• Latest News

    November 21, 2017

    தேர்தல்கால நெருக்கடிகள்

    -    ஏ.எல்.நிப்றாஸ் -
    நாட்டில் தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் மற்றும் சட்ட ரீதியான நெருக்கடிகளும் குழப்பங்களும் தேர்தலொன்று நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்ற அனுமானங்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் உள்ள10ராட்சி தேர்தல் நடைபெறும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்பட்டன. ஆனால், இப்போது 'தேர்தலொன்றை நடத்துவது மட்டுமல்ல ஆட்சியை தக்கவைத்து நடத்துவதே பெரும் சவால்' என கருதுமளவுக்கு நிலைமைகள் மேலும் சிக்கலடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. 

    கூட்டு அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று வர்ணித்தாலும் ஒரு கூட்டுக் குடும்பத்திற்குள் ஏற்படுகின்ற மனக் கசப்புக்கள், தாழ்வு மனப்பான்மைகள் போல இவ்வரசாங்கத்திற்குள்ளும் அடுத்த தேர்தலில் பலத்தை நிரூபிப்பதற்கான அதிகார பனிப்போர்கள். நீயா நானா போட்டிகள் கடந்த பல மாதங்களாகவே இடம்பெற்றுவருகின்றன. ஆரம்பத்தில் இருதரப்பு அதிகாரப் போட்டியாக இருந்த இலங்கையின் அரசியல் களம் இப்போது மைத்திரி – ரணில் – மஹிந்த அணிகள் என ஒரு முக்கோண அதிகாரப் போட்டியாக உருவெடுத்திருக்கின்றது. 

    அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் கைகூடி வராமல் போய்விட்டதற்குப் பிற்பாடு, மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, உள்ள10ராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள், நாட்டிலுள்ள பெரும்பாலான உள்ள10ராட்சி சபைகளை கைப்பற்ற முடியுமா என்ற அரசாங்கத்தின் உள்ளச்சம், பிணைமுறி தொடர்பான விசாரணைக்கு பிரதமர் அழைக்கப்பட்டுள்ளமை, அதன் காரணமாக ஆட்சிக்கட்டமைப்பில் ஏற்படக் கூடிய அதிர்வுகள் என களநிலைமைகள் அரசாங்கத்திற்கு சாதகமற்றதாகவே தெரிகின்றன. இவற்றையெல்லாம் சமகாலத்தில் சமாளித்துக் கொண்டே தேர்தலொன்றை நடாத்த வேண்டியிருக்கின்றது. 

    இழுத்தடிக்க முயற்சி

    அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே தேர்தல்களை நடாத்துவதற்கு பின்வாங்கியதுடன் தேர்தல்களை ஒத்திப்போடுவதற்கான சூட்சும நகர்வுகளையும் மேற்கொண்டது. குறிப்பாக, அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்து தேர்தலை பிற்போடச் செய்வதன் ஊடாக மாகாண சபைகளின் நிழல் ஆட்சியதிகாரத்தை தம்கையில் வைத்திருக்க நினைத்தது. அந்தக் காலப் பகுதியில் அடுத்த தேர்தலுக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம் என அரசாங்கம் மனக் கணக்கு போட்டிருக்கலாம். 

    20ஆவது திருத்தத்தை நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் முழுமையாக நிராகரிக்கவில்லை. எனவே அவற்றை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமும் உயர்நீதிமன்றத்தின் கருத்தறிதலுக்கு செல்லக் கூடாது என்பதற்காக மிகவும் தந்திரமான முறையில், ஏற்கனவே விவாதிக்கப்படும் சட்டமூலமொன்றின் குழுநிலையின் போது சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிய விதம் அரசாங்கத்தின் உள்நோக்கத்தை வெளிக்காட்டியது என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    அதன்படி அரசாங்கம் நினைத்த காலத்திற்கு இல்லாவிட்டாலும், தொகுதி நிர்ணயம் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் என்ற பெயரில் மாகாண சபைகளுக்கான தேர்தலை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கும் முயற்சியில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. எனவே மாகாண சபைத் தேர்தல் இப்போதைக்கு நடைபெறாது என்பது உறுதியாகிவிட்ட பின்னர், உள்ள10ராட்சி சபைத்தேர்தலை நடாத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. 

    மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இருந்தே பல்வேறு நடைமுறைசார் காரணங்களால் உள்ள10ராட்சி சபைத் தேர்தல்கள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்ள10ர் ஆளுகைக் கட்டமைப்பு முற்றாக சீர்குலைந்திருக்கின்றது. எனவே இனியும் தேர்தலை தாமதப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கும். ஆனால் தேர்தலை நடாத்துவது என்றால் அதற்கு முன்னர் செய்து முடிக்க வேண்டிய பணிகள் இருந்தன. உள்ள10ராட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோமா என்ற ஒருவித பயத்துடனேயே தேர்தல் நடாத்துதற்கான மேற்படி முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யத் தொடங்கியது.  

    நடத்துவதற்கான ஏற்பாடு

    அதன்படி, உள்ராட்சி சபைகளின் எண்ணிக்கை மற்றும்  உறுப்பினர்களின் தொகை உள்ளிட்ட விடயங்களை வரையறை செய்யும் 2043ஃ56 மற்றும் 2043ஃ57ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களை உள்ள10ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளியிட்டுள்ளார். இதற்கமைய உள்ள10ராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 336 இலிருந்து 341ஆக அதிகரித்துள்ளது. சாய்ந்தமருது உள்ள10ராட்சி சபை சாத்தியப்படவில்லை என்றாலும், புதிதாக நோர்வூட், மஸ்கெலியா, அக்கரப்பத்தனை, அம்பகமுவ, கொடகல போன்ற பிரதேச சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன், உள்ள10ராட்சி மன்றங்களுக்கு வட்டாரங்களில் இருந்து புதியகலப்பு தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் தொகை 4486 இலிருந்து 8356 பேராக கிட்டத்தட்ட 2 மடங்கால் அதிகரித்திருக்கின்றது. 

    எனவே வர்த்தமானி வெளியானதும் நமது அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வேட்பாளர் தேடும் படலத்தில் இறங்கி விட்டனர். மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ள10ராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பாதகங்களையும் பொருட்படுத்தாது வாக்களித்த முஸ்லிம் அரசியல்வாதிகள், புதிய தேர்தல் முறைமை முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று அறிக்கை விட்டுக் கொண்டும் அதற்கு நிரந்தர தீர்வு காணாமலும், தேர்தல் களிப்பில் மூழ்கத் தொடங்கியிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. 

    இதேவேளை, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதால் தேர்தல் நடாத்த முடியாதென தீர்மானிக்கப்பட்ட கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கும் இம்முறை தேர்தல் நடாத்துவதற்கு ஏதுவாக உள்ள10ராட்சி சபை தேர்தல்கள் சட்டத்தில் கடந்தவாரம் இன்னுமொரு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, உள்ள10ராட்சி தேர்தலொன்றை நடத்துவதில் காணப்பட்ட எல்லா தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. 

    தேர்தல் நடாத்துவதில் அரசாங்கத்திற்கு பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும் நாட்டில் ஜனநாயகத்தின் ஆட்சியிருப்பதையும் மக்கள் தங்கள் ஆணையை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர்  என்ற செய்தியையும் சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டியிருக்கின்றது. உள்ள10ராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறலாம்.

    புதிய சவால்கள்

    இந்நிலையில், உள்ள10ராட்சி மன்ற எல்லைகள் தொடர்பாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஆறு பேரினால் மேல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒருநாட்டின் ஓய்வுநிலை நீதியரசரே மனுத்தாக்கல் செய்திருக்கின்ற சூழலில், இப்போது உள்ள10ராட்சி சபை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    இம்மனுக்கள் கடந்த 16ஆம் திகதி மேல்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இம்மனுக்களை எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என நீதிமன்றம் முடிவு செய்திருக்கின்றது.

    முன்னைய காலங்களைப் போல ஆட்சியாளர்களுக்கு விருப்பமான தீர்ப்புக்களை அண்மைய நாட்களில் நீதிமன்றம் வழங்கியிருக்கவில்லை என்பதை வைத்துப் பார்க்கின்ற போது, மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பாக சரத் என். சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் உள்ள10ராட்சி சபை தேர்தலுக்கான வர்த்தமானியை ஆட்சேபித்து வாக்காளர் அறுவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு பாதகமாக அமைவதற்கும் சாத்தியமிருக்கின்றது. 

    எனவே. குறிப்பாக உள்ள10ராட்சி சபை தேர்தலை நடாத்துவதற்கு புதிய தடையாக இந்த மனுக்கள் அமையும் என அரசாங்கம் அச்சம் கொள்கின்றது. இது முதலாவது வகை அச்சமாகும். இதற்கு மேலதிகமாக வேறுபல விடயங்கள் குறித்தும் அரசாங்கம் கிலி அடைந்துள்ளது அல்லது அவ்விவகாரங்கள் தேர்தலில், சுமுகமான ஆட்சியில் தாக்கம் செலுத்தும் வல்லமையை கொண்டிருக்கின்றன. 

    இதில் முதலாவது, பிணை முறி மோசடி விசாரணைகளும் அதனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றதென கருதப்படும் தொடர்புகள் பற்றிய முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுவதும் ஆகும். இரண்டாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி மைத்திரி பக்கமா அல்லது ரணில் பக்கமா சார்ந்து நிற்கும் என்பதும், யாருக்கு எதிராக களமாடும் என்பதுமாகும். மூன்றாவது விவகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் மட்டுமல்ல அவர்களுக்கு முட்டுக் கொடுக்கின்ற சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகளிலும் ஏற்பட்டுள்ள தளம்பலும் சிறுபான்மை அரசியல் நகர்வுகளுமாகும்.

    பல்வேறு அச்சங்கள்

    இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்விவகாரம் பெரும்; பூதாகரமாகியுள்ள நிலையில் வெளியாகியுள்ள தொலைபேசி குரல் பதிவுகளில் உள்ள குறியீட்டுச் சொல்களால்; ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையிலேயே நாளை 20ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    இந்த விசாரணையின் போக்கைப் பார்த்த அரச உயர்மட்டங்கள் இவ்வாறான ஒரு அழைப்பு விடுக்கப்படக் கூடும் என்பதை கடந்த இரு வாரங்களாக அறிந்திருந்தன. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரம சந்தித்ததாகவும் 'பதவியை ராஜினாமாச் செய்து விட்டு விசாரணைக்கு சமூகமளிப்பது நல்லதென' ஜனாதிபதி கூறியதாகவும் அரசியல் வட்டாரங்களில் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் உலாவந்தன. அதேபோன்று ஐNhhப்பாவில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் ரணில் - மஹிந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சித்ததாகவும் அரசல்புரசலாக தெரியவந்திருந்தது. 

    இந்த  நிலையிலேயே, ஆணைக்குழு பிரதமருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றது. ஆனால், பிரதமர் ஆணைக்குழுவுக்கு முன்னிலையாவதிலும் அவரை குற்றம் காண்பதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறுவதற்கு கடமைப்பட்ட பிரதமர் நாட்டுக்கு பொறுப்புக்கூறும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் அங்கீகாரமளித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவதில் சில வரப்பிரசாதங்கள், நடைமுறைகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

    எது எவ்வாறிருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தூய்மையான கரங்களை நிரூபித்துக் காட்டும் வகையில் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் ஒருவரை பதவியிறக்குவதாயின் அமைச்சரவையின் முழு அனுமதியைப் பெறுவது உள்ளடங்கலாக பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கின்றது. இவ்வாறான காரணங்களால், பதில் பிரதமர் ஒருவரை நியமித்து விட்டு ஒரு சாதாரண எம்.பி.யாக ரணில் ஆஜராவார் என்று ஊகிக்க முடிகின்றது. ஐ.தே.க.வுக்குள் பதவிச் சண்டைகள் இருந்தாலும், பதில் பிரமதராக அநேகமாக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்படலாம் என அனுமானிக்கப்படுகின்றது. 

    எனவே, இவ்விவகாரம் தேர்தலை நடாத்தும் முயற்சியில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்ற கேள்வி பலருக்கு எழமுடியும். அதாவது, இந்த விசாரணையில் பிரதமருக்கு பாதகமான விடயங்கள் கண்டறியப்படுமிடத்து அது நேரடியாக பதவி இழப்பிற்கு காரணமாகும் எனக் கூற முடியாது. மாறாக அது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அரசியல் அவதானிகளின் பொதுவான அபிப்பிராயமாகும். 

    குறி;ப்பாக, ஒரு மோசடி வழக்குடன் தொடர்புபட்டவர் என ஆணைக்குழுவால் கண்டறியப்படும் ஒருவரை பிரதம அமைச்சராக வைத்திருப்பது அரசாங்கத்திற்குள்ளும் கூட்டு எதிரணியிலும் கடும் ஆட்சேபத்தை ஏற்படுத்தும். இது எதுவரைச் செல்லும் எனச் சரியாகக் கணித்துக் கூற முடியாது. தேர்தலை உரிய தினத்தில் நடாத்த தேர்தல் ஆணைக்குழு விடாப்பிடியாக இருந்தாலும், இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுகின்ற போது, அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடாத்த துணியாமல் தேர்தல் ஆணைக்குழுவுடன் முரண்டு பிடிக்கலாம்.  

    ஆனால், பிரதமர் ஒருவேளை இந்த விவகாரத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற நபர் என்பதை ஆணைக்குழு கண்டறிந்து கூறுமாயின் அது ரணிலின் ஐ.தே.கட்சிக்கு பிளஸ் பொயின்டாக அமையும். தனது பதவியில் இருந்து இறங்கி, ஆணைக்குழு முன் ஆஜராகி, தன்னை தூய்மையானவர் என நிரூபித்த ஒரு மிகப் பெரிய ஆளுமையாக ரணில் விக்கிரமசிங்க மதிக்கப்படுவார். இது உள்ள10ராட்சித் தேர்தலில் தாக்கம் செலுத்தி ஐ.தே.கவின் வாக்குகளை அதிகரிக்கும். எனவே, அக்கட்சி உடன் தேர்தலை நடாத்த விரும்பும். ஆனால் இப்படியான நிலையில் தேர்தல் நடைபெறுவதை விரும்பாத சு.க.வோ கூட்டு எதிரணியோ, தேர்தலை குழப்பியடித்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

    முக்கோண போட்டி
    இதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உறவு துளிர்க்கக் கூடும் என்ற சாத்தியம் இருந்தபோது, மஹிந்த தரப்புடன் இணைய ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியும் தயார் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளமை ஒன்றுக்கொன்று தொடர்புபட்டது என்பதுடன் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை போலவும் தோன்றுகின்றது. 

    ஏனெனில், இப்போதிருக்கின்ற முக்கோண அதிகாரப் போட்டிச் சூழலில் மைத்திரி – ரணில் உறவு பலமிழந்து செல்லுமாயின், மஹிந்தவுடன் ரணில் தரப்பு சேர்ந்தாலும் மைத்திரி தரப்பு சேர்ந்தாலும் ஆட்சிக் கட்டமைப்பில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படக் கூடும். இதுவும் உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தலை திட்டமிட்டபடி நடாத்துவதில் தாக்கம் செலுத்தும். 

    இதுஇவ்வாறிருக்க, வழக்கம் போல தம்முடைய வாக்குவங்கிகள் பற்றிய அச்சம் ஆட்சியிலுள்ள இரு பெருந்தேசியக் கட்சிகளுக்கும் இருக்கின்றது. ஏனென்றால், உள்ள10ராட்சி சபையே ஒரு நாட்டின் அடிமட்ட ஆட்சிக் கட்டமைப்பாகும். மாகாண சபைக்கும் அங்கிருந்து பாராளுமன்றத்திற்கும் செல்வதற்காக அடிப்படை அரசியலை பயிலும் களமாகவே பலரும் உள்ள10ராட்சி மன்றங்களை பயன்படுத்துவதை காணக் கூடியதாகவுள்ளது.
    இந்நிலையில், தனித்தனியாக போட்டியிட்டு பெரும்பான்மையான உள்ள10ராட்சி சபைகளை கைப்பற்ற முடியுமா என்பதில் ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இருந்துவந்த சந்தேகம் இப்போது அச்சமாக மாறிக் கொண்டிருக்கின்றது எனலாம். அரசாங்கம் மக்களை தம்வசப்படுத்துவதில் மேற்கொண்ட தவறுகள் உள்ளடங்கலாக பல்வேறு பின்னடைவுகள் மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சிகளின் வாக்குத்தளத்தில் ஏற்பட்டுள்ள சரிவு என்பனவே இவ்வச்சத்திற்கு காரணமாகியிருக்கலாம். 
    உள்ளுராட்சி தேர்தல் என்பது, ஒவ்வொரு ஊருக்குள்ளும் நடக்கின்ற குட்டி ராஜாங்கத்திற்கான போட்டியாகும். எனவே, அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் அநேகமாக தனித்தனிச் சின்னங்களிலேயே போட்டியிட்டு அந்தந்த சபைகளை கைப்பற்ற முயற்சி செய்யும். குறிப்பாக முஸ்லிம் கட்சிகளில் சில இடங்களில் தனித்தனியாக போட்டியிடுவது, ஆளும் கட்சிகளுக்கு நேரடியான வெற்றியாக அமையாது.
    வேறு சில இடங்களில் முஸ்லிம் கட்சிகள் சு.க. அல்லது ஐ.தே.வுடன் சேர்ந்து போட்டியிட்டாலும் அந்த முஸ்லிம் கட்சிகளும் இன்றிருக்கின்ற நிலையில் உள்ள10ர் அதிகாரத்தை வெற்றிகொள்ளும் என்றும் கூற முடியாதுள்ளது. இதுவும் பெருந்தேசியக் கட்சிகளுக்கு ஒரு தலையிடியாகும். எனவே, இவ்வாறான பல்வகைப்பட்ட குழப்பங்கள், நெருக்கடிகள், வழக்காடல்களை வைத்துப் பார்க்கின்ற போது தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஒவ்வொரு சாதரண பொதுமகனுக்கும் எழுந்திருக்கின்றது.
    ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதும் நாம் அறியாததல்ல.
     (வீரகேசரி 11.11.2017)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல்கால நெருக்கடிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top