• Latest News

    November 21, 2016

    என்னை தூக்கிவாரிப்போட்ட யூஸூப் முப்தியின் நல்லாட்சி உரை

    முஜிப் இப்றாகிம்:

    கடந்த வருடம் ஜனவரி 08 இற்கு பிறகு வந்த வெள்ளிக்கிழமை பம்பலபிட்டி மெரைன் ட்ரைவ் பள்ளிவாயலில் ஜும்ஆவுக்காக அமர்ந்திருக்கிறேன்.
    அஷ்ஷெய்ஹ் யூசுப் முப்தி மிம்பர் படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்.
    உள்ளூர ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அவரது பிரசங்கத்திற்காக காத்திருக்கிறேன்.
    என்னைப்போல் பலத்த எதிர்பார்ப்புகளோடு பலர் அன்று அங்கே அமர்ந்திருக்க கூடும்.
    நாட்டின் ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் வருகிற முதலாவது ஜும்ஆ, சமகால நிலவரங்களை தொட்டுப்பேச வல்ல முப்தி அவர்கள் மிம்பர் மேடையில் நிற்கிறார்!
    என்ன சொல்ல போகிறார் என்ற ஏக்கம் எல்லோருக்கும் எழுவது இயல்புதானே…
    யூசும் முப்தியின் உரை தொடங்கி சிலவினாடிகளுக்குள் எனது எதிர்பார்ப்பின் பரப்புகளுக்குள் நுழைகிறது….
    “…….. இப்போ நாட்டில ஆட்சி மாற்றம் ஒன்டு நடந்திருக்கு, சிறுபான்ம மக்கள் பெரும்பாலும் ஒன்டு சேந்து இந்த மாற்றத்த கொண்டுவந்திருக்காங்க. முஸ்லிம் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு முடிவையும், தீர்வையும் நாடி இந்த ஆட்சி மாற்றத்துல பங்காளிகளா இருந்திருக்காங்க. அல்ஹம்துலில்லாஹ் நல்ல விஷயம், ஆனாலும் இந்த ஆட்சியிலயும் எங்களுக்கு ஒரு ஆபத்தும் வராது, நிம்மதியா வாழலாம் என்டு மாத்திரம் நெனச்சி கொள்ளாதீங்க……..”
    என்று தொடர்ந்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
    ஏனென்றால் அவ்வளவு பாரிய நம்பிக்கை, நிறைந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு என்பன இந்த நல்லாட்சி கோஷத்திற்காய் இருந்தது.
    இவற்றில் களத்தில் நின்று பங்கெடுத்து பணியாற்றிய கஷ்டமும், அனுபவமும் எனக்கும் இருந்தபடியால் முப்தி அவர்களின் அந்த வார்த்தைகளை உள்ளீரத்துக்கொள்வது அன்று கடினமாக இருந்தது.
    ஒரு பெரும் நம்பிக்கையின் மீது அவர் கல் எறிவதைப்போலிருந்தது.
    பின்னாட்களில் நல்லாட்சியின் முகத்திரை மெல்ல மெல்ல கிழியத்தொடங்கிய போது முப்தியின் தீட்சண்யமிக்க அந்த பொன்னான வசனங்கள் மீண்டும் மீண்டும் எனது காதுகளுக்குள் ஒலிக்கத்தொடங்கின….
    ” இறைவனின் பால் திரும்புங்கள்,அவன் மீது உங்கள் விசுவாசத்தினை விசாலப்படுத்துங்கள், ஆட்சிக்கு சொந்தக்காரன் அவனே, அவனே ஆட்சியாளர்களை தீர்மானிக்கிறான். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் நமக்கு சாதகமானவராக இருக்க பிரார்த்தனை புரியுங்கள். உங்களது நடவடிக்கைகளை இறைவனுக்கு பொருத்தமானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்……”
    என்று தொடர்ந்த அவரது குத்பா பேருரை அன்றைய தினத்தில் வியப்பை தந்தபோதும், பின்னாட்களில் அந்த வசனங்கள் மனதிற்குள் எதிரொலிக்கும் போதெல்லாம் அவற்றுக்குள் ஆழமாய் புதைந்து கிடந்த எதிர்வுகூறல்கள் யதார்த்தங்களாகின!
    கலவரம் ஒன்று நிகழவேண்டும்.
    அதில் முஸ்லிம்களின் உடமைகள், உயிர்கள் காவுகொள்ளப்பட்டு பாரிய ரத்தக்களறியொன்றை நிகழ்த்திவிட வேண்டுமென்பது ஆயுதவியாபாரிகளின் நீண்ட காலத்திட்டமாக இருக்கிறது.
    ஆட்சிமாற்றம் அந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் ஒரு தேக்க நிலையினை தோற்றுவித்தது, அவ்வளவுதான்.
    1983 இல் ஜூலைக்கலவரத்தை உருவாக்கி தமிழ்சமூகத்தின் கரங்களில் ஆயுதங்களை திணித்து முப்பது வருடங்களுக்கு மேலாக லாபம் பார்த்த ஆயுத தரகர்களுக்கு போரின் நிறைவு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.
    பல்லாயிரம் உயிர்களையும், கோடிக்கணக்கான உடமைகளையும் இழந்து நிற்கிற தமிழ் சமூகத்தை உடனடியாக மீண்டும் ஆயுதம் எந்த வைப்பது சாத்தியக்குறைவு என்பதை நன்குணர்ந்த வியாபாரிகளும், தரகர்களும் முஸ்லிம்களை இலக்கு வைக்க தொடங்கினர்.
    அதற்கு முஸ்லிம்கள் மீதான மேலைத்தேசங்களின் பூகோள அரசியலும் காரணமாகிறது.
    அது மிக விரிவாக ஆராயவேண்டிய தலைப்பு, விரிவஞ்சி விடுகிறேன்.
    இந்த கலவரத்தை எப்படி வலிந்திழுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த ஆயுத வியாபாரிகளின் கரங்களில் அகப்பட்டவர்கள்தான் பொதுபலசேனாவும், கோட்டபாய ராஜபக்‌ஷவும்.
    அவர்கள் கீறிய கோடுகளில் இவர்கள் றோடு போட்டார்கள்.
    ஆயுதவியாபாரிகளின் இசைக்கு இவர்கள் இனவாத நடனமாடினார்கள்.
    இனவாதம் எரிமலையினை போல் துவேசத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
    அளுத்கமையில் அது வெடித்துச்சிதறிய போது தேசமெங்கும் பரவி பற்றியெரியுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் இறைவன் அதனை தடுத்தான்.
    அவர்களது திட்டம் அன்று தவிடுபொடியானது.
    மீண்டும் அந்த இனவாத எரிமலைதான் துவேசத்தை உமிழத்தொடங்கியுள்ளது.
    அதன் சுவாலையின் வீச்சு, உஷ்ணத்தின் அளவு என்பதெல்லாம் எங்கே மீண்டும் அது வெடித்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி நிற்கின்றன.
    நேற்று முன்தினம் ” அத இந்தலா……..” என்று முழங்கிய நீதியமைச்சர் நேற்று இனவாதம் கண்டியில் கோரத்தாண்டவமாடிய போது வாய் பொத்தி நிற்கிறார்.
    தளதா மாளிகைக்கு முன்னே நின்று காவியுடை அணிந்து விசத்தை கக்கினாலும் அது இனவாதத்தில் சேர்த்தியாகாது என்பதுதானே இந்த தேசத்தின் எழுதப்படாத விதி!
    யாரோ ஒரு சிங்கள இளைஞனை நன்கு திட்டமிட்டு உசுப்பேற்றி விட்டு அவனது கைதை வைத்து கலவரம் ஒன்றிற்கு தூபம் போடலாம் என்று திட்டமிட்ட ஞானசாரவுக்கு இடையில் அப்துல் ராசிக் வான்டட்டாக வந்து வண்டியிலேறினார்!
    இனி சொல்லவும் வேண்டுமா?
    எரிமலை தனது களிம்புகளை வேகமாக வெளியேற்ற தொடங்கியது.
    நாங்கள் செய்யாதவற்றையெல்லாம் செய்ததாக அந்த உயரிய சபையிலே விஜயதாச ராஜபக்‌ஷ கூறினார்.
    அவை பெரும்பாலும் பொதுபல சேனாவின் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒத்ததாக இருந்தன.
    டிலந்த விதானகே நாங்கள் நான்கு வருடங்களாக சொன்னதையே நீதியமைச்சர் இப்போது கூறியிருக்கிறார் என பேருவகை அடைந்திருக்கிறார்.
    நேற்று அவர்கள் புறக்கணிக்க சொன்ன மூன்று வணிக குறியீடுகளில் ஒன்று கடந்த இரவு தீயில் கருகி இருக்கிறது.
    யாரோ நெடுநாளாய் அப்பாவிகளின் கரங்களில் ஆயுதங்களை திணித்துவிட கடும் பிரயத்தனப்படுகிறார்கள்.
    இவ்வளவு அமர்க்களங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் சமூகம் இது வரை விவேகமாகவே காரியமாற்றிக்கொண்டிருக்கிறது.
    நாம் சறுக்கி விடக்கூடாது.
    சறுக்குகின்ற புள்ளியிலிருந்துதான் எரிமலை வெடிக்கும்.
    எல்லாவற்றுக்கும் மேல் இறைவனின் திட்டமொன்றும் இருக்கும்.
    அது மறைக்கப்பட்டது.
    அதனை நாங்கள் உறுதியாக விசுவாசிக்கிறோம்.
    யூசுப் முப்தியின் வசனங்கள் மீண்டும் ஒலிக்கின்றன……..
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: என்னை தூக்கிவாரிப்போட்ட யூஸூப் முப்தியின் நல்லாட்சி உரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top