• Latest News

    November 29, 2015

    பயங்கரவாதத்தின் பெயரால் உயிர்த்தெழும் இனவாதம்

    தீராத வியாதிகள் பற்றி நாம் கேள்விப்படுவதுண்டு. சில வேளைகளில் குறித்த நோயாளி அதை உணரலாம், உணராமலும் விடலாம். ஆனால் அது எப்போதும் சம்பந்தப்பட்ட நபரின் உடலில் இருந்து கொண்டே இருக்கும். மாத்திரைகள் சாப்பிடும் போதும், நேயெதிர்ப்பு சக்தி உயர்வாக இருக்கும் வேளைகளிலும் அவ்வியாதிகள் அடங்கிக் கிடக்கும். ஆனால், ஒவ்வாத உணவொன்றை நாம் உண்கின்ற போது, அல்லது வெளிப்புற தாக்கம் ஒன்று ஏற்படுகின்ற போது அது விழித்துக் கொள்ளும். மீண்டும் மாத்திரைகளை உள்ளெடுக்க வேண்டியிருக்கும். இயல்புநிலைக்கு வருவதற்கு கடுமையாக உடலை வருத்த வேண்டியிருக்கும். 

    பயங்கரவாதமும், இனவாதமும், சில வேளைகளில் மதவாதமும் கூட ஒரு தீராத வியாதியைப் போலவே உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

    உலக வரலாறு என்பது பெரும்பாலும் போர்களாலும் காதல்களாலும் நிரப்பப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் தமக்குள்ளே ஏதோவொரு யுத்தத்தை, இனமுறுகலை, கலவரத்தை சந்தித்தே வந்திருக்கின்றன. சமயங்களின் சரித்திரக் குறிப்புக்களிலும் 'புனிதப் போர்கள்' என்ற பெயரில் யுத்தங்கள் குறித்துரைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு இன்னுமொரு உலக மகா யுத்தம் நடந்து விடக் கூடாது என்ற அச்சம் உலக நாடுகள் பலவற்றை தொற்றிக் கொண்டது. எனவே இன்னுமொரு யுத்தம் இடம்பெறுவதை தடுப்பதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. 

    இருப்பினும் அதற்குப் பிறகும் யுத்தங்கள், இனமோதல்கள் இடம்பெறாமல் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை பார்த்துக் கொண்டிருக்க, இவ்வுலகம் எத்தனையோ மனித பேரவலங்களை சந்தித்து விட்டது. உலக மகா யுத்தத்தின் அளவுக்கு கட்டமைக்கப்பட்ட பாரிய யுத்தமொன்று இடம்பெறவில்லை என்று ஐ.நா. ஆறுதல் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னரான அழிவுகளை  கணக்கெடுத்தால் அந்த ஆறுதல் இல்லாது போய்விடக் கூடும். 

    இனம், மதம், பிராந்திய நலனின் பெயராலும் எண்ணெய் வளத்தை சூறையாடுதல், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளல், வல்லரசு என்ற அதிமேதாவித்தனத்தை வெளிக்காட்டல் போன்ற காரணங்களுக்காகவும்; சிறியதும் பெரிதுமாக யுத்தங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. சர்வதேச 'நாட்டாமைகளுக்கு' முடிவு கட்டுவதற்காக சில முஸ்லிம் பெயர்தாங்கி இயக்கங்கள் தாக்குதல்களை மேற்கொள்கின்ற அதேவேளையில், பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டுதல்' என்ற பெயரில் சில 'பெரிய அண்ணன்கள்' மேற்கொள்ளும் குண்டுவீச்சுகளில் குறித்த ஒரு மதத்தை பின்பற்றும் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
    முதலாவது உலக மகா யுத்தம் இடம்பெற்ற போது, இது சிறிய யுத்தங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் யுத்தம் என்றே சொல்லப்பட்டது. ஆனால் நூறு வருடங்கள் முடிவடைந்த பிற்பாடும் யுத்தங்கள் முடியவுமில்லை 
    ஐ.நா.வின் இலக்கு சாத்தியப்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.
     
    இஸ்லாத்தின் வரைமுறை
    இந்தத் தொடரில் ஆகவும் பிந்திய பதிப்பாக, மேற்குலக படைகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய தேசமொன்றை கற்பனையில் உருவகப்படுத்திக் கொண்டு அதற்காக போராடுவதாக ஐ.எஸ். குறிப்பிடுகின்றது. வழக்கம் போல பயங்கரவாதத்தை ஒடுக்கி, ஜனநாயகத்தை நிலை நாட்டுதல் என்ற போர்வையில் கூட்டுப்படைகள் ஐ.எஸ். இலக்குகள் மீது தாக்குதல் நடாத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் பல வேளைகளில் ஏனோ தெரியவில்லை கூட்டுப் படை இலக்குகள் தவறுகின்றன. அப்பாவி முஸ்லிம்களை கொன்றொளிக்கின்றன. மறுபுறத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ். தமது பதிலடி கொடுக்கும் முயற்சியில் ஒன்றுமறியா வெள்ளையர்களை அழித்தொழிப்புச் செய்கின்றது. 

    அமெரிக்காவும், இஸ்ரேலின் மூளையில் இயங்குகின்ற சில மேற்குலக அரசுகளும் மேற்குறிப்பிட்ட காரணங்களைச் சொல்லி முஸ்லிம் நாடுகளை இலக்கு வைத்து தாக்குவதையே காலகாலமாக செய்து வருகின்றன. ஆனால் அந்தந்த நாடுகளில் உள்ள கணிசமான மக்கள் இதை எதிர்க்கின்றனர். பொதுவாக மத ரீதியாக மக்களை ஒடுக்குவதும், எண்ணெய் வள நாடுகளில் காலூன்றுவதும் சர்வதேச 'நாட்டாமைகளாக' நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவதுமே மேற்படி அரசாங்கங்களின் இலக்காக இருக்கின்றது. அதற்கப்பால் சொல்லப்படுபவை எல்லாம் வெறும் கற்பிதங்களே. 

    ஆனால் அதற்காக முஸ்லிம்கள் ஐ.எஸ். அமைப்பினதோ அல்லது வேறு இயக்கங்களினதோ எல்லா செயற்பாடுகளையும் ஆதரிக்கின்றார்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகின்றது என்றும், அடக்குமுறை ஆட்சி நடைபெறுகின்றது என்றும் சொல்லிக் கொண்டு அரபுப் பெருநிலப்பரப்பில் அத்துமீறி நுழைந்து வேட்டையாடுகின்ற நாடுகளை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. அதனை ஐ.எஸ். போன்ற அமைப்புக்கள் செய்கின்றன என்பதால் உலக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அதனது அடிப்படைக் கொள்கைகளிற்கு ஆதரவளிப்பவர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் ஐ.எஸ். உள்ளிட்ட எல்லா போராட்ட, தீவிரவாத அமைப்புக்களினதும் அருவெறுக்கத்தக்க தாக்குதல்களையும் வெகுவாக வெறுக்கின்றனர். 

    புனிதப் போர் (ஜிஹாத்) என்ற ஒரு விடயம் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கின்றது. ஆனால் இதற்கு முன்னர் பலம்பொருந்திய அமைப்பாக இருந்த அல்கொய்தா மற்றும் தற்போதுள்ள ஐ.எஸ். போன்ற இயக்கங்கள் எல்லாம் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட புனிதப் போரின் நடைமுறைகளை பின்பற்றியதாக நியாயப்படுத்த முடியாதபடி பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களது அடிப்படை இலக்கு புனிதமாக இருக்கலாம் ஆனால் போரிடுகின்ற முறைமை இஸ்லாத்தினால் வரையறை செய்யப்பட்டதல்ல. அப்பாவி சிறுவர்களையும் பெண்களையும் கொல்வதை இஸ்லாம் தடுக்கின்றது. ஆனால் எதிரிகளை தாக்குதல் என்ற பெயரில் இவ்வாறான விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பண்டைய இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற யுத்தங்களுக்கும் பாரிஸ், லெபனான், மாலி போன்ற இடங்களில் இடம்பெற்ற பழிவாங்கல்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. 

    எனவேதான், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுகி;ன்ற இஸ்லாமிய பெயருடைய  இயக்கங்களின் எல்லா செயற்பாடுகளுடனும் உலக முஸ்லிம்கள் உடன்படவில்லை. அண்மையில் பி.யு.டபள்யு என்ற சர்வதேச அமைப்பொன்று முஸ்லிம் நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி சுமார் 6 வீதமான முஸ்லிம்கள் மாத்திரமே ஐ.எஸ்.போன்ற அமைப்புக்களிற்கு ஆதரவு வழங்குகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது 94 வீதமானவர்கள் ஆதரவளிக்கவில்லை என்பதுடன் இவர்களுள் கணிசமான முஸ்லிம்கள் அநியாயமான தாக்குதல்களை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றனர். 

    இதுதான் உண்மையான நிலைவரம். ஆயினும் ஏதோ ஒரு காரணத்திற்காக போராடுகின்ற ஆயுதமேந்திய அமைப்பை, பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்துவது ஒருபுறமிருக்க, அவர்கள் அரபு வசனங்களை பயன்படுத்துவதாலும் இஸ்லாமியர்களாக இருப்பதாலும் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எல்லோரையும் பயங்கரவாத கண்கொண்டு பார்ப்பது அபாண்டமானதாகும். உலக தீவிரவாதிகளை ஊட்டி வளர்ப்பதும் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதும் யார் என்பதை உலகறியும். இரகசியமாக ஆடுகளை வளர்த்து அவற்றை பகிரங்கமாக கொல்கின்ற வேலைதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் இரகசியமல்ல. தீவிரவாதிகளின் பின்புலங்களையும் அவர்களை ஆட்டுவிக்கின்ற மறைகரங்களையும் ஆராய்ந்து பார்த்தால், சில பொலிஸ்காரர்களதும் உளவாளிகளதும் முகமூடிகள் கிளியும். ஆனால் இவற்றையெல்லாம் தந்திரமாக மூடிமறைத்து விட்டு முஸ்லிம்களை தீவிரவாதத்துக்கு ஆதரவானவர்களாக சித்திரிக்கும் கைங்கரியம் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நடக்கின்றது. 

    எச்சரிக்கும் கருத்து
    கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸின் பரிஸ் நகரிலும் லெபனானின் பெய்ரூட் நகரிலும் ஐ.எஸ். குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டது. இதனை பார்த்து உலகமே அதிர்ந்தது. முஸ்லிம்களும் அழுதனர், அந்த நேரத்தில், இலங்கையில் இனவாத செயற்பாடுகளை நீண்டகால குத்தகைக்கு எடுத்துள்ள பொதுபலசேனா அமைப்பு ஒரு கருத்தை வெளியிட்டது. அதாகப்பட்டது, 'இலங்கையிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கின்றனர். இன்னும் ஒரு வருடத்திற்குள் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் பாரிஸ் நகரில் இடம்பெற்றது போன்ற ஒரு தாக்குதல் இடம்பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது' என்று பொது பலசேனாவின் அத்தேஞானசார தேரர் பகிரங்கமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, 'தெஹிவளையில் படையினரால் நடாத்தப்பட்ட சோதனையில் தற்கொலை மேலங்கி மற்றும் சினைப்பர் துப்பாக்கி என்பன கண்டெடுக்கப்பட்டதுடன் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், பாதுகாப்பு தரப்பு இது தொடர்பாக தகவல்களை வெளியிடவில்லை' என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றார். 

    இலங்கையில் மதச்சுதந்திரம் பற்றி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையால் பொது பலசேனா அமைப்பு கடும் விசனமுற்றிருந்த நிலையிலேயே இந்த கருத்தை ஞானசார தேரர் வெளியிட்டுள்ளார். இது மிகவும் பாரதூரமானதும் கவனிக்கபட வேண்டிய கருத்துமாகும். நடுநிலையாளரும் ஜனநாயகவாதியாக அறியப்பட்டவருமான மாதுலுவாவே சோபித்த தேரருக்காக சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். எனவே சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் உறவுகள் வலுப்பெறுவது தமது எதிர்கால செயற்பாடுகளுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்ற எண்ணத்தில் பயங்கரவாத பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் இதை சிந்திக்கலாம். எவ்வாறிருப்பினும் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு மீது ஒரு பௌத்த துறவிக்கு இருக்கும் அக்கறை பாராட்டுதலுக்குரியது. ஆயினும் அதில் மறைந்துள்ள உள்நோக்கங்கள் புலனாய்வுக்குரியது. 

    இலங்கையில் முப்படைகள் உள்ளடங்கலாக பரந்துபட்ட பாதுகாப்பு கட்டமைப்பொன்று காணப்படுகின்றது. குறிப்பாக பரந்துபட்ட வலையமைப்பை உடைய புலனாய்வு பிரிவு இயங்குகின்றது. இப்படியிருக்கையில் நாட்டில் இதற்கு முன்னர் அமைதியின்மைக்கு வித்திட்ட ஒரு அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பொளத்த துறவி, இந்நாட்டில் இஸ்லாமிய அல்லது ஐ.எஸ்.பயங்கரவாதம் இருக்கின்றது என்று கண்டுபிடித்திருக்கின்றார் என்றால், அவரும் அவரது சகாக்களும் அரச புலனாய்வுப் பிரிவை விட அறிவும், புலனாய்வு திறனும் கொண்டவர்களா? என்ற கேள்வி எழுகின்றது. 

    அதைவிட முக்கியமாக, 'இன்னும் ஒரு வருடத்திற்குள் நிச்சயமாக தாக்குதல் இடம்பெறும்' என்று புலனாய்வுத் துறை தவிர வேறு யாரும் எவ்வாறு குறிப்பிட முடியும்? அவ்வாறு சொல்வது என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அறிந்த ஒரு ஆளுமையாக அவர் இருக்க வேண்டும். 'இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை' என்று முன்னமே பாதுகாப்புத்தரப்பு கூறியிருக்கத்தக்கதாக, அதற்கு மாற்றமான கருத்தொன்றை கூறி, தாக்குதல் இடம்பெறுவதை தடுக்க இயலாது என்றும் கூறுவது புலனாய்வு துறை அதிகாரிகளை மலினப்படுத்தும் செயலாகவே நோக்கப்படுகின்றது. 

    அதுமட்டுமன்றி, கிழக்கில் அல்லது கொழும்பில் தாக்குதல் இடம்பெறுமென கூறுவது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றது. அதாவது, இந்த நாட்டில் முஸ்லிம்களின் இனத்துவ அடையாளங்களை இல்லாது செய்வதன் மூலமும் அளுத்கமை, பேருவளை கலவரங்கள் மூலமும் இனவாதம் எதை அடைந்து கொள்ள நினைத்ததோ அதை கடைசிமட்டும் அடைய முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் குற்றுயிராகிப்போன பேரினவாதம், சமயம்பார்த்து தமது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கின்றதோ என்பதுதான் அந்த சந்தேகம். அவர்களே சதித் திட்டத்தை தீட்டி, கலவரங்களை தூண்டிவிட்டு, 'இதோ நாம் சொன்னது நடந்து விட்டது' என்று சொல்வதற்கான அபாயம் இதில் இருப்பதாக முஸ்லிம்கள் உணர்கின்றனர். 

    இதுவே ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்ற போது இலங்கை முஸ்லிம்களுக்கு மேலும் தலையிடி தரக்கூடிய ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், 2014 செப்டம்பரில் சிரியாவின் அல்-றக்கா நகரில் இடம்பெற்ற விமான குண்டுத்தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அபுசுரைஹா செய்லானி என்று அறியப்பட்ட இவர் ஒரு ஐ.எஸ். போராளி என்றே ஆரம்பத்தில் தகவல் வெளியாகியிருந்தது. பின்னர்; இவர் ஒரு தொண்டுப் பணியாளர் என்றும் தொண்டுப் பணிகளுக்காக சென்ற போது குண்டுவீச்சில் சிக்குண்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. 

    கவனமாக செயற்படல்
    ஆனால் இப்போது ஐ.எஸ். ஆமைப்பின் டாபிக் சஞ்சிகையின் 12ஆவது இதழ் வெளியாகியுள்ளது. இதில் மேற்படி இலங்கை இளைஞன் ஐ.எஸ். போராளி என்றும் அவருடன் அவரது குடும்பத்தினர் உள்ளடங்கலாக 16 பேர் அவ்வமைப்பில் இணைந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எந்தவொரு போராட்ட அமைப்பும் எல்லா நேரங்களிலும் உண்மையான தகவலை வெளியிடும் என்று சொல்ல முடியாது. உண்மையைக் கொல்வதே போரில் முதலாவது கட்டம் என்பதால் ஐ.எஸ். அமைப்பானது குறித்த இலங்கையரை தமது அமைப்பை சேர்ந்தவர் என்று பரப்புரை செய்திருக்கலாம் என்ற ஒரு எண்ணம் ஒரு சிலருக்கு இருந்தது. ஆயினும், இலங்கை பாதுகாப்பு தரப்பு வெளியிட்டுள்ள புதிய தகவல் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியுள்ளது. 

    இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி மேற்குறித்த நபரும் அவரது குடும்பத்தினர் சிலரும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பை கொண்டிருந்தமை தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 'நாட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை' என்று பாதுகாப்பு தரப்பு அடித்துக் கூறியுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற இனவாதத்தை முஸ்லிம்கள் எதிர்கொள்வதை இது மேலும் சிக்கலாக்கலாம். 

    சர்வதேச பயங்கரவாதத்தை காரணங்காட்டி உள்நாட்டில் இனவாதத்தை உயிர்பெறச் செய்வதில் கடும்போக்கு சக்திகள் மீண்டும் தமது கவனத்தை செலுத்தியிருப்பதாக அனுமானிக்க முடிகின்றது. சுருங்கக் கூறின், பரிஸில் இடம்பெற்ற தாக்குதலால் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஏற்பட்டிருக்கின்ற எதிர்ப்பு, ஒரு கணிசமான மக்களிடையே ஏற்பட்டிருக்கும் முஸ்லிம்கள் பற்றிய நம்பிக்கையின்மை போன்ற களநிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, இனவாத அரசியல் செய்வதற்கு பொது பலசேனா முயற்சி எடுக்கின்றது எனலாம். 

    இது விடயத்தில் முஸ்லிம்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு அந்த மார்க்கத்தின் விதிமுறைகளை மீறி, ஆயுத இயக்கங்கள் செயற்படுவதன் காரணமாகவே இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கும் மேற்குலக நாடுகளுக்கு பதிலடி கொடுப்பது வேறு விடயம். ஆனால் அந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்ற ஆயுத இயக்கங்கள் அப்பாவிகளையும் கொல்வதால் இதனை புனிதபோராக நியாயப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உலக முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். 

    அதேபோல், இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏதோ ஒரு அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர் என்ற தோற்றப்பாடு இப்போது ஏற்பட்டிருக்கின்றது. இதனை இனவாதம் எப்படிக் கையாளும் என்பதை ஊகிப்பது கடினமானது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கூறிக் கொண்டு ஒரு சமூகம் செயற்படுவதாக இருந்தால், அச்சமூகத்திற்கு போராடும் உணர்வும் பலமும் இருக்க வேண்டும். ஒரு ஆர்ப்பாட்டத்தையோ அல்லது கடையடைப்பையோ கூட ஒழுங்காக ஏற்பாடு செய்வதற்கு திராணியற்ற இனக் குழுமமான முஸ்லிம்கள், பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் மிகப் பவ்வியமாக நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

    மறுபுறத்தில், நல்லாட்சி அரசாங்கம் இதில் மிக முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளது. ஒரு காலத்தில் எல்லா தமிழர்களையும் புலிகளாக கருதியது போல, இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்களாக பொதுமைப்படுத்துவதற்கும், அதைவைத்து இனவாதத்தை வளர்ப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.
    இதற்கு முன்பிருந்த பேரரசரை இனவாதம்தான், மீள எழமுடியாதபடி வீழ்த்தியது என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துவிடாமல் இருந்தால் சரி.  
    ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 28.11.2015)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பயங்கரவாதத்தின் பெயரால் உயிர்த்தெழும் இனவாதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top