• Latest News

    November 24, 2017

    எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி

    எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
    சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
    இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டங்கள் 2013-ம் ஆண்டு முதல் தீவிரமடைந்தன.
    இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் சினாய் தீபகற்பத்தில் அடிக்கடி தாக்குதல் நடப்பதுண்டு. ஆனால், இதுவரை நடந்ததிலேயே அதிக உயிர்ப் பலி கொண்ட தாக்குதல் இதுதான்.
    மசூதியில் பிரார்த்தனையில் இருந்த பாதுகாப்புப் படையின் ஆதரவாளர்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
    அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி, பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து இச்சம்பவம் குறித்து விவாதிக்க உள்ளதாக எகிப்தின் தனியார் செய்தி தொலைக்காட்சி எக்ஸ்ட்ரா நியூஸ் தெரிவித்துள்ளது.
    இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று இன்னும் தெரியிவில்லை.
    கடந்த ஜூலை 2013-ல் எகிப்திய ராணுவம் இஸ்லாமிய ஜனாதிபதியான மொஹமத் மோர்சியை வீழ்த்தியதையடுத்து, சமீப காலங்களில் ஜிகாதி போராளிகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
    அப்போதிலிருந்து, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்பவர்களுடன் இணைந்த சினாய் மாகாண குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top