• Latest News

    September 29, 2016

    வட, கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை - சுமந்திரனின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் பதிலடி

    வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆதரவு வழங்கி, ஏற்றுக் கொண்டிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்தானது உண்மைக்குப் புறம்பானது எனவும், தலைவர் அஷ்ரப் ஒருபோதும் வட,கிழக்கு இணைப்புக்கு ஆதரவளித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவருடன் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல் பயணத்தில் ஒன்றாக பயணித்த எனக்குத் தெட்டத் தெளிவாக தெரியும் எனவும் மு.கா. ஆரம்ப கால உறுப்பினரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
     
    “வடக்கு – கிழக்கு இணைப்பு அஷ்ரபால் ஏற்கப்பட்ட ஒன்றே!’’ எனும் தலைப்பில் பிரபல தேசியப் பத்திரிகையொன்றில் இன்று வியாழக்கிழமை முன்பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியாகியிருந்த இச்செய்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியதாவது:-
     
    வடக்கு – கிழக்கு மாகாணங்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் - பலாத்காரத்தினால் இலங்கை அரசின் பூரண அனுமதியின்றி இரவோடு இரவாக இணைக்கப்பட்ட ஒன்றாகும்.  ‘இணைந்த வடகிழக்கை பிரிப்பதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை; வடகிழக்கை பிரிக்கவே முடியாது’ என்ற நிலைப்பாடு - சூழல் இருந்த போது, வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு தனியான அதிகாரமுள்ள ஓர் முஸ்லிம் மாகாணம் வேண்டும் என்ற கோஷத்தை தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்கள். 

    அதில், கிழக்கிலே உள்ள முஸ்லிம் பிரதேசங்கள், வடக்கிலே உள்ள மன்னார் முசலி உள்ளிட்ட பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டு தனியான அதிகாரமுள்ள ஒரு முஸ்லிம் மாகாணமாகவே அது அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் இணைந்த வடகிழக்கில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தார். 

    தலைவர் அஷ்ரபுடன் 1989 ஆம் ஆண்டு முதல் நான் நாடாளுமன்றத்தில் இருந்தவன். 1987 ஆம் ஆண்டு தொடக்கம் நாம் இருவரும் மாகாண சபையிலும், வடகிழக்கு பிரச்சினை தொடர்பான சகல பேச்சுக்களிலும் கலந்து கொண்டுள்ளோம். ஆகவே, இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு அதிகாரமுள்ள தனி முஸ்லிம் மாகாணத்தை ஏற்றுக்கொள்கின்ற போது மாத்திரமே இணைந்த வடகிழக்குக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என பல்வேறு கோரிக்கைகளை நாம் முன்வைத்திருந்தோம்.
     
    அப்போதிருந்த அரசியல் சூழலில் வடகிழக்கு இணைக்கப்பட்டிருந்தது; மீண்டும் பிரிக்கவே முடியாது என்ற நிலையும் இருந்தது. வடகிழக்கு பிரச்சினைக்கு இது தான் நிரந்தர தீர்வு என்ற நிலை இருந்த போதே தலைவர் அஷ்ரபினால், ‘இணைந்த வடகிழக்கில் தனி முஸ்லிம் மாகாணம் வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தரப்பு ஆதரவளிக்குமானால் இணைந்த வடகிழக்கு தொடர்பான நிலைப்பாட்டுக்கு தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தார். 
     
    மாறாக, முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் இல்லாமல் ஒருபோதும் வடகிழக்கு இணைப்பை தலைவர் அஷ்ரப் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான நிபந்தனைகள் எதுவுமின்றி தலைவர்  வடகிழக்கு இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் அந்த ஒப்புதல் - உடன்படிக்கையினை உடனடியாக சுமந்திரன் எம்.பி. வெளியிட வேண்டும். ஏன் என்றால் தலைவர் கூறாத ஒரு விடயம் தொடர்பில் குறிப்பிடுவது அவர் மீது சுமத்தப்படும் அபாண்டமாகும். 
     
    வடகிழக்கு இணைப்புக்கு அஷ்ரப் இணங்கினார்; என்று பொய்யான விடயத்தை ஆதாரமற்ற விடயத்தை சுமந்திரன் கூறியுள்ளதன் மூலம் தலைவர் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை, அவரது தலைமைத்துவத்தின் மீது வைத்திருந்த விசுவாசத்தை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
     
     அத்துடன், அந்நிய சக்திகளுக்கும், ஏனைய சர்வதேச சக்திகளுக்கும் கட்டுப்பட்டு வாய்பேச முடியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று கூறுகின்ற சுய நல முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஆதரவாகவே சுமந்திரனின் கருத்தும் - செயற்பாடும் அமைந்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். -என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வட, கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை - சுமந்திரனின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் பதிலடி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top