தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதேபோல், முஸ்லிம் மக்களும் தமக்குரிய தீர்வை கோரி வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்களின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவானது தற்போது அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர் கொண்ட இந்த வழிநடத்தல் குழுவானது
இவ்விடயங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட தீர்மானித்திருக்கின்றது.
இந்த
நிலையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய
அரசியல் தீர்வை பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் தற்போது
வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல்
குழுவில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்,
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் முற்போக்கு
முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ்
தேவானந்தா, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு
சிறுபான்மையின மக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு தொடர்பில் யோசனைகளை
முன்வைக்கும் கடப்பாடு இருக்கின்றது.
தற்போதைய நிலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டிய அவசியம் தோன்றியிருக்கின்றது.
வடக்கு,
கிழக்கில் எத்தகைய தீர்வு ஏற்படவேண்டுமானாலும், அது தமிழ், முஸ்லிம்
மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டியது இன்றியமையாததாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இதேபோல், முஸ்லிம் மக்களும் தமக்குரிய தீர்வை கோரி வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்களின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தமிழ் மக்களோ இணைந்த வடக்கு, கிழக்கிலேயே தமக்கான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே அரசியல் தீர்வு விடயத்தில் முதலில் இணக்கப்பாடு ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது.
இவ்விடயம்
குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பல
தடவைகள் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ள போதிலும் உறுதியான முடிவுகள்
எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே
அரசியல் தீர்வு விடயத்தில் இணக்கப்பாடொன்று ஏற்படாவிடின் அரசியல் யாப்பு
மாற்றத்தின் போது உரிய தீர்வை காண்பது என்பது கானல் நீராக மாறிவிடும்.
தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கான அதிகாரங்களை எவ்வாறு
அதிகரிப்பது என்பது தொடர்பிலும் ஆளுநரின் அதிகாரங்களை குறைப்பது பற்றியும்
சமஷ்டியோ அல்லது ஒற்றையாட்சியோ இல்லாதவகையில் அதிகாரங்களை பகிர்வது
தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிகின்றது.
அரசியல் யாப்பு சபையின்
வழிநடத்தல் குழுவில் ஆராயப்படும் சில விடயங்கள் தொடர்பில் முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சில தகவல்களை
வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அதிகாரப் பகிர்வு குறித்த அத்தியாயம் தொடர்பில் தற்போது நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
மாகாணசபை
முறைமையில் காணப்படும் ஒத்தியங்கு நிரலை நீக்குவது தொடர்பிலும் மத்திய
அரசு மற்றும் மாகாண அரசாங்கங்களின் அதிகாரங்களை மட்டும் வைத்திருக்கும்
இரண்டு நிரல்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
மாகாணங்களின்
ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது குறித்தும் ஆராயப்படுகின்றது என்று அவர்
கூறியுள்ளார்.இந்த நாட்டின் ஆட்சி முறைமை தொடர்பாகவும் சில முரண்பாடுகள்
தொடர்கின்றன.
ஒற்றையாட்சி, சமஷ்டி குறித்த விடயங்கள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
அந்த விடயத்திலும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. கட்சித் தலைவர்கள் மத்தியில் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இந்த
இரண்டு விடயங்களையும் கடந்து பிரிபடாத ஒரு நாடு என்ற பதத்தை பாவித்து
சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற பதங்களைப் பயன்படுத்தாமல் கூடுதலான அதிகாரங்களை
பரவலாக்க முடியும்.
இருந்தாலும் ஒற்றையாட்சி என்ற பதத்தை நீக்க
முடியாது என்ற நிலைப்பாட்டில் ஒரு சில தரப்புக்கள் பிடிவாதமாக நிற்கின்றன
என்றும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதனைவிட
வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாகவும் வேண்டுமென்று முஸ்லிம் மக்களை
தூண்டிவிடும் வகையிலான விபரீதக் கருத்துக்களை ஒரு சில தரப்புக்கள்
ஏற்படுத்தி வருகின்றன.
அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலைக்கு வந்து விட்ட ஒரு சிலர் இந்த விடயங்களை தற்போது தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகின்றனர்.
ஒன்பது
மாகாணங்கள் குறித்த விடயத்தில் அரசியல் யாப்பு பேரவையின் வழிநடத்தல்
குழுவிலுள்ள கட்சித் தலைவர்கள் மத்தியில் தீர்மானங்கள்
எட்டப்பட்டிருக்கின்றன.
மாகாணங்கள் இணைவது தொடர்பான செயற்பாடுகள் அரசியலமைப்பில் ஏற்கனவே நிபந்தனைக்குட்பட்டவையாகும்.
இரண்டு
மாகாணங்களுக்கிடையில் ஒரு சில இணக்கப்பாடுகளோடு சில விடயங்களில் மட்டும்
ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பிலும் பரிசீலிக்கலாம் எனவும் அமைச்சர்
தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இந்த
கருத்துக்களிலிருந்து அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவானது
அதிகாரப்பகிர்வு தொடர்பான சில விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருப்பது
புலனாகின்றது.
ஆனால், சகல தரப்பினரையும் சமாளிக்கும் வகையில்
அரசியல் தீர்வுக்கான நகர்வு முன்னெடுக்கப்படுமானால் அது எந்தளவிற்கு
சிறுபான்மையின மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில்
அமையும் என்ற கேள்வி தற்போது எழுகின்றது.
உண்மையிலேயே சமஷ்டி என்ற
அடிப்படையில் தீர்வு காண முயன்றால் அதற்கு தெற்கில் கடும் எதிர்ப்பு
கிளம்பும் என்ற அச்சம் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது.
இதேபோல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தை தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இதனால்தான்
இந்த சொற்பதங்களை விடுத்து அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் அரசியல் யாப்பு
சபையின் வழிநடத்தல் குழு ஆராய்வதாக தெரிகின்றது.
அரசியல் யாப்பு
பேரவையின் வழிநடத்தல் குழுவில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராயப்படும்
இவ்வேளையில் வடக்கு, கிழக்கை இணைத்து நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான
தீர்வு தயாரிக்கப்பட்டு விட்டது.
அமெரிக்காவின் வழிநடத்தலுடன்
இத்தகைய தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது என்று பொது எதிரணியில் அங்கம்
வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியும் தூய்மையான ஹெலஉறுமயவும் ஏற்கனவே
குற்றம் சாட்டி வருகின்றன.
இவ்வாறு இனவாத சக்திகள் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக தற்போதே கோஷமெழுப்ப ஆரம்பித்து விட்டன.
தமிழ்
பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலான அரசியல் தீர்வு
தொடர்பில் இன்னமும் முழுமையாக பேசப்படாத நிலையில் நாட்டைப் பிரிப்பதற்கான
தீர்வுத்திட்டம் தயாராகி விட்டதாக இனவாத சக்திகள் கூக்குரலிடுகின்றன.
இவ்வாறான
நிலையில் எவ்வாறு தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு
சாத்தியமாகும் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கின்றது.
அரசியல்
யாப்பு சபையானது சிறுபான்மையின மக்களை ஓரளவாவது திருப்திப்படுத்தும்
அரசியல் தீர்வை காணுமிடத்து அது சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரத்தை பெறுமா
என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
மொத்தத்தில் அரசியலமைப்பு திருத்தத்தின் போது அரசியல் தீர்வு காண முடியுமா என்ற சந்தேகம் தற்போது மேலெழுகின்றது.
இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் தீர்வைக் காண அர்ப்பணிப்புடன் முயற்சிக்க வேண்டும்.
இல்லையேல் இந்த விவகாரமானது வெறும் கானல் நீராக மாறிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ்வின் -
0 comments:
Post a Comment