-நேற்றைய விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கம்-
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் எனப்படும் முகம் உட்பட உடலை
முழுமையாக மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்க வேண்டும் எனும் புலனாய்வுப்
பிரவினரின் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாகவே
நிராகரித்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திலேயே இந்த யோசனை புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியால் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும் முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்ளவோ
அவற்றை நடைமுறைப்படுத்தவோ முடியாது என்பதை பிரதமர் தேசிய பாதுகாப்பு
கவுன்சில் கூட்டத்தில் தெள்ளத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
புர்கா அல்லது நிகாப் ஆடையானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக
அமைந்துள்ளதாக இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கப்படவில்லை.
கண்டியில் வங்கிக் கொள்ளைக்கு முயன்ற சந்தர்ப்பத்தை தவிர, பெருவாரியான
முறையில் குறித்த ஆடையை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதாக எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் பதிவாகியிருக்கவில்லை.
அவ்வாறான நிலையில் புலனாய்வுப் பிரிவினர் இந்த ஆடையை தடை செய்ய வேண்டும்
எனக் கோரியமையானது ஏதேனும் அரசியல் உள்நோக்கம் கொண்டதா எனும் சந்தேகத்தை
தோற்றுவித்துள்ளது.
மேற்கில் பாரிய தீவிரவாத அச்சுறுத்தல்களைச் சந்தித்துள்ள நாடுகள் கூட
புர்கா, நிகாப் ஆடைகளுக்கு தடைவிதிக்காத நிலையில், இலங்கையில் கடந்த போர்
காலத்தில் கூட இந்த ஆடைகள் அணிவதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அவசர
அவசரமாக இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என புலனாய்வு
தரப்பினர் வலியுறுத்துவதானது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி இந்த ஆடைக்குத் தடை விதித்தால் அதன்
மூலம் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களை திசை திருப்பி அதன்
பிரதிபலிப்பை எதிர்க் கட்சிகள் தேர்தல்களில் அறுவடை செய்யலாம் எனும்
நோக்கமும் இதன் பின்னணியில் இருக்கக் கூடும் எனும் சந்தேகம் எழுகிறது.
எனினும் இந்த யோசனையை பரிசீலனைக்குக் கூட எடுக்காது எடுத்த எடுப்பிலேயே
பிரதமர் நிராகரித்துள்ளமையானது அவர் இலங்கை முஸ்லிம்களுக்குச் செய்துள்ள
கைமாறே அன்றி வேறில்லை எனலாம்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் தமது ஐக்கிய
தேசிய முன்னணிக்கு அளித்த பலத்த ஆதரவைக் கருத்திற் கொண்டும் அந்த ஆதரவை
குலைத்து முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதிருக்கும் நம்பிக்கையை
கேள்விக்குட்படுத்தவும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்றும்
பலரும் குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.
எது எப்படியிருப்பினும் இந்த விடயத்தில் பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிதானமான நிலைப்பாடு பாராட்டுக்குரியதாகும்.
எனினும் புர்கா, நிகாப் ஆடை விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு கடப்பாடு உண்டென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த ஆடை தொடர்பான தெளிவான இஸ்லாமிய நிலைப்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெளிவுபடுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாரார் இந்த ஆடைக்கு ஆதரவாகவும் மறுசாரார்
எதிராகவும் மக்கள் மத்தியில் கருத்தபிப்பிராயத்தை
தோற்றுவித்துவருகின்றனர்.
நடைமுறையில் இந்த ஆடை பல்வேறு சர்ச்சைகளுக்கும் தப்பபிப்பிராயத்திற்கும்
வித்திட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம். முஸ்லிம்களுக்கு எதிரான
கடும்போக்கு சக்திகள் ஏற்கனவே இந்த ஆடை விடயத்தை தூக்கிப்பிடித்துள்ளன.
எனவேதான் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆடை விவகாரம் தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

0 comments:
Post a Comment