• Latest News

    November 04, 2016

    10 வருடம் சம்பளம் இல்லாது சவூதியில் இருந்த இலங்கைப்பெண் ; மொத்த சம்பளத்துடன் நாடு திரும்பினார்

    சவூதியில் பத்துவருடங்களாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு  பணியகம் அறிவித்துள்ளது. 
    இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    பெலிஅத்த பிரதேசத்தைச்சேர்ந்த நந்தா மனம்பெரே என்ற பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து கடந்த 2006ஆம் ஆண்டு வீட்டுப்பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அந்த நாள் முதல் அவருக்கு தொழில் செய்த வீட்டில் சம்பளம் வழங்கியிருக்கவில்லை. அத்துடன் தனது குடும்பத்துடன் தொடர்புகளை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கியிருக்க வில்லை.
    இதுதொடர்பாக குறித்த பெண்ணின் மகன் 2011ஆம் ஆண்டு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அன்று முதல் பணியகம் இது தொடர்பாக தகவல்களை தேடிக்கொண்டிருந்தது. அத்துடன் சவூதியில் இருக்கும் இலங்கை தூதரகம் ஊடாக அந்த பெண் தொழில் புரிந்த வீடு தொடர்பாக தேடிப்பார்த்தும் எந்த தகவலும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
    இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்னர்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்தகோரளவை குறித்த பெண்ணின் மகன் சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அமைச்சர் துரிதமாக செயற்பட்டு சவூதி தூதரகத்துக்கு முறையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை தெரிவித்திருந்தார்.
    இந்நிலையில் குறித்த பெண் பணிபுரியும் வீட்டு உரிமையாளர் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு தூதரகத்துக்கு வந்தவேளை பாதிக்கப்பட்ட பெண்தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் அந்த பெண்ணுக்கு 10 வருடங்களாக சம்பளம் எதுவும் வழங்காமல் பலவந்தமாக அந்த வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
    அதனடிப்படையில் சவூதி தூதரகத்தின் தலையீட்டுடன் குறித்த பெண் சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, 10 வருடத்துக்கு அவருக்கு கிடைக்கவேண்டிய சம்பளப்பணமான 54ஆயிரம் ரியால் (சுமார் 21இலட்சம் ரூபா) அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமாகியது.
    2மாதங்கள் சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த நந்தா மனம்பெரே நேற்று  நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதுடன் இன்று அவருக்குரிய காசோலையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள கையளித்தார். 
    virakesari

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 10 வருடம் சம்பளம் இல்லாது சவூதியில் இருந்த இலங்கைப்பெண் ; மொத்த சம்பளத்துடன் நாடு திரும்பினார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top