணத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் றிசாட் பதீயுதீன் தமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கப்போகின்றார். தமது தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கு எத்தகைய சாணக்கிய முடிவுகளை எடுக்கப் போகின்றார் என்பதுதான் றிசாட் பதீயுதீன் வளர்த்து வைத்துள்ள அரசியல் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்குரிய கேடயமாக அமையும். இதில் தவறும் போது அவரின் செல்வாக்கில் பாரிய தாக்கங்கள் ஏற்படும்.
நன்றி : விடிவெள்ளி (27.11.2015)

0 comments:
Post a Comment