• Latest News

    November 27, 2015

    ஐ. நா பொதுச் சபையினால் சிபார்சு செய்யப்பட்டதே புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை: இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜாபர்

    எம்.வை.அமீர் -
    புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமைக்காக முழு அளவில் குரல் கொடுத்து வரும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் முது மானி ரகீப் ஜாபரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
    இன்று, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாக்களிப்பு வசதியை செயற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்தை கோரி பல வேலைத்திட்டங்களை இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணி முன்னெடுத்து வருவதை யாவரும் அறிவீர்கள். இது ஒரு வரலாற்று திருப்புமுனை என்பதிலும் மிகையாகாது. தற்போது இது சம்பந்தமான சில உண்மைகளையும், தெளிவுகளையும் மக்கள்முன் வைக்கலாமென்று நினைக்கின்றேன். இது எமது சமூகப் பொறுப்பும் அளப்பெரிய வரலாற்றுக் கடமையுமாகும்.
    முக்கியமாக , இந்த விடயம் ஒன்றும் சர்வதேச நாடுகளைப் பொறுத்த வரையில்  புதியதொன்றல்ல. ஏனெனில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் எதோ ஒரு வகையில் அந்த நாட்டின் புலம்பெயர் மக்களுக்கான வாக்குரிமை செயற்படுத்த பட்டிருக்கிறது. குறிப்பாக பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் கனடா போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். இது சம்பநதமாக International IDEA எனும் அமைப்பின் 278 பக்க ஆய்வறிக்கை தெளிவாக கூறுகின்றது. இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு மேலதிக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் அந்த ஆய்வறிக்கையை சமர்பிக்கவும் ஒன்றிணைந்து செயற்படவும் தயாரகவுள்ளோம்.

    இருந்தாலும், தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடான இலங்கையில் இது எப்போவோ நடைமுறைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்பதே எமது வாதமாகும.  இலங்கையின் மொத்த வாக்கு வங்கியில் சுமார் 15% வெளியே இருக்கையில் அவர்கள் பங்கு பெறாமல் எவ்வாறு ஒரு அரசையோ அவைகளையோ நாம் ஜனநாயக முறையில் தீர்மானிக்கலாம்?
    இன்று தொழினுட்பம் வளர்ச்சி அடைந்து, இணையத்தினூடாகவும், மின்னஞ்சலூடாகவும் மிக பாதுகாப்பான முறையில், பாரபட்சமில்லாமல், நீதியும் நடுநிலையுமான  வாக்களிப்பு வசதியை செயட்படுத்த முடியும். மேலும், ப்ரோக்ஸ்சி என்கின்ற பொறிமுறையினூடகவும் இதனை செயற்படுத்தலாம்.
    இது தவிர,  இந்தக் கோரிக்கையை முன்வைக்கையில், புலம்பெயர் தொழிலாளர் சமூகமே இதன் சாத்தியத்தை, ஒரு எட்டாக்கனியாக பார்க்கும் இரு மன நிலைப்பாட்டில் உள்ளதை அவதானிக்க முடிகிறது. அதாவது சிலரை பொறுத்த வரையில், இந்த விடயம் ஒரு புதுமையான கோரிக்கை என்றும், இதை எவ்வாறு கரை சேர்ப்பது என்றும், இந்த விடயம் பற்றி சர்வதேசத்தில் எங்கும் பேசப்படவில்லையே என்றும், அகவே இலங்கை மட்டும் ஏன் இதை செயற்படுத்த வேண்டும் என்றெல்லாம்  கேள்விக்கணைகளையும் விமர்சனங்களையும்  தொடுக்கின்றனர்.
     அனால், இதுவரைக்கும் மூடி மறைக்கப்பட்ட அல்லது பிரபல்யப் படுத்தப் படாத சில உண்மைகளை  எமது மக்களுக்கு  தைரியமாக தெளிவு படுத்தலாமென்று நினைக்கின்றேன்.
     அதாவது 1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபை அமர்வில்  புலம்பெயர் தொளிலாளர்களின் உரிமைகள் சம்மந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த  18 45/158 இலக்க ஐ. நா பொதுச்சபை அமர்வு தீர்மானத்தின் 41 ஆவது சரத்தின் படி, புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வாக்களிக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட வேண்டும், இதனை அந்தந்த அரசாங்கங்கள் தனது சட்டவிதிகளுக்கேற்ப வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்என்றும் தெளிவாக கூறுகின்றது. இலங்கை அரசும் இதனை ஏற்றுக்கொண்டு  1996 ஆம் ஆண்டு இந்த தீர்மானத்தில் கைச்சாத்திட்டதாக (RATIFIED) ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணையத்தில் உள்ள பதிவுகள் கூறுகின்றன.  மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைப் பாதுகாப்பிற்கான M.W.C என்கின்ற
    ஐ. நா மனித உரிமை ஆணையகத்தின் நிரந்தர உப குழு ஒன்று நிறுவப்பட்டு,  கச்சாத்திட்ட நாடுகளில் இந்த தீர்மானத்தின் செயற்பாடு பற்றி மேற்பார்வையும் செய்கின்றது. இது அநேகமான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன். எனவே நான் முன்னர் கூறிய போல ஐ. நா பொதுச் சபையின் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைப் பாதுகாப்பு பிரேரணையின் 41 ஆவது சரத்தானதுவாக்களிப்பு வசதி என்பது புலம் பெயர் தொழிலாளர்களின் ஒரு மனித உரிமை என்பதை உறுதிப்படுகின்றது, மட்டுமல்லாமல் அதை செயற்படுத்துவது நாடுகளின் கடமை என்றும் சுட்டிக் காட்டுகின்றது.
    இதற்கும் மேலாக, 2011 ஆம் ஆண்டு,  எமது அமைச்சரவையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பு வசதியை செயற்படுத்திக் கொடுப்பதற்காக  07.09.2011 அன்று அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு , இலங்கை தேசிய மனித உரிமைகள் வேலைத் திட்டத்தின் 5 ஆண்டு நிகழ்ச்சி நிரலில் (NPA)புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமான உள்ளடக்கத்தின்  11.1 சரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிப்பு வசதி என்பது இலங்கை அமைச்சரவையினாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
    ஆகவே  நாங்கள் புதிதாக ஒன்றையும் இங்கு அறிமுகப் படுத்துமாறு கோரிக்கை விடுக்க வில்லை , மாறாக ஐ.நா  சபையினால்  பிரேரிக்கப் பட்டு எமது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை தாமதமில்லாமல் செயற்படுத்துங்கள் என்றே கோருகின்றோம்.  இதில் மக்களுக்கு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    1996 இலிருந்து இன்று வரை இதனை நடைமுறை படுத்த சுமார் 20 ஆண்டுகள் கால அவகாசம் எமது அரசாங்கத்திற்கு போதவில்லையா? இதை தாமதிப்படுத்தியது யார்? இதற்கு முன்னுரிமை அளிக்கப் படாதது ஏன்இதற்கு பொறுப்பு கூறப் போவது யார் ? . என்றெல்லாம் இங்கு கேள்விகள் எழுகின்றன.
    இந்த வரலாற்றுப் பதிவுகளை  வைத்துப் பார்க்கும் போது,  இதில் அரசியல் லாபம் தேடுவதற்கான சந்தர்ப்பம் எவருக்கும் இருப்பதாக தெரியவில்லை. இது தெளிவாக ஐ.நா சபையால் சிபார்சு செய்யப்பட்டு, ஏற்கனவே எமது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு விடயமுமாகும். இதனை எமது அரசியல் கட்சிகள் முதலில் புரிந்து கொண்டு அரசியல் லாப சிந்தனைகளுக்கு அப்பால்  இதற்காக ஒன்றாக செயற்பட  முன் வரவேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். 
    இந்த உண்மைகளையும், வரலாற்று பின்னணியையும்  அடிப்படையாக கொண்டுதான் நாங்கள் சில மதங்களுக்கு முன்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாட்டை செய்திருந்தோம், அடிக்கடி ஊடகங்களில் பேசினோம். இதனை ஒரு தேசிய பேசு பொருளாக மாற்ற அடாது பாடுபடுகின்றோம்.  நாம் ஒரு போதும் ஆழம் அறியாமல் காலை விட எத்தினிக்க வில்லை என்பதை எமது புலம் பெயர் மக்களிடம் கூற விரும்புகின்றேன்.
    எமது ஆட்சியாளர்களிடம் ஒரு தாழ்மையான  வேண்டுகோள். வெறும் வாக்குறுதிகளோடும் ஆவணங்களோடும் இந்த விடயத்தை மட்டுப் படுத்தி காலம் கடத்தி விடாமல், இதன் முக்கியத்துவதை உணர்ந்து  நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கட்சி வேறுபாடு இல்லாமல் எந்தவொரு இன , மத , பிரதேச பாகுபாடும் காட்டாமல்எந்தவொரு அரசியல் லாப சிந்தனைகளையும் உள்வாங்காமல் எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்குரிய வாக்களிப்பு வசதியை  செயற்படுத்திக் கொடுக்க வருமாறும். வாக்குரிமையை மூலதனமாக கொண்டு எமது ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் சுபீட்சம் பெற வழி சமைத்துக் கொடுக்க உதவுமாறும்  உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
    என்றும் கூறினார். ரகீப் ஜாபர் கூறுகின்ற இந்த வரலாற்று உண்மைகள் , புலம் பெயர் மக்களின் வாக்குரிமை கோசத்தில் ஒரு திருப்பு முனையாகலாம் என்றே புலப்படுகின்றது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ. நா பொதுச் சபையினால் சிபார்சு செய்யப்பட்டதே புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை: இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் ரகீப் ஜாபர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top