எம்.எப்.எம்.பஸீர் -
அது கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை. குற்றப்
புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவின் வழி
நடத்தலில் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு
பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா தலைமையிலான
விசேட பொலிஸ் குழு ஒரு அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்தது. ஆம்,
இராணுவ புலனாய்வுப் பிரிவின் மிக முக்கிய அதிகாரிகளில் ஒருவர் என
கருதப்பட்ட சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியான பிரேமானந்த உடலாகம
எனும் அதிகாரியின் கைது நடவடிக்கையே அது. தேசிய ரீதியில்
மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய
படுகொலைகளில் ஒன்றான சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விவகாரம் தொடர்பிலேயே இந்த கைது
இடம்பெற்றது.
கடந்த 2009 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கல்கிசை பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலயத்தில், தனது காரில்
அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது லசந்த விக்ரமதுங்க
அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் மிக மோசமாக படுகொலை
செய்யப்பட்டார். இதனையடுத்து இது தொடர்பில் கல்கிசை பொலிஸார்,
மிரிஹான விசேட விசாரணைப் பிரிவினர் ஆகியோரின் கீழ் ஆரம்பக்கட்ட
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, அப்போதைய பொலிஸ் மா அதிபர் ஜயந்த
விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் பயங்கரவாத
புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த படுகொலை
விவகாரத்தில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு முன்னேற்றங்கள்
ஏற்படாத நிலையில், கடந்த 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத்
தொடர்ந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனினால் லசந்த
படுகொலை விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு 2015 பெப்ரவரி
மாதம் குற்றப் புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவிடம்
கையளிக்கப்பட்டது.
அதன்படி 2015, பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் இது
குறித்த விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி
பொலிஸ் அத்தியட்சகர் திசேரா தலைமையிலான பொலிஸ் குழுவிடம்
கையளிக்கப்பட்டது. இந்த சிறப்புக் குழுவின் சிறப்பு விசாரணை
அதிகாரியாக அல்லது தலைமை விசாரணை அதிகாரியாக, வெள்ளை வேன்
விவகாரம், வித்தியா படுகொலை விவகாரம், வஸீம் தாஜுதீன் படுகொலை
விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பேசப்பட்ட குற்றங்கள் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான
விசாரணை அதிகாரியான குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை
தொடர்பிலான விசாரணையறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்
நிஸாந்த சில்வா நியமிக்கப்பட்டார். அவரின் கீழ் மற்றொரு பொலிஸ்
பரிசோதகரான சுதத் உள்ளிட்ட சிறப்புக் குழுவொன்றும் இது குறித்த
விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களாக
முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வு
பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு முதல் சந்தேக நபரை கடந்த 15 ஆம் திகதி
இரவு 11.00 மணியளவில் கைது செய்தது.
குற்றப் புலனாய்வு பிரிவு இக்கொலை தொடர்பிலான
விசாரணைகளை சுமார் 6 ஆண்டுகளின் பின்னர் பொறுப்பேற்ற போது, முதலில்
இப்படுகொலை தொடர்பில் விசாரணை செய்த கல்கிசை, மிரிஹான மற்றும்
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கைகளை தமது பொறுப்பில்
எடுத்து, அதிலிருந்தே விசாரணைகளை தொடங்கியிருந்தனர். அதனால்
விசாரணையின் ஆரம்பத்திலேயே, லசந்த கொலை தொடர்பில் முன்னைய
விசாரணையாளர்கள் கிரமமான விசாரணை ஒன்றினை
முன்னெடுத்திருக்கவில்லை என்ற உண்மையை புலனாய்வுப் பிரிவினரால்
வெளிப்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தது. அத்துடன் லசந்த கொலை
செய்யப்படும் போது அவரது கையில் இருந்ததாகக் கூறப்படும் குறிப்புப்
புத்தகம் தொடர்பிலான தகவலும் அதன் போதே குற்றப் புலனாய்வுப்
பிரிவுக்கு கிடைத்தது. எனினும் இன்று வரை அந்த குறிப்புப் புத்தகம்
காணாமல் போயுள்ளதை வெளிப்படுத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் அந்த
குறிப்புப் புத்தகம் பொலிஸாரால் மீட்கப்பட்ட பின்னரேயே காணாமல்
போயுள்ளமையும் அதில் படுகொலையுடன் தொடர்புடைய இரகசியம் ஏதும்
இருக்கலாம் எனவும் தகவல்களை வெளிப்படுத்தினர்.
அதன் பலனாக அப்போது கல்கிசை வலயத்துக்கு பொறுப்பாக
இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி, சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, பின்னாளில் இந்த படுகொலை
தொடர்பில் விசாரணை செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு
பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரா வாகிஸ்ட, உதவி பொலிஸ்
அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் உள்ளிட்டோர் குற்றப் புலனாய்வுப்
பிரிவின் சிறப்பு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்த உயர் பொலிஸ் அதிகாரிகள்
வரிசையானது நேற்று வரை இரு முன்னாள் பொலிஸ் மா அதிபர்களை கூட விசாரணை
வலயத்துக்குள் வைக்குமளவுக்கு நீண்டது. அதாவது கொலை இடம்பெற்ற
போது பொலிஸ் மா அதிபராக இருந்த ஜயந்த விக்ரமரத்ன, பின்னர்
பெரும்பாலான லசந்த கொலை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட
காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபராக இருந்த மஹிந்த பாலசூரிய ஆகியோரே
இவ்வாறு விசாரணை வலயத்துக்குள் உள்ள முன்னாள் பொலிஸ் மா
அதிபர்களாவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு
ஒருபுறம், சரியாக விசாரணை செய்யாத பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுக்க மறுபுறம் அதில் இருந்து
வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய கொலையாளிகளை தேடி
வேட்டையையும் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.
அது குறித்த நீண்ட விசாரணைகளிலேயே குற்றப்
புலனாய்வுப் பிரிவினருக்கு மிக முக்கியமான தகவல்கள் சிலவற்றை
வெளிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட தகவல்களில் லசந்த
படுகொலை தொடர்பில் நேரில் கண்ட பிரதான சாட்சி ஒருவர் தொடர்பிலான
தகவல்களும் லசந்தவின் சாரதி குறித்த தகவல்களும் மிக
முக்கியமானதாக புலனாய்வுப் பிரிவினருக்கு அமைந்திருந்தது.
புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி
சாட்சியாளர்களுக்கு உச்ச பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிலையில்,
கொலையை நேரில் பார்த்த கண்கண்ட சாட்சியை நாம் நெவில் என மாற்றுப் பெயரில்
அவரது பாதுகாப்பு கருதி அடையாளப்படுத்துகின்றோம்.
நெவில், லசந்தவின் சாரதி ஆகியோரை விசாரணை செய்த குற்றப்
புலனாய்வு பிரிவினர் அவர்களது சாட்சியங்களின் பிரகாரம் பல முக்கிய
தகவல்களை வெளிப்படுத்தினர்.
லசந்தவின் சாரதியை விசாரணையாளர்கள் சிறப்பு
விசாரணைக்கு உட்படுத்திய போதே தற்போது கைதாகியுள்ள சார்ஜன்ட் மேஜர்
தர அதிகாரியான உடலாகம தொடர்பிலான தகவல்கள் முதலில் வெளிப்பட்டன.
அதாவது லசந்த படுகொலை செய்யப்பட்ட பின்னர் அது குறித்து பல இடங்களில்
லசந்தவின் சாரதி கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மிக் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் சண்டே லீடர்
பத்திரிகையில் வெளிப்படுத்தியதால் முன்னாள் பாதுகாப்புச்
செயலாளர் கோத்தபாயவே லசந்தவை கொலை செய்ததாக, வாய்வழிக் கதையாக
லசந்தவின் சாரதி சிலரிடம் கதைத்துள்ளார். இதனையடுத்தே ஒரு நாள்
திடீரென லசந்தவின் சாரதியை கடத்திச் சென்றுள்ள இந்த சார்ஜன்ட் மேஜர் தர
அதிகாரி அவரை அமானுஷ்யமான முறையில் சித்திரவதைச் செய்து கொலை
அச்சுறுத்தல் விடுத்து விசாரணை செய்துள்ளார்.
அதாவது இதற்கு பிறகு இக்கொலையுடன் கோத்தபாயவை
சம்பந்தப்படுத்தி யாரிடமாவது ஏதாவது கூறினால், வாழ்வதற்கு உயிர்
இருக்காது என்ற இறுதி எச்சரிக்கையின் பின்னரேயே லசந்தவின் சாரதி
அப்போது உயிர் பிச்சையளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவல்களை புலனாய்வுப் பிரிவு லசந்தவின் சாரதியை விசாரணை செய்த
போது வெளிப்படுத்திக் கொண்டது. அதனை பிரதான சாட்சியாக பதிவு செய்து
கொண்ட புலனாய்வுப் பிரிவு, நேரில் கண்ட சாட்சியான நெவிலின்
சாட்சியத்தையும் விசாரணை ஊடாக பதிவு செய்தது.
அதன்படி லசந்தவை கொலை செய்ய மோட்டார் சைக்கிளில் வந்த
அடையாளம் தெரியாத ஆயுததாரிகளில் ஒருவர் தான் அணிந்திருந்த முகத்தை
முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தின் வைசரை உயர்த்தி லசந்தவை
எச்சரிக்கும் விதமாக பார்த்ததைக் கண்டுள்ள நெவில் அது குறித்து
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவலளித்தார்.
இந்த இரு சாட்சியங்கள் மற்றும் சில தகவல்களை வைத்து
முதல் வேலையாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் படுகொலையாளிகள் என
சந்தேகிக்கப்படும் நபர்களின் உருவத்தை வரைந்தனர். அந்தப்படத்தை
ஊடகங்களிலும் பிரசுரித்து அவர்கள் தொடர்பில் தகவல்களை பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ஊடாக அவர்கள் கோரினர். அதன் வெளிப்பாடாக சில தகவல்கள்
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்திருந்தன.
இவ்வாறானதோர் பின்னணியிலேயே லசந்தவின் சாரதியை
கடத்திச் சென்று சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் சார்ஜன்ட் மேஜர்
தர அதிகாரியான உடலாகமவை லசந்த கொலை தொடர்பில் முதல் சந்தேகநபராக
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
15 ஆம் திகதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட இந்த சார்ஜன்ட்
தர அதிகாரியை மறு நாள் 16 ஆம் திகதி கல்கிசை நீதிவான் மொஹமட் சஹாப்தீன்
முன்னிலையில் ஆஜர் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரை 24 மணி
நேரம் தடுப்புக் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணைகளின்
போது பல்வேறு தகவல்களை குற்றப் புலனாய்வு பிரிவினர்
வெளிப்படுத்திக்கொண்டனர்.
லசந்த படுகொலை செய்யப்பட்ட பின்னணி தொடர்பில் இதன்போது
தேடிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொலையாளிகள் மிகக் கொடூரமாக
படுகொலையை அரங்கேற்றியுள்ளதை கண்டறிந்தனர். துப்பாக்கிப்
பிரயோகத்துக்கு மேலதிகமாக கூரிய ஆயுதம் ஒன்றால் லசந்தவின்
தலைப்பகுதியைக் குத்தியுள்ள சந்தேக நபர்கள் அல்லது கொலையாளிகள்
அதனூடாக மூளையை குதறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
இத்தகைய கொடூரமான செயல் பட்டப்பகலில் அதியுயர் பாதுகாப்பு
வலயத்தில் எப்படி சாத்தியமானது என்பதே குற்றப் புலனாய்வுப்
பிரிவினர் முன்னிருந்த பாரிய சந்தேகமாகும்.
இந் நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்ட போது கைது செய்யப்பட்ட முதலாவது
சந்தேகநபரான சார்ஜன்ட் மேஜர் உடலாகமவிடம் லசந்த கொலை தொடர்பில்
பொலிஸார் துருவியுள்ளனர். இதன்போது படுகொலைக்கு என அல்லது
திட்டத்தை சரியாக நிறைவேற்றவென 5 சிம் அட்டைகள் சந்தேக நபர்களால்
பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்களையும் ஒருவரை
ஒருவர் அறியாத இரு குழுக்கள் நடவடிக்கைக்கு
பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் சந்தேகிக்கத்தக்க பல்வேறு
சான்றுகளை விசாரணையாளர்கள் தமது விசாரணைகளில்
வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள
சந்தேக நபரான உடலாகம, 2009 ஜனவரி 8 ஆம் திகதி லசந்த கொலை
செய்யப்பட்ட காலப்பகுதியில் கொஹுவலை பகுதியில் செயற்பட்ட இராணுவ
புலனாய்வுப் பிரிவின் முகாமிலேயே சேவையில் இருந்தார்.
அப்போது கொஹுவலை புலனாய்வு முகாமில் 3 புலனாய்வுப்
பிரிவு குழுக்கள் செயற்பட்டதாக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
கேர்ணல் பிரசன்னவின் கீழ் ஒரு குழுவும், மேஜர் அன்சாரின் கீழ் மற்றொரு
குழுவும் மற்றொன்று துரத்திச் செல்லும் அளவுக்கு பயிற்றப்பட்ட சிலரைக்
கொண்ட குழுவாகவும் செயற்பட்டுள்ளன. கேர்ணல் பிரசன்னவின் கீழ்
சுமார் 17 புலனாய்வு அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் சார்ஜன்ட்
மேஜர் உடலாகம, மேஜர் அன்சாரின் கீழ் செயற்பட்ட மிக முக்கிய அதிகாரி
எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பல்வேறு புலனாய்வு
இணையத்தளங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்து
வந்த கருணாவும் அவர் குழுவினரும் இராணுவ புலனாய்வுப் பிரிவுடன்
இணைந்து செயற்பட்டமை ஒன்றும் இரகசியம் கிடையாது. அப்படி இருக்கையில்
பிரிந்து வந்த கருணா குழுவில் இருந்தவர்கள் மேஜர் அன்சாரின் கீழ்
இருந்த பிரிவிலேயே கொஹுவலை புலனாய்வு முகாமில்
கடமையாற்றியுள்ளனர். அதிலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள
சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியான உடலாகமவே கருணா குழுவினருக்கு
பொறுப்பாக இருந்துள்ளார். அதற்கும் காரணம் இருக்கின்றது. மாத்தளையைச்
சேர்ந்த உடலாகம தமிழிலும் சரளமாக உரையாடும் ஆற்றலை
கொண்டிருந்ததாலோ என்னவோ இவ்வாறு
பொறுப்பளிக்கப்பட்டிருந்துள்ளார்.
இந்நிலையில் லசந்தவின் கொலை தொடர்பில்
பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள 5 டயலொக் சிம் அட்டைகள்
தொடர்பிலான விசாரணைகளில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு
வந்துள்ளன. மருதானையில் உள்ள ட்ரிபொலி முகாமில் உளவுப் பிரிவு
சாரதியாக கடமையாற்றிய கந்தகெதர பியவன்ச என்பவர் ஊடாகவே இந்த
சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவரின் நண்பர் எனக்
கூறப்படும் நுவரெலியாவைச் சேர்ந்த தமிழரான கராஜ் உரிமையாளர் பிச்சை
என்பவரின் அடையாள அட்டையை களவாக பெற்றே இவர் அந்த சிம் அட்டைகளைக்
கொள்வனவு செய்துள்ளார்.
உண்மையில் கடந்த அரசின் காலப்பகுதியில் பயங்கரவாத
புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் லசந்தவின் கொலை
தொடர்பில் பியவன்சவையும், பிச்சையையும் பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களில் பிச்சை விளக்கமறியலிலேயே உயிரிழந்தும் விட்டார். இந்
நிலையில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக பியவன்சவும்
விடுவிக்கப்பட்டார். அப்படி இருக்கையில் இந்த தகவல்கள் அப்போதே
வெளிப்பட்டிருக்க வேண்டும். எனினும் இந்த சிம் அட்டைகளை
பயன்படுத்தியவர்கள் உள்ளிட்ட மேலதிக விசாரணைகள் அப்போது
நடத்தப்பட்டதாக தெரியவில்லை.
எனினும் தற்போதைய விசாரணைகளில் குறித்த 5 சிம்
அட்டைகளும் லசந்தவின் கொலைகளுக்கு மட்டுமே
பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
லசந்தவின் படுகொலையானது மிகத் திட்டமிட்டு
செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்த விசாரணைகளை மிக வெற்றிகரமாக மிக
சூட்சுமமாக குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். அதனால்
விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பல தகவல்களை எழுதுவது விசாரணைகளுக்கு
பாதிப்பாகக் கூட அமையலாம். எனினும் பல்வேறு அறிவியல் ரீதியிலான தடயங்கள்,
சான்றுகள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையிலேயே தற்போதைய சந்தேகநபரின்
கைதினை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
எனவே தான் கடந்த 27 ஆம் திகதி கல்கிசை நீதிவான் நீதிமன்றில்
முன்னெடுக்கப்பட்ட அடையாள அணிவகுப்பில் கூட லசந்தவின் சாரதி, கைதான
உடலாகமவை தன்னை சித்திரவதை செய்தவர் என அடையாளம் கண்டுள்ளார். அத்துடன்
நேரில் கண்ட சாட்சி நெவிலின் அடையாள அணிவகுப்புக்காக சந்தேக நபரான உடலாகம
எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி மன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
எது எப்படியோ இதுவரை மறைக்கப்பட்ட லசந்த படுகொலை விவகாரம்
தற்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. எனவே மிக விரைவில் லசந்தவின்
படுகொலையாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படல் வேண்டும். தற்போது
குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு இடையூறு
ஏற்படுத்தும் வகையில் யாரும் செயற்படக் கூடாது. மாற்றமாக சாட்சியங்கள்
திட்டமிட்டு அழிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வரும் சூழலில் மிக
சிரமங்களுக்கு மத்தியில் இந்த படுகொலை விவகாரத்தின் மர்மங்களை துலக்கி
வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவுக்கு பக்க பலமாக அனைவரும்
செயற்பட வேண்டும்.
வீரகேசாி 30.07.2016 -
0 comments:
Post a Comment