இலங்கை கெக்கிராவ
பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி
மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக
வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி
எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது.
பாடசாலைக்கு
செல்லும் முன்னர் மாணவர்கள் காலை உணவை எடுத்திருந்தார்களா? என்ற
விடயத்தில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மதம்
கலாச்சார காரணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக
பொருளாதார பிரச்சனை காரணமாக சில பிள்ளைகள் காலை உணவை எடுக்காமலே
பாடசாலைக்கு செல்கின்ற அதேவேளை பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன்
காரணமாகவும் சில பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுகின்றது.
2016 ஆம்
ஆண்டு கல்வி அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இலங்கையில் 10,162
பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்வதாக கூறப்படுகின்றது.
இந்த
எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் அதாவது 14 லட்சம் பேர் காலை
உணவு எடுப்பது இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின்
மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவு கூறுகின்றது.
![]() |
| மருத்துவ நிபுணரான டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ. |
"காலை உணவு உட்கொள்ளாமல் இருப்பது பிள்ளைகளின் மூளை
வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். "
என்கின்றார் அந்த பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் சிறப்பு மருத்துவ
நிபுணரான டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ.
காலை உணவு எடுக்காத
பிள்ளைகளிடம் கணித ஆற்றல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல்,
பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் குறைதல் , போட்டிப் பரீட்சைகளில் குறைந்த
புள்ளிகளை பெறுதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள்
காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
காலை உணவு எடுக்காமல்
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலே அதிகம்
காணப்படுவதாகவும் அவரது தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
"பிள்ளைகளுக்கு காலையில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை
பெற்றோர்கள் பழக்கமாக வைத்து கொள்கின்றனர். அது போதுமானதாக இல்லை. ஒரு
கிளாஸ் பாலை விட பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பது முக்கியமானதாகும்.
பாடசாலை செல்லும் வயதில்தான் பிள்ளைகளிடம் துரித வளர்ச்சி காணப்படும்.
காலை
உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம் என மூன்று உணவு பிரிவுகளை
கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும். பால் என்பது இதில் ஒரு
பிரிவு மட்டுமே. அதனை இடை உணவாக கொடுக்கலாம் " என்று டாக்டர் ரேணுகா
ஜயதிஸ்ஸ காலை உணவின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி கூறுகின்றார்.
"இது பற்றி பெற்றோர் அறியாமல் இருப்பதே தற்போதைய இந்த நிலைமைக்கு காரணம் " என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்


0 comments:
Post a Comment