• Latest News

    November 27, 2016

    சட்டம் எல்லோருக்கும் சமம்

    எஸ்.றிபான் -
    இலங்கை முஸ்லிம்களை சர்வதேச பயங்கரவாதத்திற்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் காலத்திற்கு காலம் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆயினும், அக்கருத்துக்கள் காலப் போக்கில் பொய் என்று நிர்பணமாகின. இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டு 2012ஆம் ஆண்டு முதல் முன் வைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் இனவாத அமைப்புக்கள் இதனை தூக்கிப் பிடித்து முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இற்றைக்கு பல மாதங்களுக்கு முன்னர் சிரியாவில் இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இதன் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் யாவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றதொரு பார்வையை பெரும்பான்மை மக்களி;டம் கடும்போக்கு இனவாத அமைப்புக்களும், அவற்றின் உறுப்பினர்களும் ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.
    முஸ்லிம்கள் மீது ஏற்கனவே பலவிதமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தும், அவர்களின் மத விழுமியங்களை பின்பற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்தியும் வந்த கடும்போக்கு இனவாத அமைப்புக்கள் இலங்கையை சேர்ந்த ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் போராட்டத்தில் சிரியாவில் கொல்லப்பட்டமை வாயிற் சீனி போட்டதனைப் போன்றிருந்தது. ஆயினும், அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவும், பாதுகாப்பு அமைச்சும் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளில்லை என்று தெரிவித்தது. இன்று வரைக்கும் இதே கருத்தையே பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இவ்வாறு உறுதியான கருத்து இருந்த போதிலும் பொதுபல சேன இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தொடர்புகள் உள்ளதென்றும், குர்ஆன் மத்ரஸாக்கள் அடிப்படைவாத்தினையும், பயங்கரவாதத்தினையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் 2015ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதென்று பொது பல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் முடிச்சுப் போட்டு பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு முற்பட்ட போது 2015ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து, இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள், பிரகடனம் செய்தன. ஆனாலும், கடும்போக்கு இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி பேசுவதனை நிறுத்தவில்லை.
    இந்தப் பின்னணயில்தான் இலங்கையை சேர்ந்த 4 குடும்பங்களின் 32 பேர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டமை தொடர்பில் தகவல் இருப்பதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் (17.11.2016) தெரிவித்தார். இவரின் இக்கருத்தால் இலங்கை முஸ்லிம்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். கடும்போக்கு  பௌத்த இனவாத அமைப்புக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டன. தங்களின் கருத்தை நீதி அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
    அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷவின் பல நல்ல கருத்துக்களை முன் வைத்தாலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கை முஸ்லிம்கள் இணைந்துள்ளார்கள் என்பது பிழையான தகவலாகும். இதனால், அவர் கடும் விமர்சனத்திற்கு முஸ்லிம் அமைப்புக்களினாலும், ஒரு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
    நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும் போக்கு அமைப்புக்களும், தேரர்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்ற இன்றைய நிலையில் நீதி அமைச்சரின் கூற்று பொறுப்பற்ற ஒன்றாகவே நடுநிலையாளர்களினால் நோக்கப்படுகின்றன.
    தற்போது உலகில் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் ஒரு திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டவர்கள் ஆட்சியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் அனுக்கிரகம் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு கிடைக்காமல் இருக்காது. மிகவும் செழிப்பாக இருந்த ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் முஸ்லிம் விரோத சக்திகள் பிரச்சினைகளை ஏற்படுத்தி அங்கு ஆயுத போராட்டத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இதனால், இந்நாடுகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இலட்சக் கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நாடுகளின் பொருளாதராம் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. செல்வந்தர்களாக இருந்தவர்கள் அகதி முகாம்களில் ஒரு வேளை உணவுக்கு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
    இவ்வாறு முஸ்லிம் நாடுகளை வறுமைப்பட்ட நாடுகளாக மாற்றுவதற்கே உலகில் உள்ள முஸ்லிம் விரோத சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தோடு, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். மியன்மார் நாட்டில் முஸ்லிம்கள் மிகப் பகிரங்கமாக படுகொலை செய்யப்படுகின்றார்கள். பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இன்றைய ஆட்சியாளர்களின் அணுசரனையுடன் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் மார்க்கப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றவர்களை இலக்கு வைத்து போலியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. 
    இன்று எமது நாட்டில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் புத்தர் சிலைகளை வைத்து நாட்டின் அமைதியை குழைப்பதற்கு சதிகள் நடைபெற்றுக் கொண்டிரக்கின்றன. முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை வம்புக்கு வேண்டுமென்று இழுப்பதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது உலக அளவில் உள்ள ஒரு திட்டமாகும். ஆகவே, முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளல் வேண்டும்.
    முஸ்லிம்கள் மட்டுமன்றி நாட்டின் நலனை விரும்பும் ஏனைய இனத்தவர்களும் மிகவும் அவதானத்துடன் தமது கருத்துகளை முன் வைக்க வேண்டும். அதிலும் ஆட்சியாளர்கள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ளல் வேண்டும். நீதி அமைச்சரின் பாராளுமன்ற உரைக்குப் பின்னர் நாட்டில் பௌத்த கடும் போக்காளர்கள் காற்றுக் குடித்துக் கொண்டு வெளிக் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சில இடங்களில் நீதி அமைச்சரின் தகவல்களைக் கொண்டு பெனர்களையும் பகிரங்கமாக தொங்கவிட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது அத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு சமமாகவே இருக்கின்றது.
    ஐ.எஸ்.ஐ.எஸ் ஏனும் அமைப்பு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணான அமைப்பு. இந்த அமைப்பு இஸ்ரேலின் தேவைக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று உலகில் உள்ள மிக முக்கிய முஸ்லிம் அறிஞர்களும், நாடுகளும் அறிவித்துள்ளன. இந்த அமைப்புக்கு எதிரான யுத்தத்தைக் கூட சவூதி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
    மேலும், நீதி அமைச்சர் தமக்கு கிடைத்த தகவல்கைள உறுதி செய்யாமல் முன் வைத்திருக்கக் கூடாதென்று முஸ்லிம் அமைப்புக்களும், ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இலங்கை ஸுறா சபையின் தலைவர் தாரீக் மஹ்மூத் நீதி அமைச்சரின் கூற்றை கண்டித்து பகிரங்க கடிதமொன்றினை வெளியிட்டுள்ளார்.
    அதில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அச்சமூட்டும் உங்களது கருத்துக்கள் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் பதற்ற நிலையினை உருவாக்கியுள்ளது. சமாதனத்திற்கு இது பாதிப்பாக அமைந்துள்ளது. அரசாஙடகத்திற்கு எதிரானவர்கள் நாட்டில் பௌத்த, முஸ்லிம் மோதல்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். உங்களது உரை இந்நாட்டின் இன தீவிரவாதிகளின் கரங்களை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள அக்கடிதத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றம், அதன் நோக்கம் போன்றவை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    இதே வேளை, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மெலளவி ரிஸ்வி முப்தியும் தமது கண்டனத்தை உலமா சபை சார்பாக வெளியிட்டுள்ளார். அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    நீதி அமைச்சர் இலங்கை முஸ்லிம் சர்வதேச பாடசாலைகளில் மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் இஸ்லாமிய விரிவுரையாளர்களால் மூளைச் சலவை செய்யப்படுவதாகக் கூறியுள்ளார். ஈது தவறான கருத்தாகும். இலங்கைக்கு அரபிகள் வந்து போவது ஒன்றும் புதிதல்ல. 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கைக்கு முஸ்லிம்கள் அரபிகள் வந்து போயுள்ளார்கள். இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தரும் அவர்கள் மத்ரஸாக்கள், சர்தேச பாடசாலைகளுக்கும் செல்லுகின்றார்கள். வேறு மதத் தலைவர்கள் வருகை தந்தால் அவர்கள் பன்சாலைகளுக்கும், ஆலயங்களுக்கும் செல்லுகின்றார்கள். இதில் தவறேதுமில்லை. இலங்கையின் உலமாக்களில் 95 வீதமானவர்கள் இலங்கையிலே படித்தவர்கள். அவர்கள் வெளிநாடுகளில் படிக்கவில்லை. இலங்கை மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தீவிரவாதம் போதிக்கப்படவில்லை. அன்னு, கருணை என்பவற்றுடன் இலங்கையில் நடைமுறையிலுள்ள பாடத் திட்டமே போதிக்கப்படுகின்றது. நீதி அமைச்சரின் கருத்தகள் ஏனைய மதத்தவர்கள் மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இவ்வாறு நீதி அமைச்சரின் கருத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தமையை அடுத்து நீதி அமைச்சர் பொது பலசேன அமைப்புடனும், முஸ்லிம் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளார். அவர் நீதியான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதமாகவும் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களை நெருக்கடியில் மாட்ட வேண்டுமென்பதற்காக கருத்துக்களை முன் வைக்கவில்லை. மக்களுக்கு தகவல்களு;காகவே அதனைச் சொன்னேன் என்று கவலை தெரிவித்துள்ளார்.
    நீதி அமைச்சர் தமது கருத்துக்கள் குறித்து கவலை கொண்டாலும், பொது பலசேன, முஸ்லிம் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாத நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுமென்று உறுதி கூறியிருந்தாலும் மக்களிடையே சென்றுள்ள கருத்துக்களை இலகுவாக கலைய முடியாது.
    ஆதலால், அரசாங்கம் இனவாத கருத்துகளை முன் வைக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி சட்;டத்தின் முன் நிறுத்த வேண்டும். தற்போது இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ராசிக் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதே வேளை, இவரை விடவும் மோசமான இனவாத கருத்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக முன் வைத்தவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனை முஸ்லிம்கள் பாரபட்சமான நடவடிக்கை என்றே கருதுகின்றார்கள். இனவாதம் பேசுகின்றவர்கள் எந்த நிற ஆடையை அணிந்திருந்தாலும், எந்த தராதரத்தைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் முன் சமம் என்று கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
    கடந்த காலங்களில் சட்டம் தமது கடமையை சரியாகச் செய்திருக்கவில்லை. இதனால்தான் இன்று நாட்டை மீண்டும் இனவாதம் சிறைப் பிடிப்பதற்கு முண்டியத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டம் வாழாது இருக்குமாயின் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை இழக்க வேண்டியேற்படும். நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும்.
    ஆதலால், நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்கவும் அதனால் நாட்டின் அமைதி சீர்குழையவும் இடங்கொடுக்காத வகையில் அரசாங்கம் நீதியை நிலை நாட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனைச் செய்வதற்கு தயங்கும் பொலிஸார், அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதே வேளை, முஸ்லிம்கள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ளல் வேண்டும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் முடிவுகளை எடுக்கக் கூடாது. இதே வேளை, முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருக்காது முஸ்லிம்களை நோக்கி வரும் இந்த பேராபத்தை தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
    நன்றி: விடிவெள்ளி 25.11.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சட்டம் எல்லோருக்கும் சமம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top