• Latest News

    November 26, 2017

    கல்முனை - சாய்ந்தமருது பிரிக்கப்பட முடியாத உறவு

    - பிறவ்ஸ் - 
    சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை வலுத்ததன் மூலம், இன்று கல்முனை மக்கள் மத்தியிலும் சாய்ந்தமருது மக்கள் மத்தியிலும் ஒருவித கசப்புணர்வு ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள் கூட அடித்துக்கொள்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. 

    சாய்ந்தமருது மக்கள், ஏன் கல்முனை மக்களுடன் கடினமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு பிரதான காரணமாக சொல்லப்படுவது, கல்முனையை நான்காக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை இப்போது முன்வைத்தமையாகும். சாய்ந்தமருதின் தனியான உள்ளூராட்சி சபை கனவு கனிந்துவந்த நிலையில், ஏக காலத்தில் கல்முனையை நான்காக பிரிக்கவேண்டும் என்‌ற கோரிக்கையினால், வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்த கதையாக சாய்ந்தமருது பிரதேசபை கனவு மாறிவிட்டது.

    இதனால், ஏற்கனவே நான்காக பிரிப்பதற்கான முயற்சிகளை கல்முனை மக்கள் மேற்கொண்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் முன்வைக்கப்பட்டாலும், ஒரு ஊரை மாத்திரம் திருப்திப்படுத்தும் வகையில் பிரதேச சபை வழங்குவதற்கு எந்தவொரு அரசியல்வாதியும் தயாரில்லை என்ற யதார்த்தத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இதேவேளை, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை என்பது நியாயமானது என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது என்றால் நாம் ஏன் அவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்த வேண்டும். சாய்ந்தமருது மக்கள் தனிநாடு கேட்டு போராடுகிறார்கள் என்றும், குப்பை அள்ளும் மெசினுக்காக சண்டை பிடிக்கிறார்கள் என்றும் அண்டை ஊர்களைச் சேர்ந்த சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன். அவர்களது வலியும் வேதனையும் அவர்களுக்குத்தான் தெரியும். அதிருப்தி காரணமாகவே அவர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் என்பதை உணர, ஏன் உங்கள் மனம் மறுக்கிறது?

    இதேவேளை, சாய்ந்தமருது மக்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக இருக்கவேண்டுமே தவிர, வன்முறையை தூண்டுவதாக ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது. அஹிம்சையை தாண்டி, குரோதத்தை வளர்க்கக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் சாய்ந்தமருது மக்கள் அனுமதிக்கக்கூடாது. கல்முனை மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடிய எந்தவொரு செயற்பாட்டிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபடாதவாறு சாய்ந்தமருது பள்ளிவாசல் கண்காணிக்கவேண்டும்.

    அண்மையில் நடைபெற்ற மாட்டுவண்டி ஊர்வலத்தில் சாஹிறா கல்லூரி வீதியில் ஏற்பட்ட அசம்பாவிதம், இரு ஊர்கள் மத்தியிலும்  பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துவிடக்கூடாது. சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருசிலரின் விரும்பத்தகாத செயற்பாடுகளினால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த அசம்பாவிதம் இரு ஊரையும் பகைவர்களாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. பிரிக்கப்படமுடியாத கல்முனை - சாய்ந்தமருது உறவில் விரிசலை ஏற்படுத்துபவர்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

    மாட்டுவண்டி ஊர்வலத்தில் தங்களுடைய சாய்ந்தமருது நண்பர் ஒருவர் கலந்துகொண்டார் என்பதை காரணம்காட்டி, இனி அவரிடம் யாரும் பேசக்கூடாது என்று ஒன்றாகப்படித்த கல்முனைக்குடி நண்பர்கள் சிலர் முடிவெடுத்திருக்கிறார்கள். இன்னும்சிலர் மாட்டுவண்டி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலரை தாக்குவதற்கும் திட்டம் தீட்டியுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் அவரது ஊரின் போராட்டத்தில் கலந்துகொள்வதிலும், கல்முனையைச் சேர்ந்தவர் அவரது ஊரின் போராட்டத்தில் கலந்துகொள்வதிலும் எப்படி பிழைகாண முடியும்?

    கல்முனை சாஹிரா கல்லூரியை சாய்ந்தமருது சாஹிரா கல்லூரியாக மாற்றுங்கள் என்று கூறுபவர்களும் சாய்ந்தமருதில் இருக்கிறார்கள். அதேபோல, கல்முனைக்குடி கடற்கரை கொடியேற்றப் பள்ளிக்கு சாய்ந்தமருது மக்கள் வரக்கூடாது என்று சொல்பவர்களும் கல்முனையில் இருக்கிறார்கள். பிரதேசவாதத்தை தூண்டக்கூடியவர்கள் இரு ஊர்களிலும் இருக்கிறார்கள். இப்படியான மனநிலைகொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் இடுகின்ற பதிவுகள் பிரதேசவாதத்துக்கு தீனி போடுவதாகவே உள்ளன. இவற்றை அந்தந்த ஊர் பள்ளிவாசல்கள் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்.

    கல்முனை மக்கள் சாய்ந்தமருதுக்கு செல்லவேண்டும். சாய்ந்தமருது மக்கள் கல்முனைக்கு செல்லவேண்டும். இரு ஊர்களிலும் உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஊர்கள் கடந்த உறவுகளை சில்லறைக் காரணங்களுக்காக விட்டுக்கொடுக்க முடியாது. பிரதேசவாதத்துக்கு தீனிபோடும் எந்த செயற்பாடுகளிலும் நாங்கள் இறங்கிவிடக்கூடாது. ஒவ்வொரு ஊர்களும் அவரவர் உரிமைகளுக்காக போராடுகின்றனர். அதனை மதிக்கின்ற மனப்பக்குவம் வந்தாலே போதும், இந்த பிரச்சினைகள் எல்லாம் ஒழிந்துவிடும்.

    அவரவர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை, கொச்சைப்படுத்தாமல் ஓரமாக ஒதுங்கியிருப்போம். நாங்கள் என்ன உரிமைக்காக போராடுகின்றோமோ, அதேபோன்று அவர்களும் அவர்களது உரிமைக்காக அவர்கள் போராடுகின்றார்கள் என்று இரு ஊரார்களும் நினைத்துக்கொண்டால் போதும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை - சாய்ந்தமருது பிரிக்கப்பட முடியாத உறவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top