• Latest News

    September 29, 2016

    முஸ்லிம்களின் அடையாளம் மொழி சார்பானதா?

    மொஹமட் பாதுஷா  -
    அரசியல்வாதியோ, சமூக சிந்தனையாளனோ அல்லது செயற்பாட்டாளனோ ஒரு சமூகம் சார்பாகப் பேசுகின்ற வேளையில் இனவாதியாக, அடிப்படைவாதியாக, பக்கச்சார்பானவராக நோக்கப்படுவதற்கான நிகழ்தகவுகள் நிறையவே இருக்கின்றன. தனது சமூகத்துக்காக குரல் கொடுப்பதற்கும், மற்றைய சமூகங்களின் உணர்வைக் கிளறி, எதிர்வினையை எதிர்கொள்வதற்கும் இடையில் சிறியதொரு கோடுதான் இருக்கின்றது. அரசியல்வாதிகள் இந்தக் கோட்டை அவ்வப்போது தாண்டிவிடுவதை தமிழ், முஸ்லிம் அரசியல் பரப்பில் நாம் காண்கின்றோம். 
    அண்மைக்காலமாக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் பிரதம நீதியரசருமான விக்கினேஸ்வரன் தெரிவித்து வரும் கருத்துக்கள் சிங்கள சக்திகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழலில், முஸ்லிம்கள் தொடர்பில் அவர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள கருத்து ஒருவித மனக்கிலேசத்தை கிளறிவிட்டிருக்கின்றது. அத்துடன் இது சமூக வலைத்தளங்கள் போன்ற நவீன ஊடகங்களில் எதிர்வினைச் செயற்பாட்டிற்கும் காரணமாகியிருக்கின்றது. 
    மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், “முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழிச் சார்புள்ளது. என்றாலும் தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது எனக் கூறிக் கொள்கின்றனர்” என்ற தொனியில் பேசியுள்ளார். ஊடகங்களில் வெளியாகியிருப்பது முதலமைச்சரின் அச்சொட்டான உரையென்றால், அவர் சொல்வதில் 50 வீத யதார்த்தம் இருக்கின்றது. அதாவது இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்களில் கணிசமானோரின் அடையாளம் தமிழ் மொழியைச் சார்ந்தே இருக்கின்றது என்பதாகும். ஆனால் தமிழ் மொழியை சார்ந்தாக மட்டுமே முஸ்லிம்களின் அடையாளம் இருப்பதற்கும் மேற்குறிப்பிட்ட நிலைமைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. அதேபோன்று வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழி பேசுகின்றனர். எனவே அவர்கள் தங்களது அடையாளமாக சிங்கள மொழியை எடுத்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுகின்றது. 
    அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில், “எந்தவொரு இனமாயினும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலட்சியம், அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பது அவர்களின் தாய் மொழிதான். மொழியே அவ்வினங்களின் பாரம்பரியமாக விளங்கும். முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது என்றும் மொழி சார்ந்தது அல்ல என்றும் கூறி வருகின்றனர். மொழியைக் கற்றுக் கொண்ட பின்னரே மதத்தை கற்றுக் கொண்டோம். இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்கள் அடிப்படையில் தமிழ்மொழிச் சார்புள்ளவர்கள்” என்று சொல்லியிருக்கின்றார். இந்த உரையின் முன்பகுதியில் முதலமைச்சர் கூறிய கருத்துக்கள் பொதுவில் மிகவும் சரியானவையும் நிதர்சனமானவையும் ஆகும். 
    ஆனாலும், ‘முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது என்றும் மொழிசார்ந்தது அல்ல’ என்று கூறிவருவதாக ஒருவித விமர்சனக் கோணத்தில் முதலமைச்சர் கூறியுள்ள கருத்து ஆய்வுக்குரியது. நல்லதொரு கருத்தைச் சொல்ல வந்த முதலமைச்சரின் வார்த்தைகள் இடறியிருப்பதாகவும் இதைக் கருத முடியும்.
    சரித்திரக் குறிப்புகளின்படி, தமிழ் மொழியை வளர்த்ததில் தமிழர்களுக்கு சமமான வகிபாகத்தை முஸ்லிம்களும் கொண்டிருக்கின்றார்கள். இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள் தமிழைக் கொண்டாடி இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்குள் ஏகப்பட்ட தமிழ்ப் பண்டிதர்களும் புலவர்களும் தமிழறிஞர்களும் இருந்திருக்கின்றார்கள். தமிழ் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட பலர் பின்னாளில் தமிழ்ப் புலமை பெற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டதைப் போல கலை, கலாசாரம் தொடக்கம் முஸ்லிம்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் இதுபோன்ற கட்டுரைகள் கூட தமிழை நம்பியே இருக்கின்றன. இதையாரும் மறுக்க முடியாது. தமிழைப் புறந்தள்ளி முஸ்லிம்களால் வாழ முடியாது என்பது அடிப்படை உண்மையாகும். ஆனால் ‘அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் தமது அடையாளத்தை மதம் சார்பானது எனக் காட்டுகின்றனர்’ என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 
    மொழி என்பது, ஒரு ஆட்புல எல்லையில் வாழ்கின்ற மக்கள் தொடர்பாடலுக்குப் பயன்படுத்துகின்ற ஓர் ஊடகமாக காணப்படுகின்றது. மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், சமூகநிலை, கலை, வரலாறு, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள், எண்ணங்கள் போன்ற வாழ்வியல் கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றது. முற்காலத்தில் மொழிகளின் இடத்தை சைகைகள்தான் நிரப்பியிருந்தன என்பதை நாமறிவோம். அங்கிருந்துதான் நாகரிகமும் வரலாறும் கூர்ப்படைந்தது என்பதும் நாமறியாத விடயமல்ல. 
    முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் மதம் சார்ந்த மொழி அரபு ஆகும். எனவே அரபுமொழியை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் மார்க்கத்தை கற்றனர். ஆரம்பகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் சரிக்குச் சமமாக அரபு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதன்மூலம் தமது அடையாளத்தை மொழி ரீதியாகவும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்றும் சில அறிஞர்கள் விரும்பினர். ஆனால், தமிழர்களும் சிங்களவர்களும் வாழுகின்ற நாடொன்றில் முஸ்லிம்கள் அரபைக் கற்றுக்கொண்டால் பிறசமூகங்களுடன் பேசிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அத்தோடு மொழியின் அடிப்படைத் தேவை கூட நிவர்த்தி செய்யப்படாமல் போய்விடும் என்பன போன்ற யதார்த்த பூர்வமான காரணங்களால், முஸ்லிம்கள் தமிழ்பேசுபவர்களாக வடக்கு கிழக்கிலும், சிங்களம் பேசுபவர்களாக தென்பகுதியிலும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர் என்பதே வரலாறு.
    ஆனால், இனப்பிரச்சினை மூண்டதன் பின்னர் தமிழ் மொழியின் அடிப்படையில் தமிழர்களோடு சேர்த்து முஸ்லிம்கள் பொதுமைப்படுத்தப்பட்டனர். இது முஸ்லிம்களின் விருப்பத்தோடு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடல்ல என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ‘தமிழ் பேசும் சமூகங்கள்’ என்ற போர்வையில் முஸ்லிம்களையும் உள்வாங்கியதாக மேற்கொள்ளப்பட்ட தீர்வுத்திட்ட நகர்வுகளில் இருந்த ‘சூசகத்தன்மை’ அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்திலும் அதற்கு முன்-பின்னரான சில சமாதான ஒப்பந்தங்களிலும் இலங்கை முஸ்லிம்களை தனியொரு இனமாகக் காட்டி அவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்பதை சொல்லாமல், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குழுவினராக அல்லது தமிழ் பேசும் இன்னுமொரு சமூகமாக முஸ்லிம்கள் குறிப்பிடப்பட்டனர். அதன்மூலம் மொழி அடிப்படையில் முஸ்லிம்களும் தமிழர்களுடன் சேர்ந்தவர்களே (இஸ்லாமிய தமிழர்கள்) என்பது போன்ற தோற்றப்பாட்டை சர்வதேசமும், தமிழ் அரசியல்வாதிகளும் ஏற்படுத்த முனைந்தனர். அப்போதெல்லாம் முஸ்லிம் சமூக சிந்தனையாளர்கள், முஸ்லிம்களை தனியான ஓர் இன, மத அடையாளம் கொண்ட தனித்த இனக்குழுமமாக அடையாளப்படுத்துமாறு கோரி வந்ததையும் இங்கு மறந்துவிடலாகாது. 
    முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இன நல்லுறவுக்கு தமிழ் மொழியே மிகப் பெரும் பலமாக இருக்கின்றது. காலத்திற்கேற்ப தன்னை மெருகுபடுத்திக் கொண்ட ‘வாழும்மொழியான’ தமிழைத் தமிழர்களைப் போலவே இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களும் நேசிக்கின்றனர். அந்த வகையில், அவர்களது அடையாளம் தமிழ் சார்புள்ளது என்பதும் நியாயமான கருத்தே. அது வேறுவிடயம். 
    ஆயினும் முஸ்லிம்களின் அடையாளம் முழுமையாகத் தமிழை மட்டும் சார்ந்ததல்ல என்பதுடன் தமிழில் தங்கியிருக்கும் ஓர் அடையாளமும் அல்ல என்பது முக்கியமானது. ஆதலால், ‘அரசியலுக்காக முஸ்லிம்கள் தமது அடையாளம் மதம் சார்பானது என்று கூறுகின்றனர்’ எனக் கூறுவது விவாதத்துக்குரியதாகும். முஸ்லிம்கள் அரசியலுக்காக தமது அடையாளம் இஸ்லாமிய மதம் சார்பானது என்பதை வெளிப்படுத்தினாலும், அந்த காரணத்திற்காக மட்டுமே அவர்கள் மத ரீதியாக தம்மை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, கலை, கலாசாரம், நடை, உடை, பாவனை, வாழ்வியல் முறைமைகள், பண்பாடுகள், வழிபாடுகள் என்ன எல்லா விடயங்களிலும் மத ரீதியான அடையாளத்தை கொண்டிருக்கின்றனர் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். 
    ஆனால், தாம் ‘இஸ்லாமியர்கள்’ என்று மத ரீதியாக, அல்லது அரபுமொழியின் அடிப்படையில் தம்மை அடையாளப்படுத்துவதால் ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு விடும் என்று முஸ்லிம்கள் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் நாகரிக வளர்ச்சியும் சமூகமயமாக்கலும் வெளித்தோற்றத்தில் தமிழர்களை ஒத்த சமூகமாகவே முஸ்லிம்களை காட்டினாலும், அடிப்படையில் முஸ்லிம்களின் அடையாளம் என்பது மதம் சார்பானதே என்பதை மறந்துவிடக் கூடாது. பிட்டும் தேங்காய்ப்பூவும் போல் வாழ்கின்ற இரு சகோதர இனங்களிடையிலான பல பழக்க வழக்கங்கள் ஒன்றுக்கொன்று ஒத்ததாகவும், கணிதத்தில் உள்ள இடைவெட்டு போலவும் இருக்கலாம். ஆனால், இவ்விரு இனங்களுக்கும் தனித்தனி மதம்சார் பிரதான அடையாளங்கள் இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
    பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சகோதரர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவ்வாறு லண்டனில் வாழும் குடும்பம் ஆங்கிலத்தையே வெளியில் பேசுகின்றது. அங்கு பிறக்கும் குழந்தைகளின் தாய்மொழியும் தமிழாகவே இருக்கக் காண்கின்றோம். அவர்கள் அங்குதான் படிக்கின்றார்கள்; வளர்கின்றார்கள். இந்தக் குழந்தைகளுக்கு தமிழ் சரளமாகத் தெரியாது. அதற்காக அந்தச் சந்ததியினரின் ‘அடையாளம்’ ஆங்கில மொழிச் சார்பானது என்று கூற முடியுமா? அதுபோல அரபு நாடொன்றில் வசிக்கும் தமிழ் குடும்பத்துக்குப் பிறக்கும் குழந்தைகளின் அடையாளம் அரபு மொழி சார்பானது என்று யாராவது கூற முடியுமா? முடியவே முடியாது! லண்டனிலோ, கனடாவிலோ அல்லது அரபு தேசத்திலோ எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் பிரதான அடையாளம் என்பது உண்மையில் அவர்களது இனம், மதம் (தமிழர், இந்து) சார்ந்ததாகும். அவர்கள் பேசும் மொழி சார்ந்தது என்றோ, அரசியல் போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக அவர்கள் தமது அடையாளத்தை மதம் சார்பானதாக காட்டுகின்றார்கள் என்றோ யாரும் கருத்துரைக்க முடியாது. 
    சரி, முஸ்லிம்களும் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பொதுமைப்படுத்தலின் அடிப்படையில், அவர்களது அடையாளமும் ‘தமிழ் சார்ந்தது’ என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். முதலமைச்சர் சொல்வது போல, முஸ்லிம்களும் தமிழ்மொழி சார்பான அடையாளத்தை தாங்கியவர்களாக நிற்கும்போதே வடக்கில் இருந்து இரவோடிரவாக, உடுத்த உடையோடு விரட்டியடிக்கப்பட்டார்கள். தமிழ்பேசும் சமூகங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் போதே தமது மதக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்த போது பள்ளிகளுக்குள் சுடப்பட்டார்கள், வயல்களுக்குள் அறுவடை செய்யப்பட்டார்கள்.... இப்படி இன்னும் எத்தனையோ! அதுபோதாது என்று, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இனப்பிரச்சினைசார் ஒப்பந்தங்களில் முஸ்லிம்களின் தனித்துவம் புறக்கணிக்கப்பட்டு ‘தமிழ் பேசும் சமூகங்கள்’ என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டு ஒரு ‘சிறு குழுவை’ போல காட்டப்பட்டனர். முதலமைச்சர் சொல்வதைப் போல தமிழ் சார்பான அடையாளத்தை கொண்ட இன்னுமொரு இனக் குழுமத்தின் பிரச்சினைகள் இரண்டாந்தரமாக பார்க்கப்பட்டன என்பதை மறந்து விட முடியாது. 
    முஸ்லிம்கள் தம்மைத் தமிழ்மொழிச் சமூகமாக சொல்லிக் கொள்வதில் எந்த கௌரவப் பிரச்சினையும் இல்லை. ஆனபோதும், இன்றைய காலகட்டத்தில் மொழி சார்ந்த ஒரு பொதுவான அடையாளத்துக்குள் தம்மையும் உள்ளடக்குவதன் மூலம் தம்முடைய பிரச்சினைகளை, அபிலாஷைகளை தனியாக வெளிப்படுத்த முடியாது போய்விடும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர். இலங்கை முஸ்லிம்களில் கணிசமானோர் தமிழைப் பேசுகின்றனர் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தமது அடையாளத்தில் ஒரு கூறாக தமிழையும் கொண்டிருக்கின்றனரேயொழிய அது மட்டுமே அவர்களுக்குரிய அடையாளம் அல்ல. அதேபோல், அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்லாது எல்லா காரணங்களின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் மத ரீதியான ஓர் அடையாளத்தை கொண்டிருக்கின்றனர். 
    ஆகவே, இந்தப் ‘பொதுமைப்படுத்தல்’ தேவையில்லை. அதற்காகத் தமிழோடும் தமிழர்களோடும் முரண்பாடு என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, இந்து மதத்தை பின்பற்றுகின்ற தமிழர்களும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களும் இலங்கையில் தமிழ்பேசும் சமூகங்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு மொழிசார்ந்த அடையாளங்கள் பொதுவாக இருந்தாலும் அவற்றை எல்லாம் விட பிரதானமான அடையாளம் - மதம், இனம் சார்ந்ததாகும். வேறுவேறு மதக் கொள்கைகளை பின்பற்றும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில பொதுவான பிரச்சினைகளும், பலவேறுபட்ட பிரத்தியேகமான பிரச்சினைகளும் அபிலாஷைகளும் இருக்கின்றன என்பதை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் கருத்திற் கொள்ள வேண்டும். பரஸ்பரம் இரு பக்கத்தில் உள்ள அரசியல்வாதிகளும் மதத்தில் கைவைப்பதை தவிர்த்துக் கொண்டால், பிட்டும்-தேங்காய்ப்பூவும் உறவு இரண்டறக் கலந்திருக்கும்.   
    நன்றி  - தமிழ்மிர்ர் பத்திரிகை
    http://www.tamilmirror.lk/182564#sthash.xT8CSauF.dpuf

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் அடையாளம் மொழி சார்பானதா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top