• Latest News

    December 06, 2015

    டிச.6 செய்திப் பதிவுகள்: மழையை மீறிய நிவாரணப் பணிகளும் அடுத்த 24 மணி நேர நிலவரமும்

    மிரட்டும் மழையில் இருந்து சென்னை தன்னை மெல்ல மெல்ல புதுப்பித்துக் கொண்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள், தூய்மைப் பணிகள் ஆகியவற்றால் சென்னையின் நிலை சீரடைந்து வருகிறது.
    பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மாநில அரசு மற்றும் கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவப் படை, மீனவர்கள் குழு உள்ளிட்டவை நிவாரணப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
    வெள்ளப்பகுதிகளில் இருந்து 14 லட்சம் பேர் மீட்பு: தமிழக அரசு
    வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    இது தொடர்பாக வெளியிடப்பட்ட செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 14 லட்சத்து 32 ஆயிரத்து 924 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீ்ட்புப் பணிகளுக்காக 600 படகுகள் பயன்படுத்தப்பட்டன. 5 ஆயிரத்து 554 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 85 லட்சத்து 98 ஆயிரத்து 280 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
    மேலும், 24 ஆயிரத்து 220 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 20 லட்சத்து 17 ஆயிரத்து 244 பேர் பயன்பெற்றுள்ளனர். ஆயிரத்து 536 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 7 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண மையங்களில் 453 டன் பால் பவுடர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    19,500 பேரை மீட்ட ராணுவம்
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை 19,500 பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர் என்று தென்பிராந்திய ராணுவ அதிகாரி கர்னல் ஆன்டனி கிராஸி தெரிவித்தார்.
    இது தொடர்பாக அவர் கூறுகையில், ''இதுவரை 19,500 பேரை ராணுவம் மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் படகுகள், ராணுவ வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டனர். 60 ஆயிரம் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு ராணுவத்தினர் விநியோகம் செய்துள்ளனர்.
    நிவாரண உதவி தேவைப்படுவோர் நேரிடையாக ராணுவ அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இதற்காக 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது'' என்று கர்னல் ஆன்டனி தெரிவித்துள்ளார்.
    தூய்மைப் பணி
    மாநகராட்சியில் ஏற்கெனவே 22 ஆயிரத்து 500 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கூடுதலாக பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 ஆயிரத்து 500 பேர் மூலம் குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
    சென்ட்ரல், எழும்பூரில் ரயில் சேவை தொடக்கம்
    (எழும்பூரில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. படம்: ஆர்.ரகு)
    சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
    மழை வெள்ள பாதிப்பு காரணமாக, கடந்த கடந்த 3-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன.தற்போது குறைந்த அளவில் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் ரயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
    ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சென்னை வருகை
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறார்.
    சென்னையில் வடசென்னை, தென் சென்னை உட்பட சில பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.
    கடலூரில் 350 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது
    இன்று பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் நீர் புகுந்துள்ளது. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேடான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    பெருமாள் ஏரியும் நிரம்பி வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளாற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. கடலூரில் அனைத்து நகர்களும் தண்ணீரில் மிதக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வருவதால் குடியிருப்புகளில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடந்து கனமழை பெய்தால் கடலூர் மாவட்டமே வெள்ளநீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    காட்பாடி அடுத்த பனமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பகுதியில் அனுப்பேரி ஏரி உள்ளது. தொடர் மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இன்று மதியம் ஏரிக் கரை வலுவிழந்து சரிந்தது.
    இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ளம், அருகே உள்ள வீடுகளில் புகுந்தது. ஏரிக் கரை அருகில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிய அதிகாரிகள், பனமடங்கி, காலாம்பட்டு, செஞ்சி ஆகிய 3 ஊராட்சிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    வானிலை முன்னறிவிப்பு:
    தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.| முழு விவரம்: வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு\
    சென்னையில் திங்கள்கிழமை 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
    சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் ரயில்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து நாளை (7-ம் தேதி) புறப்படும் 10 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றது. அதன் விவரம்:
    சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மும்பை சிஎஸ்டி மெயில் (11028), மும்பை எக்ஸ்பிரஸ் (11042), புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் சேரன் எக்ஸ்பிரஸ் (12673), ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842), பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (12852), கொல்லம் எக்ஸ்பிரஸ் (06124).
    சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் (11063), தூத்துக்குடி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16130), ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22640) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
    the hindu
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிச.6 செய்திப் பதிவுகள்: மழையை மீறிய நிவாரணப் பணிகளும் அடுத்த 24 மணி நேர நிலவரமும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top