• Latest News

    October 06, 2016

    வட,கிழக்கு பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்

    யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்;க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இப்பகுதிகளில் கைத்தொழில் துறையை ஊக்குவித்து தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 
    நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
    அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
    யுத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனியார் துறை முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்களை கடந்தும் அரச தொழிற்சாலைகள் முழுமையாக திறக்கப்படவும் இல்லை. இதனால் இப்பகுதியில் தொழில்வாய்ப்புக்கள் இல்லாத நிலைக் காணப்படுகின்றது. 
    இப்பகுதிகளில் ஏற்றுமதிக்கான மையங்கள், கைத்தொழில் வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, அதிக வறுமையானவர்கள் வாழும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இந்நிலை காணப்படுகின்றது. 
    ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்கின்றவர்களுக்கு சலுகை – வசதிகளை அரசு வழங்கி, ஊக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம்; வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். 
    அத்துடன், எமக்கு தேவையான அனேக பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது. எமது பொருளாதாரத்தை கைத்தொழில் - தொழில்நுட்பம்  அடிப்படையிலான பொருளாதாரமாக மாற்றாமல் எம்மால் முன்னேற முடியாது. 
    எமது நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் சர்வதேசத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேறிய காரணத்தினால்தான் அந்த நாட்டுடன் எட்கா உடனப்படிக்கையை கைச்சாத்திடுவது தொடர்பில் பேச்சு நடத்தி வருகின்றோம். இந்தியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பொருளாதார ரீதியில் முன்னணியில் உள்ள நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருகிறது. 
    எட்கா என்பது அரசியல் ரீதியாக செய்யப்படவிருக்கும் ஒப்பந்தம் அல்ல. எமது நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்காகவே இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள எதிர்பார்த்துள்ளோம். எனினும், இது குறித்து பிழையான கருத்துக்களை வெளியிடுவோர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தோடு ஏற்றுமதி தொடர்பில் பேசப்படும்போது மலையக வாழ் தோட்டத் தொழிலாளர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். 
    நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலையக தோட்ட மக்களின் பங்களிப்பு அளப்பரியது. தமக்கான பிரச்சினைகளை வலியுறுத்தி அவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். –என்றார். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வட,கிழக்கு பகுதிகளிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top