• Latest News

    November 27, 2016

    தலைவர்களுக்காக முஸ்லிம் அரசியல் நலிவடைகிறது

    சஹாப்தீன் -
    இலங்கை முஸ்லிம்கள் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் அரசியலை எடுத்துக் கொண்டால் சமூகத்திற்கான அரசியலைக் காண முடியாதுள்ளது. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசியல் இலாபங்களை மாத்திரம் கணக்கில் கொண்டே அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு இனவாதிகளினாலும், அதிகாரத்தில் உள்ளவர்களினாலும் மேற் கொள்ளப்படுகின்ற அதிரடி நடவடிக்கைகளையும், நூதன செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதற்கு முடியாத அவலத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. ஆதலால், முஸ்லிம்களின் அரசியலை தலைவர்களின் அரசியலிருந்து விடுவித்து சமூகத்திற்கான அரசியலாக மாற்ற வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களினால் பிரச்சினைகளில் உள்ள முடிச்சுக்களை அவிழ்க்க முடியும்.
    நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வேண்டுமென்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை காண முடியாதுள்ளன. இதற்கு முஸ்லிம் சமூகம்தான் காரணமாகும். முஸ்லிம்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை சமூகம் என்ற பொதுச் சிந்தனையிலிருந்து விடுபட்டு கட்சி, தலைமை, தனிநபர் அரசியல் என்ற பாகுபாட்டிற்குள் மேற் கொண்டிருக்கின்றார்கள். இதனை முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகம் இப்பாகுபாட்டிற்குள் ஆட்பட்டுக் கொண்டிருப்பதனால் தாங்கள் நேசிக்கின்றவர்களை உத்தமர்களாக காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில்  அரசியல் தலைவர் ஒருவர் அரபு நாடொன்றுக்கு விஜயம் செய்திருந்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்த விஜயம் அவசியம்தானா என்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் விமர்சனம் செய்திருந்தார்கள். இதனை பொறுத்துக் கொள்ளாத அவரின் நேசர்கள் ஓ.ஐ.சி
    (Organisation of Islamic Cooperation) ) மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத்தான் அவர் சென்றுள்ளார். அவர் நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீயாயங்களை எடுத்துரைப்பார் என்று சமூக இணையத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். இதன் மூலமாக தாம் விரும்பும் அரசியல் தலைவருக்கு எதிராக வரும் விமர்சனத்தை பொய்யைக் கூறியாவது சரி செய்ய எண்ணுகின்றார்கள் என்று தெரிகின்றது.
    முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாரை மாவட்டத்தில் அமோக ஆதரவுள்ளது. இம்மாவட்ட முஸ்லிம்கள் இக்கட்சியின் பின்னால் அணி திரண்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்காக என்பதனை விடவும், கட்சிக்காகவும், கட்சியின் தலைவருக்காகவும்தான். கட்சி அரசியல் முஸ்லிம் காங்கிரஸில் காணப்பட்டாலும் பெரும்பாலும் தலைவர் சந்தோசப்பட வேண்டுமென்று நினைத்துச் யெசற்படுகின்றவர்கள்தான் உயர்பீடத்தில் அதிகம் பேர் உள்ளார்கள். ஆதரவாளர்களும் இவ்வாறுதான் உள்ளார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளும் தலைமைத்துவம் சார்ந்தாகவே உள்ளன. தலைவரை திருப்திபடுத்திக் கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், இவ்விருகட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் கட்சியின் தலைவர் சார்ந்த அரசியலாகவே இருக்கின்றது.
    இதே வேளை, ஏனைய கட்சிகளை ஆதரித்துக் கொண்டிருக்கின்றவர்களை எடுத்துக் கொண்டால், இவர்களில் பெரும்பான்மையினர் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் அல்லது தலைவர்களுடன் உள்ள வெறுப்புக்களினால் ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தல்களில் ஆதரித்துக் வருகின்றார்கள்.
    வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் பரம்பரையாக ஐ.தே.கவை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னுமொரு தொகையினர் இதே போன்று சுதந்திரக் கட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இக்கட்சிகளின் அரசியல் கொள்கைகள், சிறுபான்மையினர் பற்றிய கொள்கை, முஸ்லிம்களைப் பற்றிய கொள்கை போன்ற எதனையும் கவனத்திற் கொள்வதில்லை.
    இவ்வாறு முஸ்லிம்களின் அரசியல் பலம் சமூக நலன்களை புறந்தள்ளி சிதறிக் காணப்படுகின்றன. இதனால், முஸ்லிம்களுக்கு நாட்டில் சமகாலத்திற் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெருக்குவாரங்களை தடுப்பதற்கு முடியாதுள்ளன. இதே வேளை, முஸ்லிம்கள் கட்சிகளினதும், தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடவடிக்கைகள் சமூகத்திற்கு பொருத்தமற்ற வகையில் இருந்து கொண்டிருப்பதனை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். கட்சிகளினதும், தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடவடிக்கைகளுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். தாங்கள் சமூக அரசியலை புறந்தள்ளி கட்சி, தலைவர், தனிநபர் அரசியலை தெரிவு செய்து அதற்கு முழு மூச்சாக பாடுபட்டுக் கொண்டமையை மறந்து விடுகின்றார்கள். தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கான திட்டங்களை கொண்டிருக்க வேண்டுமென்று கட்சிகளையும், தலைவர்களையும், வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்ளவில்லை. எதனையும் கேட்காமல் வாக்களித்தமையால் வெற்றி பெற்றவர்கள் அரசாங்கத்திடம் சமூகத்திற்கு தேவையானவற்றைக் கேட்காது தங்களது முகவரியை அலங்கரித்துக் கொள்வதற்காகவும், சுகமாகவும், சொகுசாகவும் வாழ்வதற்கு அமைச்சர் பதவிகளையும், தம்மோடு இருப்பவர்களுக்கு திணைக்களத் தலைவர் பதவிளையும், இணைப்பாளர் பதவிகளையும், உறவினர்களின் வருமானத்திற்கான பதவிகளையும் பெற்றுக் கொள்கின்றார்கள். இதனால், சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்று துணிவுடன் குரல் கொடுப்பதற்கு கூனிக்குறுகி நிற்கின்றார்கள். இப்படியாக ஒவ்வொரு அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம்களின் அரசியல் மலினப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் பின்னரும் முஸ்லிம்களின் அரசியல் பலம் குன்றிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், முஸ்லிம் சமூகத்தில் உள்ள வாக்காளர்களின் போக்குகளில் மாற்றங்களை காண முடியவில்லை.
    முஸ்லிம்களின் அரசியல் பலம் கட்சியின் தலைவர்கள், விருப்பு, வெறுப்பு போன்றவற்றிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளமையால் அமைச்சர்களும், கடும்போக்காளர்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    கடந்த 2016.11.18 வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜேய தாசராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்களில் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிலுள்ளதாக தெரிவித்தார். அத்தோடு,  வெளிநாடுகளிருந்து இலங்கைக்கு வருகை தரும் முஸ்லிம் விரிவுரையாளர்கள் சர்வதேச முஸ்லிம் பாடசாலைகளில் தீவிரவாதத்தை போதிப்பாகவும் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சரின் இக்கருத்துக்களை பாராளுமன்றத்தில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும், கட்சியின் தலைவரும் ஆட்சேபிக்கவில்லை. மரணித்தவர்களைப் போல் மௌனமாகவே இருந்தார்கள். முஸ்லிம் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் அமைப்புக்களிடையேயும் நீதி அமைச்சருக்கு எதிராக எழுந்த விமர்சனங்களின் பின்னர்தான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் வாய் திறந்தார்கள். அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் தமது ஆட்சேபனைகளை முன் வைத்தார்கள்.
    இதே வேளை, நீதி அமைச்சரின் பாராளுமன்ற உரையானது கடும்போக்கு இனவாதிகளை உற்சாகப்படுத்தியதாகவே இருந்ததாகவும், கண்டி பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன எனவும் மஸுறா சபை வெளியிட்டுள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    இதற்கு முன்னர் அமைச்சர் தயாகமகே பொத்துவில், கல்முனை பிரதேசங்கள் பௌத்தர்களுக்குரியது என்ற கருத்தை முன் வைத்திருந்தார். ஆதலால், கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் பௌத்த கடும்போக்காளர்களுக்கு இரை தேடிக் கொடுத்தவர்களைப் போன்றவர்கள் இன்றைய ஆட்சியிலும் உள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பொறுப்பற்ற வகையில் முன் வைத்துள்ள இரு அமைச்சர்களும் ஐ.தே.கவின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐ.தே.க ஆட்சியை பிடிப்பதில் பல தடவைகள் சறுக்கியுள்ளது. இம்முறை சிறுபான்மையினரின் அமோக ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துக் கொண்டவர்கள் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் மனங்களை நோகடித்து, பௌத்த கடும்போக்காளர்களை சந்தோசப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பௌத்த கடும்போக்காளர்கள் ஐ.தே.கவின் ஆட்சி அமையக் கூடாதென்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
    இதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் மாணிக்கமடு மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டாலும் முஸ்லிம்கள் மதமாற மாட்டார்கள் என்று கூறியதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வளவு பொறுப்பற்ற கருத்தாகவுள்ளது. முஸ்லிம்களின் விடயத்தில் அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களும், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பொறுப்பற்ற வகையில் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தை கிள்ளுக் கீரையாக மதிப்பீடு செய்வதனை அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களை இந்நிலைக்கு பின்னுக்குத் தள்ளிக் கொண்டு நிறுத்தியுள்ளவர்களையும் மன்னிக்கவும் முடியாது.
    இன்றைய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பௌத்த கடும்போக்குவாதிகள் அமைதியாகவே இருந்தார்கள். தமது கருத்துக்களை அடக்கியே வாசித்தார்கள். அமைச்சர்களும் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக அவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் கிளர்;தெழுந்து கொண்டிருக்கின்றார்கள். ஓரிரு அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது போல நாளடைவில் கருத்துச் சுதந்திரமும் இல்லாமல் போய்விடுமா என்று தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்படுவது தவிர்க்க முடியாதாகும். ஆயினும், அரசாங்கம் இனரீதியான தீவிரப் போக்கை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சிறுபான்மையினரிடையே ஆறுதலை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
    அந்த வகையில் இனமோதல்களுக்கு எதிராக விசேட பொலிஸ் பிரிவு ஒன்று பொலிஸ் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிறுபான்மையினர் நம்பிக்கை கொள்வது என்பது இதன் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும். ஏனேனில், ஒரு இனத்தை குறித்து வைத்து கோஷம் போடுதல், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல், சேதங்களை ஏற்படுத்தல், மதச் சுதந்திரத்தில் தடைகளை ஏற்படுத்துதல் போன்றவற்றினை தடுப்பதற்கு நாட்டில் போதுமான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை பௌத்த கடும்போக்குவாதிகளுக்கு எதிராக பிரயோகிப்பதில் பொலிஸார் தயக்கம் காட்டியே வந்துள்ளார்கள். பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது மக்களுக்கு முன்னிலையில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் பௌத்த கடும்போக்குவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு முடியவில்லை. ஆதலால், இனமோதல்களுக்கு எதிராக விசேட பொலிஸ் பிரிவு எற்படுத்தியிருந்தாலும் அப்பிரிவின் கைககள் கட்டப்பட்டதாகவோ, பாரபட்சம் காட்டாததாகவோ இருக்க வேண்டும். இப்பிரிவு அமைக்கப்பட்டதன் பின்னரும் இன்றைய நிலையே தொடருமாயின் பௌத்த கடும்போக்குவாதிகளின் கைகள் இன்னும் அகல விரிவனை தடுக்க முடியாது போய்விடும்.
    இதே வேளை, அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் ராஜிதசேனாரத்ன நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ முஸ்லிம்கள் குறித்து பாராளுமன்றத்தில் முன் வைத்த கருத்துக்கள் முற்றிலும்  தவறான தகவலாகும். அதன்படி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன் வைத்த தகவலானது அவருடைய தனிப்பட்ட  தகவலாகும். அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தல்ல என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் தகவல்கள் அவரின் தனிப்பட்ட கருத்து என்று சொல்ல முடியாது. கடந்த அரசாங்கத்திலும் ஒரு சில அமைச்சர்களின் விரும்பத்தகாத கருத்துக்களை அவரின தனிப்பட்ட கருத்து என்றே அன்றைய அமைச்சர்கள் தெரிவித்தார்கள். அதே பாணிலேயே இன்றைய அரசாங்கத்தின் பேச்சாளரும் தெரிவித்துள்ளார். 
    நன்றி: வீரகேசாி வாரவெளியீடு
    27.11.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைவர்களுக்காக முஸ்லிம் அரசியல் நலிவடைகிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top