- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் -
இலங்கை ஏற்றுமதித் துறைக்கு ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் பாரிய வெற்றியைத் தந்துள்ளது. பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, எமது ஆடை ஏற்றுமதிகள் இவ்வாண்டு
ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான
காலப்பகுதியில் 11.3 சதவிகிதமாக அதிகரித்து, 1.67 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டித்தந்துள்ளது என கைத்தொழில் மற்றும்
வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு கண்காட்சி
மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான இன்டெக்ஸ் தெற்காசியாவின் மூன்றாவது பதிப்பின்
நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் இங்கு
உரையாற்றுகையில்,
2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர்
வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடை ஏற்றுமதி, 2016 ஆம் ஆண்டு அதே மாத
காலப்பகுதியில் 2% சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம்
முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 1.5
பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்பட்டது.
நடப்பாண்டில் சகல நாட்டிற்குமான ஆடை ஏற்றுமதி (ஜனவரி முதல் செப்டம்பர்
வரை). 13.4% சதவீத அதிகரிப்புடன் 3.97 பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஏற்றுமதி
செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 3.5
பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இதேபோல இந்த வளர்ச்சி போக்கு தொடரும்
என்று நம்புகிறோம், மேலும் அடுத்த ஆண்டு இன்னும் பல நல்ல
செயல்திறன்களை எதிர்பார்க்கலாம் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க,
இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் திருமதி. ஆர்.பி. மார்க்ஸ் மற்றும்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ தரஞ்சித் சிங் சந்து உட்பட பல சர்வதேச
பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
2015, 2016 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் இரு
கண்காட்சிகளை நிறைவு செய்த இண்டெக்ஸ், இப்போது தெற்காசியாவில் உள்ள மிகப்பெரிய
மற்றும் ஒரே சர்வதேச ஜவுளி வளத்துறைக்கான நிகழ்வாகத் திகழ்கின்றது. இந்நிகழ்வில் சீனா, இந்தியா மற்றும் ஹாங்காங் பங்கேற்பாளர்களின் வலுவான பிரசாரம்
காணப்பட்டதுடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாம்பே ரேயான்
என்ட் பேஷன்ஸ் லிமிடெட், மெக்கோட்டெக்ஸ், தி வூல்மார்க் நிறுவனம் போன்ற முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் தமது தயாரிப்புகளை
காட்சிப்படுத்தினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,
இலங்கை பிராந்தியத்துடன் ஒருங்கிணைப்பதற்கு இண்டெக்ஸ் போன்ற பல
நிகழ்வுகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. இந்த பிராந்தியத்தில் இண்டெக்ஸ்
மிகப்பெரிய ஜவுளித் துறை சோர்ஸிங்
கண்காட்சியாகத் திகழ்கின்றது. உலகளாவிய வர்த்தக அமைப்பு முறைமைக்கு ஏற்ப நாம் எவ்வாறு
ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
என்பதை இந்நிகழ்வுகள்
காட்டுகின்றன.
இலங்கையின் ஆடைதொழில் துறையானது நமது
பொருளாதாரத்திற்கு முக்கியமானது. அத்துடன் உலகளாவிய வர்த்தக அமைப்பு முறைமைக்கும், தெற்காசியாவின் மற்றைய
நாடுகளுடன், இலங்கையை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியமாக காணப்படுகின்றது. ஆனால்,
நாம் மேலும் பல முன்னேற்றங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. இப்பிராந்தியத்தின் பெறுமதியான இச் சங்கிலித் தொடரில் பல
வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், இவற்றை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம். இவ்வாறான
நிகழ்வுகள் தெற்காசிய நாடுகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்
என்றார்.

0 comments:
Post a Comment