• Latest News

    November 25, 2015

    பதவிகளைக் கொடுத்து அதிகாரங்களை பறித்தல் ?

    ஏ.எல்.நிப்றாஸ்
    ஒரு வீட்டுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தும் போது பிரதான ஆளி (மெயின் சுவிட்ச்) என்று ஒன்று இருக்கும். ஒவ்வொரு மின்குமிழ்கள் மற்றும் மின்விசிறிகளை இயக்குவதற்குமாக பிரத்தியேக சுவிட்ச்களும் இருக்கும். ஆயினும் மின்மானியோடு நேரடித் தொடர்பை கொண்டுள்ள மெயின் சுவிட்ச்தான் ஏனைய தனித்தனி சுவிட்ச்கள் ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும். 

    மெயின் சுவிட்ச் அடிக்கடி மாற்றப்படுவது கிடையாது. ஆனால் ஏனைய சுவிட்ச்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்றப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பார்ப்பதற்கு அழகான, விலைகூடிய சுவிட்ச்கள் பலவாறாக மாற்றப்படும். ஆனால் மெயின் சுவிட்ச் பழையதானாலும் தனது பிரதான கட்டுப்பாட்டு ஆற்றலை அது தன்னகத்தே வைத்திருக்கும். உப சுவிட்ச்கள் 'ஒன்' செய்யப்பட்டிருந்தாலும் அழகான மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும், மெயின் சுவிட்ச் தொகுதியானது அந்த குறிப்பிட்ட சுவிட்சுக்கு மின்சாரத்தை வழங்கினால் மட்டுமே அது சரியாக இயங்கும். 

    விலைகூடிய, புதிய சுவிட்ச் என்பதற்காகவோ அலங்கார மின்குமிழ்களுடன் தொடர்பை கொண்டிருப்பதாலோ.... மெயின் சுவிட்ச்சின் கட்டுப்பாட்டை மீறி, உப சுவிட்சுகளால் இயங்குவதற்கு ஒருக்காலும் முடியாது. இது அரசியலுக்கும் பொருத்தமான உருவகமாகும். 

    புதியவர்கள் நியமனம்

    இலங்கை வாழ் முஸ்லிம்களில் கணிசமானோரால் உயிரிலும் மேலாக நேசிக்கப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு அண்மையில் பொல்கொல்லையில் இடம்பெற்றது. நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், கட்சி கடுமையான உள்ளக சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு முக்கியமான காலப்பகுதியில் இந்த பேராளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போது சில முக்கிய விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனக்கிருக்கின்ற அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், கல்முனை கரையோர மாவட்டம் போன்றவை அவற்றில் மிக முக்கியமானவையாகும். 

    இதேவேளை, முன்னமே எதிர்பார்க்கப்பட்டிருந்தது போலவே யாப்பு ரீதியான திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நிர்வாக சபை கட்டமைப்பு ரீதியான மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை அறிவிக்கப்பட்டதுடன், இதில் பழையவர்களும் புதிய முகங்களும் உள்ளடங்கியுள்ளனர். தலைவர், தவிசாளர் போன்ற குறிப்பிட்ட சில பதவிகளைத் தவிர கிட்டத்தட்ட ஏனைய எல்லா பதவிகளிலும் ஆள்மாற்றம் அல்லது அதிகார மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. பிரதித் தலைவர்கள் மற்றும் பிரிவுகளுக்கான செயலாளர்கள் போன்ற பல புதிய பதவிநிலைகளை முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கியிருக்கின்றது. இந்த நடவடிக்கை சமூகத்தில் சார்பான, எதிரான கருத்தாடல்களை ஏற்படுத்தி இருக்கின்றது. 

    குறிப்பாக, கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத்திற்கும்  செயலாளராக இருந்த எம்.ரி.ஹசனலிக்கும் அதே பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பஷீரின் வழக்கமான பொறுப்புக்கள், அதிகாரங்களில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் ஹசனலியால் இவ்வளவு காலமும் கவனிக்கப்பட்ட சில விடயங்கள, புதிதாக உருவாக்கப்பட்டு, முன்னாள் உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதருக்கு வழங்கப்பட்டுள்ள உயர்பீட செயலாளர் என்ற பதவியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது இவ்வளவு காலமும் ஹசனலியால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணையாளரை கட்சி சார்பாக சந்தித்தல், பாராளுமன்ற செயலாளரை சந்தித்தல் மற்றும் உயர்பீட கூட்டறிக்கை தயாரித்தல் போன்ற சில பணிகளை இனிவரும் காலங்களில் உயர்பீட செயலாளரே மேற்கொள்வார். இது தொடர்பிலான விமர்சனங்களே பெரிதும் முன்வைக்கப்படுகின்றன. கிழக்கைச் சேர்ந்த மூத்த போராளி ஒருவர் கட்சியால் தவணை முறையில் ஒதுக்கப்படுவதாக போராளிகள் பேசிக் கொள்கின்றனர். 

    உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஒரு அரசியல் கட்சியில் பதவிகளும் அதிகாரங்களும் மாற்றப்படுவது ஒன்றும் புதிதல்ல. தவிசாளரிடமும் செயலாளரிடமும் பல இரகசியங்கள் பொதிந்து கிடப்பது கட்சித் தலைமைக்கு தெரியும். அவ்வாறான விடயங்களை வெளியிடப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் தவிசாளர் சேகுதாவூத் அறிக்கைகளை விட்டிருந்தார். இவ்வாறு ஹசனலியும் எச்சரிக்கை செய்திருந்தால் ஒருவேளை அவரது பதவி உள்ளடக்கம் குறைக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம். 

    ஆனால், இதில் ஆச்சரிப்பட ஒன்றுமேயில்லை. ஏனென்றால் முதலாளித்துவ கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை கொண்டு செல்ல விடாமல் அவ்வப்போது அஷ்ரஃபின் கொள்கைகளை கூறி இழுத்துப் பிடிப்பவர் ஹசனலி என்று கட்சிக்குள் ஒரு அபிப்பிராயம் உள்ளது. இவ்வாறு தம்முடைய மூக்கணாங்கயிறாக யாரும் இருக்கக் கூடாது என்று கட்சித் தலைவர் எப்போது கருதினாரோ அப்போதே, ஹசனலி தானாக ஒதுங்கிக் கொள்ளும் சூழலை கட்டமைக்க தலைவர் ஆரம்பித்து விட்டார் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் என்னிடம் கூறினர். இது வெறுமனே தேசியப்பட்டியல் சர்ச்சையால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்று அவர்கள் சொல்வதில் உண்மையிருக்கின்றது. 

    எது எவ்வாறிருப்பினும், ஹசனலியின் கடமைகள் குறைக்கப்பட்டது போன்ற ஓரிரு விடயங்களை தவிர்த்துப் பார்த்தால், இந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் பல புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றார். பௌதீக ரீதியாக நோக்குகின்ற போது தமது கட்சியின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். குறிப்பாக 6 விடயங்களுக்கு பொறுப்பான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் ஹக்கீமை பாராட்ட வேண்டும். தானே தலைவன் தன்னிடமே அதிகாரம் எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்காமல், கட்சிக்காக உழைத்த பலரை முக்கிய பொறுப்புக்களுக்கு நியமித்தமை மிகவும் வரவேற்கத்தக்கது. இந்நிலையில் தலைமையை மாற்றுவது பற்றி சிந்திப்பது எடுபடாது. 

    கட்சியின் உண்மையான போராளிகளும் ஆதரவாளர்களும் நிலைமைகளை சரியாக மதிப்பிட்டு அறிந்து கொள்கின்றார்கள். ஆயினும் தலைவரிடம் இருந்து ஏதாவது ஒரு பதவி தமக்கு கிடைக்கும் என்று மனப்பால் குடிப்போரும் கண்மூடித்தனமான விசுவாசிகளுமே எல்லாம் சரி எனச் சொல்ல முனைகின்றனர். கட்சியின் உயர்பீடத்தில் உள்ளோர் மற்றும் முக்கியஸ்தர்கள் கூட தொலைபேசி அழைப்பை எடுத்து தமது மனக் கவலைகளை எழுதும்படி கோரும் அளவுக்கு, நிலைமைகள் போய்க் கொண்டிருப்பதை சொல்லாமல் விட முடியாது. அந்த வகையில் இம்முறை பேராளர் மாநாட்டில், மிகச் சூட்சுமமான முறையில் ஹக்கீமின் சாணக்கியம் வேலை செய்துள்ளதை பலரும் கவனித்திருக்கின்றார்கள். 

    சாணக்கியமான கல்
    அதன்படி அண்மைக்காலத்தில் கட்சிக்குள் பரபரப்புக்களை ஏற்படுத்திய எல்லோருக்கும் நிர்வாக சபையில் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெறுவதற்கான எதிர்பார்ப்பை கொண்டிருந்தவர்களான எம்.எஸ் தௌபீக்கிற்கு இணக்கப்பாட்டு வாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் எஸ்.எல்.எம்.பழீல் வேறு ஒரு விடயதானத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண அமைச்சை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களான ஏ.எல். தவத்திற்கும், ஆர். அன்வருக்கும் விடய பிரிவுகளின் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தாறுஸ்ஸலாம் கட்டிடத் தொகுதியின் வரவு செலவுக் கணக்கை கோரிய உறுப்பினர்களுள் முக்கியமானவர் என்று உயர்மட்டத்தினால் கருதப்படும் ஒருவருக்கும் விடயச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.  

    இவர்களுள் ஒருவரை தவிர மற்ற எல்லோரும் ஏதோவொரு பதவிக்கான எதிர்பார்ப்பை கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு கட்சியில் (பெரிய பதவிபோல தெரிகின்ற) ஒரு பதவியை வழங்கியதன் மூலம், மிக அண்மித்த எதிர்காலத்;தில் அவர்கள் வேறு எவ்வித பதவியையும் கேட்க முடியாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த யாப்பு மாற்றத்தில், மேற்சொன்னவர்களை சமாளிப்பதற்காக திருத்தத்தை மேற்கொண்டமையானது, ஹக்கீம் வீழ்த்திய ஒரு மாங்காயாகும். இந்தக்கல்லில் மேலும் சில மாங்காய்களையும் அவர் வீழ்த்தியிருக்கின்றார். 

    அதில் மிகப் பெரிய மாங்காய்தான்  பொதுச் செயலாளரின் அதிகாரங்களையும் செயற்பரப்பையும் மட்டுப்படுத்தியதாகும். இது தனியாக ஹசனலி என்ற ஒருவருடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ள மாட்டோம் என்று சிலர் அடம்பிடிக்கின்றனர். செயலாளர் ஹசனலி தனது 70 வயதில் வேறு ஒரு கட்சி தொடங்கும் எண்ணத்தில் இல்லை. ஹக்கீமை அகௌரவப்படுத்தவும் போவதில்லை. தலைவருக்கான அதிகமான குணாதிசியங்களை ஹக்கீம் கொண்டிருக்கின்றார் என்பதில் அவர் தெளிவாக இருக்கின்றாhர். எனவே கட்சியை சுத்தப்படுத்தி, தலைவருக்கு ஒரு கடிவாளம் போட வேண்டும் என்ற - அரசியலின் கடைசிக்கட்ட ஆசையே செயலாளருக்கு உள்ளதாக அனுமானிக்க முடிகின்றது.  

    இப்படியிருக்கத்தக்கதாகவே உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ. காதர் நியமிக்கப்பட்டு பொதுச் செயலாளரின் விடயதானங்கள் சில அவருக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக பல புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டு அவர்களுக்கும் விடயதானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இது நல்லதொரு முன்மாதிரி. கட்சி விடயத்திலும் கட்சியின் உறுப்பினர்கள் விடயத்திலும் இவ்வளவு அக்கறையுடன் தலைவர் நடந்திருப்பது நல்லதே. இருப்பினும் பதவிகள் வழங்கப்பட்டாலும் முழுமையான அதிகாரங்கள் காலம்; முழுக்க வழங்கப்படுமா? என்பதே பாரிய சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றது. 

    இவ்வளவு காலமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அரசியல் அதியுயர் பீடம், உயர்பீடம், நிர்வாக சபை என பல்வேறு கட்டமைப்புக்களை கொண்டிருந்ததுதான். ஆனால் எல்லா தீர்மானமும் 'ஏகமானதானது' என்று அறிவிக்கப்பட்டாலும் அநேககமானவை உண்மையில் தலைவரினதும் இன்னும் இரண்டு பேரினதும் தீர்மானமானங்களாகவே இருந்ததை உயர்மட்டம் தொடக்கம் கடைநிலை தொண்டன் வரைக்கும் எல்லோரும்  அறிவார்கள். இருப்பினும் ஏதோ ஒரு அடிப்படையில் ஏனைய முஸ்லிம் கட்சிகளை விட பரந்துபட்ட கலந்தாய்வு அடிப்படையில் தீர்மானங்களை மு.கா. மேற்கொண்டதையும் மறுப்பதற்கில்லை. ஏனென்றால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர்  கொஞ்சமேனும் அதிகாரத்தை கொண்டிருந்தனர். 

    ஆனாலும் அண்மைக்காலமாக கட்சியின் உயர்பீடத்தில் அங்கம் வகிக்கின்றவர்களுள் பெரும்பாலானோர் தலைவரின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய கடப்பாட்டை உடையவர்கள் என்பதை உயர்பீட உறுப்பினர்களே அங்குமிங்கும் சொல்லி புலம்பித் திரிகின்றனர். அதாவது அரசியல் ரீதியான பதவிகளுக்காக காத்திருப்போர், தலைவரின் அமைச்சில் தொழில்புரிபவர்கள் மற்றும் உறவினர்கள், நெருக்கமானவர்களாலேயே பெரும்பகுதி உச்சபீடம் நிரப்பப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. அதன் காரணமாக மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லாமல் போயிருப்பதால், கூட்டு ஆலோசனை என்பது ஏட்டுச் சுரக்காய் மாதிரி போய்விட்டதாக சொல்லப்படுகின்றது. 

    இந்நிலையிலேயே புதிய திருத்தத்தின் ஊடாக பல புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் உண்மையாகவே அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளனவா அல்லது பகிரங்கமாக பதவிகளையும் கொடுத்து ரகசியமாக அதிகாரங்கள் எல்லாம் ஒரு மையப் புள்ளியை நோக்கி குவிக்கப்படுகின்றனவா என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணங்கள் பலவுண்டு. 

    சந்தேகத்தின் காரணங்கள்
    குறிப்பாக ஹசனலியின் அதிகாரங்கள் குறைந்திருப்பதால் அவர் இனிவரும் காலங்களில் ஒதுங்கி செயற்பட்டாலும் ஆச்சரியமில்லை. இந்நிலையில் தற்போது உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒரு கல்வியியலாளர். இவ்வாறான ஒருவரின் அறிவு கட்சிக்கும், அரசியலுக்கும் தேவை என்பதில் முரண்பாடுகள் இல்லை. ஆனால், இவர் இந்த சமூகத்திற்காக தலைவரை எதிர்த்து நிற்பாரா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி? இவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அரசியலுக்கு வரமாட்டார். இவருக்கு மாதச் சம்பளமே வழங்கப்படவுள்ளது. இவ்வாறிருக்கையில் இவர் தனக்கு சம்பளம் தருகின்ற கட்சியின் தலைவர் ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது அதனை அரசியல் கோணத்தில் அணுகமாட்டார் என்பது மட்டுமன்றி தலைவரின் ஏவலுக்கேற்ப செயலகப் பணிகளை போன்ற செயற்பாடுகளையே அவரால் நிஜத்தில் மேற்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். 

    இதேவேளை நிர்வாக சபையில் இருக்கின்ற நான்கைந்து பேரை தவிர்த்துப் பார்த்தால் மற்ற எல்லோரும் தலைவரில் ஏதோவொரு அடிப்படையில் தங்கி இருப்பவர்களாகவே தென்படுகின்றனர். அநேகமானவர்கள் எம்.பி., மாகாண சபை உறுப்பினர் கனவுகளை கொண்டிருக்கின்றனர், சிலர் தலைவரினால் சம்பளம் வழங்கப்படும் உயர் பதவிகளை வகிக்கின்றனர். இன்னும் சிலர் தலைவருக்கு கடப்பாடுடையவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு இருந்தால், கட்சியின் நிர்வாக சபையின் அதிகாரங்கள் மறைமுகமாக யாரிடம் போய்ச் சேரும் என்பதை விலாவாரியாகச் சொல்ல வேண்டியதில்லை. அதாவது தனக்கு வேண்டியவர்களை போட்டு அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கியது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தியிருக்கின்றார் தலைவர். இதன்மூலம் மேலும் பல மாங்காய்கள் விழுந்துள்ளன. 

    முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் மிக நல்ல பண்புகளைக் கொண்டவர். கட்சிக்கு கிடைத்த நல்லதொரு ஆளுமை என்றும் சொல்லலாம். ஆனால் அவரது சில போக்குகள் அண்மைக்காலங்களாக கட்சிக்குள் கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பூனை கண்ணைமூடிக் கொண்டு பாலைக்குடிப்பது போல அவர் மேற்கொண்ட நகர்வுகள் செயலாளரையும் தவிசாளரையும் மட்டுமல்ல கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லோரையும் முகம் சுழிக்க செய்திருக்கின்றது. தலைவர் முன்னே சிரித்து பேசுகின்ற பலர், வெளியே ரகசியயமாக சந்தித்து இந்த விவகாரங்களை எல்லாம் போட்டு உடைக்கின்றனர், தமக்குள் பேசிக் கொள்கின்றனர். விவாதிக்கின்றனர். 

    இலங்கையில் இயங்கும் சில கட்சிகளின்; அதிகாரங்கள் தலைவரிடமே இருக்கின்றன. தேசிய காங்கிரஸ், இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளை எல்லாம் இதற்கு உதாரணமாக கொள்ளலாம். சில கட்சிகளின் தலைவரும் செயலாளரும் ஒருவாரகவே இருப்பர். சிலநேரம் செயலாளர் பெயரளவில் மட்டுமே இருப்பார். முஸ்லிம்களின் சமூக விடுதலை இயக்கமாக உருவாகி, பின்னர் அரசியல் கட்சியாக பரிணாமம் எடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்படியான நிலைக்கு, அதாவது தனிமனித அதிகாரத்தை கொண்ட ஒரு கட்சியின் மட்டத்திற்கு இறங்கி வருகின்றதோ என்ற உள்ளச்சம், அக்கட்சியை உண்மைக்குண்மையாக நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. 

    மஹிந்த ராஜபக்ஷ அதிகாரம் எல்லாவற்றையும் தன் கைக்கு கொண்டு வருவதற்காக 18ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அவரதும் மற்றும் அதிகாரங்கள் மீது நம்பிக்கை வைத்த ஏனைய அரசியல்வாதிகளதும் அரசியல் எவ்வாறு இருந்த இடம்தெரியாமல் அழிந்து போனது என்பதை எல்லோரும் அறிவோம். அந்த வகையில் மு.கா. என்பது யாருடைய தனியுடமையும் அல்ல. எந்த பெரிய அரசியல்வாதிக்கு கிடைத்த சீதனமும் அல்ல. இது மக்களின் சொத்து. மு.கா.வை  ஒரு சமயத்தைப் போல நேசிக்கின்ற மக்களின் அரசியல் அடையாளம். அஷ்ரஃபின் வழியிலிருந்து அக் கட்சியை விலக்கி வேறு பாதையில் தனியுடமை வியாபாராமாக நடாத்திச் செல்ல இயலாது. 




    ஆனால், நாம் மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் ஒரு ஊகத்தின் அடிப்படையிலானவையே என்பது இங்கு மிக மிக கவனிக்கத்தக்கது. மு.கா. தலைமை நம்முடைய ஊகங்களை எல்லாம் மிகைத்த ஒரு தலைமையாக செயற்படலாம். அதற்கான சந்தர்ப்பம் நிறையவே உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசியமைப்பை திருத்தியது போன்று ஹக்கீம் யாப்பை திருத்தி அதிகாரத்தை பறித்துள்ளதாக நமக்குத் தோன்றினாலும், தலைவர் ஹக்கீம் உண்மையில் ஒரு நல்ல நோக்கத்தில் இதை செய்திருக்கலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19ஆவது திருத்தத்தை மேற்கொண்டது போல, தமது அதிகாரங்களை குறைப்பதற்காகவே யாப்பு திருத்தத்தையும்  மேற்கொண்டு புதிய பதவிகளையும் வழங்கியிருக்கலாம் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டியிருக்கின்றது. அவ்வாறு நடந்தால் மிகவும் சந்தோசமே.  


    எவ்வளவு நல்ல சுவிட்சுகளாக இருந்தாலும், மெயின் சுவிட்ச் சரியாக மின்சாரத்தை கடத்தவில்லை என்றால் விளக்குகள் ஒளிராது. மெயின் சுவிட்ச்சும், உப சுவிட்சுகளும் சரியாக வேலைசெய்தால்தான் இடையறதா ஒளி பரவும். ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்த மாதிரி இருக்கும்;. 

     (வீரகேசரி 21.11.2015)



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பதவிகளைக் கொடுத்து அதிகாரங்களை பறித்தல் ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top