• Latest News

    November 20, 2016

    கண்டியில் ஞானசார தேரர் தமிழர்களிற்கு விடுத்த எச்சரிக்கை!


    இந்த நாட்டு சொத்துக்கள் தமிழனுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்ல. அவர்களின் தாய், தந்தையரினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களும் அல்ல. இவற்றை எமது பாட்டன், பூட்டனே உயிரைத் தியாகம்செய்து பாதுகாத்தனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
    நேற்று கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பு, ஏனைய பௌத்த பிக்குகள் தலைமையிலான அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த இந்த பேரணி கெட்டபே விகாரைக்கு முன்னால் ஆரம்பமாகி ஊர்வலமாக கண்டி தலதா மாளிகை வரை சென்றது.
    இந்நிலையில் குறித்த கண்டப் பேரணியில் பேசிய ஞானசார தேரர்,
    சிங்கள பௌத்த மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் பௌத்த பிக்குகளை ஒடுக்க அரசாங்கம் சதித்திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது.
    சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களான மகா நாயக்கத் தேரர்கள் இணைந்து கூட்டாக சங்க ஆணையை வெளியிட வேண்டும்.
    தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவும், சுதந்திரமாக வாழவும் முடியும் என்றால், அதேபோல் பள்ளிவாசல்களை அமைத்து, ஒலிபெருக்கிகள் மூலம் சத்திமிட்டுக்கொண்டு தமது மத அனுட்டானங்களை மேற்கொள்ள முடியும் என்றால் ஏன் இந்த நாட்டை கட்டியெழுப்பி, எழுத்துமூலம் வரலாற்று உரிமைக்கு உரிமை கொண்டாடும் சிங்கள பௌத்த இனத்திற்கு அந்த உரிமை மறுக்கப்படுகின்றது என்று கேட்க விரும்புகின்றோம்.
    கள்ளத்தோணிகளைப் போல் தொடர்ந்தும் எம்மால் வாழ முடியாது என்ற செய்தியையும் எமது தலதா பெருமானிடம் முறையிடவே இங்கு கூடியிருக்கின்றோம்.

    இந்த நாட்டின் வெட்கக் கேடான, முதுகெழும்பில்லாத ஆட்சியாளர்கள், தமது இனம், மதம் தொடர்பான அனைத்து கடப்பாடுகளையும் மறந்து செயற்பட்டுவருகின்றனர்.
    மேற்குலகத்திற்கும், ஐரோப்பாவிற்கும் கைப்பொம்மைகளாக இருக்கும் இந்த பொம்மை ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் பௌத்த பிக்குகளை அடக்கி, ஒடுக்க ஆரம்பித்துள்ளனர் என்றார்.
    இதேவேளை சில அமைச்சர்கள் இந்த நாட்டின் காவல்தெய்வங்களாக கருதப்படும் பௌத்த பிக்குகளை ஏளனப்படுத்தும் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளனர். அது மாத்திரமன்றி நாட்டில் இன்று முஸ்லிம் கடும்போக்குவாதம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
    ஆனால் எமது ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாம் இந்த வேண்டுதல் பூஜையை முடித்துக்கொண்டு மல்வது பீட மகாநாயக்கத் தேரரை சந்திக்கவுள்ளோம். சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களாக சியாம் பீடத்தின் மல்வது பீட மகாநாயக்கத் தேரரை சந்தித்து சிங்கள பௌத்த இனம் எதிர்நோக்கும் இந்த பிரச்சனைகளை எடுத்துக்கூறி அவற்று நீதியை கோரவுள்ளோம்.
    மகாநாயக்க தேரர்கள் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரரன் வழங்கிய சொத்துக்களை அனுபவித்துக்கொண்டு அவன் கூறிய கடமைகளை மாத்திரம் செய்துகொண்டிருக்காது சிங்கள பௌத்த இனம் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடிகள் குறித்தும் தமது கவனத்தை செலுத்த வேண்டும்.
    இந்த கடப்பாட்டை அவர்கள் செய்யத் தவறினால் சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு மட்டங்களில் போராடிவரும் எமது இளைய தலைமுறையினர் உட்பட பௌத்த ஆதரவாளர்கள், எவ்வாறான போராட்டத்தை தெரிவுசெய்தாலும் அவற்றுக்கு நாம் பொறுப்பு கூற மாட்டோம்.
    இந்தப் பிரச்சனைகளால் கடும் விசனமடைந்துள்ள எமது பிள்ளைகள், கற்கலையும், பொல்லுகளையும் எடுத்துக்கொண்டு தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்பட்டால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதை எண்ணியும் பார்க்க முடியாது.
    அதனால் இந்த அபாயத்தை புரிந்துகொண்டு, இந்த இளைய பௌத்த பிக்குகள் மற்றும் இளைஞர்களை இனிமேலும் பலிகொடுக்காது, பொம்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக சங்க ஆணையை வெளியிட வேண்டும்.
    சிங்களவர்களுக்காக நாட்டை எவ்வாறு ஆட்சிசெய்வது என்பதை தெளிவுபடுத்தி மகாநாயக்கத் தேரர்கள் இந்த ஆட்சியாளர்களுக்கான சங்க ஆணையை பிரகடனப்படுத்த வேண்டும்.
    இந்த நாட்டு சொத்துக்கள் தமிழனுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்ல. அவர்களின் தாய், தந்தையரினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களும் அல்ல. இவற்றை எமது பாட்டன், பூட்டனே உயிரைப் தியாகம்செய்து பாதுகாத்தனர்.
    ஆனால் அவற்றின் பலனை அனுபவித்துவரும் தமிழனும், முஸ்லிம்களும் சிங்களவனின் தலையில் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். அதனால் பொம்மை ஆட்சியாளர்களுக்கு சங்க ஆணையை வெளியிடுமாறு நாம் எமது மகாநாயக்கத் தேரர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
    இதேவேளை அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமசேவகர் ஒருவரை தரக்குறைவாக பேசியதுடன், இனவாதத்தை கக்கிய மங்களாராம விகாரையின் தலைமை பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் உட்பட பௌத்த பிக்குகள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்டியில் ஞானசார தேரர் தமிழர்களிற்கு விடுத்த எச்சரிக்கை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top