• Latest News

    September 07, 2016

    கல்முனை மாநகர சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பும் ஆர்பாட்ட பேரணியும்

    (அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலீத்தீன்)
    கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது நகரத்தில் வர்த்தகர் ஒருவரினால்  அச்சுறுத்தப்பட்டதைக் கண்டித்தும் அவரைக் கைது செய்யக் கோரியும் மாநகர சபை ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை முழுமையான பணிப்பகிஷ்ரிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்ட பேரணியையும் மேற்கொண்டனர் .
    முன்னதாக மாநகர சபை ஊழியர்கள் அனைவரும் மாநகர சபையில் இருந்து கல்முனை பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதன்போது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ அப்துல் கப்பார், அங்கு வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஆணையாளரை அச்சுறுத்தியவரை கைது செய்வதற்கு பொலிஸ் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் தெரிவித்ததுடன்  எவ்வாறாயினும் இன்று (05) (நேற்று திங்கடகிழமை) மாலை 4.00 மணிக்குள் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
    இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊழியர்கள் அனைவரும் கல்முனை நகரை சுற்றி பேரணியாக சென்று கல்முனை மாநகர சபைக்கு முன்பாக அமர்ந்து சம்பவத்தைக் கண்டித்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனால் மாநகர சபையின் அனைத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்ததுடன் மாநகர சபைக்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் குப்பை அகற்றும் சேவையும் இடம்பெறவில்லை. அத்துடன் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை வளாகத்தில் அமைந்திருப்பதால் அதன் பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தன..
    கடந்த சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது நகருக்கு சென்ற ஆணையாளர், மோட்டார் விற்பனை செய்யும் கடைக்கு முன்பாக வீதியோர நடைபாதையில், விற்பனைக்கான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதனை உள்ளே நகர்த்துமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர், ஆணையாளரை மோசமான வார்த்தைகளினால் தூற்றி, அச்சுறுத்தியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டதாகவும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பும் ஆர்பாட்ட பேரணியும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top