– ரவூப் ஸய்ன் –
தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள இடைக்கால
அறிக்கையில் முஸ்லிம் சிவில் சமூகத்தின் யோசனைகள் எதுவும்
உள்வாங்கப்படவில்லை என்பது தெட்டத் தெளிவானது. தேசிய ஷூறா சபை, ஜம்இய்யதுல்
உலமா, நாட்டின் நாலா புறங்களிலுமுள்ள சிவில் நிறுவனங்கள் தனித்தனியாகவும்
கூட்டாகவும் முன்வைத்த அரசியல் யாப்பு தொடர்பான பிரேரணைகள் எதற்கும்
நல்லாட்சி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதை முன்வைக்கப்பட்டுள்ள
இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் உணர்த்துகின்றது.
இந்த லட்சணத்திலேயே மாகாண சபை எல்லை
மீள்நிர்ணயம் தொடர்பாக சிவில் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று
சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதன் உள்ளர்த்தம் மங்கலாகவே உள்ளது.
உள்ளூராட்சி எல்லை நிர்ணய அறிக்கை
வெளியிடப்பட்டதன் பின்னர் முஸ்லிம்களின் கோரிக்கைகள் அதில்
உள்ளடக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் மேலெழுந்தன. அதற்குப் பதிலளித்த
அமைச்சர் பைசர் முஸ்தபா, கலந்துரையாடல்களுக்கு சமூகமளிக்காத முஸ்லிம்
கட்சிகள் இப்பொழுது அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதாக ஊடகவியலாளர்
சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இன்றைய மிகப் பெரிய அரசியல் விநோதம்
என்னவெனில், உள்ளூராட்சி மற்றும் எல்லை நிர்ணய விவகாரங்களுக்குப் பொறுப்பாக
இருப்பவர் ஒரு முஸ்லிம் அமைச்சர். எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்
சமூகத்திற்கு ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் குறித்த எந்தப் பிரக்ஞையும்
அவருக்கு இருக்கவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதியாக மட்டுமே தன்னைக்
காட்டிக் கொள்ளும் அவர், முஸ்லிம் பிரச்சினைகள் குறித்து எதுவும் அறியாதவர்
போல் நடந்து கொள்கிறார்.
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்
அரசியல் கட்சிகளின் நிலைப் பாட்டையே இறுதியாக அரசாங்கம் உள்ளீர்க்கின்றது.
வாய்ப்புக்கேடாக, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்
கட்சிகளோ முக்கியமான விவகாரங்களில் அசமந்தமாக இருந்து விட்டு, இறுதித்
தருணங்களில் அரசாங்கத்தை குற்றம் சுமத்துகின்றன.
முஸ்லிம் சிவில் சமூகத்தின் குரல்களுக்கு
எந்தப் பெறுமானமும் இல்லாது போய்விட்டது. எழுதுகின்றவர்கள் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள். பேசுகின்றவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
தீர்மானிப்பவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகளோ
அசமந்தமாக இருக்கின்றன.
இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தைக்
காப்பாற்றுவது யார் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அவர் பார்த்துக்
கொள்வார், இவர் பார்த்துக் கொள்வார், தேசிய ஷூறா சபை செய்யும், ஜம்இய்யதுல்
உலமா செய்யும் என பரஸ்பரம் தமக்குள்ள பொறுப்பை தட்டிக் கழித்து அவரவர்
பாட்டிலேயே இருக்கும் நமது தலைமைகளின் வங்குரோத்து நிலை மிக ஆபத்தானது.
பொறுப்புக் கூறுகின்ற, வகைகூறும் கடப்பாடு கொண்ட அரசியல் தலைவர்களும்
சிவில் நிறுவனங்களும் முனைந்து செயற்படுவதற்கான அடையாளங்கள் எதுவும்
தென்படவில்லை.
இதற்கிடையில் அதிகாரக் கையளிப்புக்கான
நகர்வுகள் மிக லாவகமாகவும் சூட்சுமமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.
“இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாங்கம்
மேற்கொண்டுள்ளது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான துணிவாற்றல்
சிங்களத் தலைவர்களுக்கு வேண்டும்” என்கிறார் சுமந்திரன். “அடுத்த தீபாவளியை
தமிழர்கள் நிம்மதியாகவும் திருப்தியாகவும் கொண்டாடலாம்” என்கிறார்
சம்பந்தன்.
இந்த வாக்கியங்களுக்குப் பின்னாலுள்ள
அரசியல் என்ன? தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான தீர்வுப்
பொதி மேசையில் வைக்கப்பட்டுவிட்டதையே இவை குறிப்புணர்த்துகின்றன. தமிழ்
டயஸ்பொரா உள்ளிட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம்
என்பன வும் இந்த அதிகாரக் கையளிப்புக்குப் பின்னால் இருந்து
செயல்படுகின்றன.
ஜனவரித் தேர்தலை முன்னிறுத்தி பிரதமரும்
ஜனாதிபதியும் இதனை அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர். நாம் மகாநாயக்கர்களோடு
பேச்சுவார்த்தை நடத்துவோம். இலங்கையைப் பிளவுபடுத்தும் தீர்வுத்
திட்டத்திற்கு ஆதரவளியோம் என பிரதமரும் ஜனாதிபதியும் திரும்பத் திரும்பக்
கூறுவது உள்ளூராட்சித் தேர்தலை முன்னிறுத்திதான் என்பதை மிக எளிதாக
ஊகிக்கலாம்.
தேர்தல் முடிந்த கையோடு மகா நாயக்கர்களின்
எதிர்ப்பையும் ஆட்சேபனைகளையும் கடந்து செல்லும் தீர்மானத்தை நல்லாட்சி
அரசாங்கம் நிச்சயம் எடுக்கத்தான் போகின்றது. இந்நிலையில், முஸ்லிம்களின்
அடிப்படைப் பிரச்சினைகளுக்கு யார் என்ன தீர்வை முன்மொழியப் போகின்றார்கள்?
அதனை அடைவதற்கான பொறிமுறை என்ன என்பது தெளிவற்றதாகவே உள்ளது.
இடைக்கால அறிக்கையில் “வடக்கு மற்றும்
கிழக்கு மாகாணங்களை தனியொரு மாகாணமாக அமைப்பது குறித்தான யோசனைகளை புதிய
அரசியலமைப்பு எடுத்துக் கொள்கின்றது” என்ற வாசகம் முஸ்லிம்களைத் திடுக்கிட
வைக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டணியினர் ஒருமித்த நாட்டிற்குள்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறது.
நல்லாட்சி அரசாங்கமோ இதனை “உச்சகட்ட அதிகாரப் பகிர்வு” என்கிறது.
இச்சொற்கள் உணர்த்தும் பொருள் என்ன?
அதிகாரங்கள் மாகாணங்களுக்கோ மாநிலங்களுக்கோ பகிர்ந்தளிக்கப்பட்டால் அது
சமஷ்டியாகவோ கூட்டாட்சியாகவோ மாறிவிடும். அங்கு ஒருமித்த நாடு என்பதற்குப்
பொருள் இல்லை. ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு என்பது சமஷ்டியைத்
தான் குறிப்பிடுகின்றது. ஆக, இன்றைய அரசியல் தளத்தில் சொற்களின் நுணுக்கமான
அரசியலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இத்தகையதொரு கொதிப்பான அரசியல் சூழலில்,
தமிழர்களின் தீர்வுத் திட்டத்திற்குக் குறுக்கே முஸ்லிம் காங்கிரஸ்
நிற்காது என்று நிஸாம் காரியப்பர் மிக எளிதாகச் சொல்லிவிட்டார். யாரும்
யாருக்கு எதிராகவும் குறுக்காய் நிற்கத் தேவையில்லை. ஆனால், மரம்
விருட்சமாக வேண்டும் என்பதற்காக கீழே உள்ள செடிகளும் கொடிகளும் அகற்றப்பட
வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகத்திற்கு உடன்பாடில்லை.
இன்றைய அரசியல் நகர்வுகள் நாளைய முஸ்லிம்
சமூகத்தைப் பலிக் கடாவாகவோ பகடைக்காயாகவோ ஆக்கிவிடக் கூடாது. அரசியலமைப்பு
மாற்றம் என்பது இலங்கையின் எதிர்கால அரசியல் வரலாற்றில் இனி ஒருபோதும்
நிகழப் போவதில்லை. இந்த தகுந்த தருணத்தை கைநழுவ விட்டு விட்டு கடந்து சென்ற
பேருந்துக் காக கைகாட்டி நிற்பதில் அர்த்த மில்லை. இந்த உண்மையை இன்றைய
அரசியல் தலைவர்களும் சிவில் சமூகமும் புரிந்து செயல்பட வேண்டும்.
பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல்
எதிர்காலம் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் எல்லா வகை அரசியல்
நகர்வுகளும் காய்நகர்த்தல்களும் முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக
உள்ளன. அரசிய லமைப்பு மாற்றமாக இருக்கட்டும், தேர்தல் முறை மாற்றமாக
இருக்கட்டும், எல்லை மீள்நிர்ணயமாக இருக்கட்டும். எதுவும் நமக்குச்
சாதகமாய் இல்லை. இத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம் கட்சிகளோ தெருச்
சண்டையில் ஈடுபட்டுள்ளன.
எல்லை மீள்நிர்ணயத்தின் பின்னரான அரச
வர்த்தமானி அறிவித்தல் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே நுவரெலியா
மாவட்டத்தில் இரு பிரதேச சபைகளை புதிதாக உருவாக்கிக் கொள்ள
திகாம்பரத்தாலும் மனோ கணேஷனாலும் முடிந்தது. ஆனால், அம்பாறையில்
சாய்ந்தமருது, கல்முனை பிரதேச சபைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுசொல்ல
ஹக்கீமாலும் ரிஷாதாலும் முடியாமல் போய்விட்டது. இதுவே எமது அரசியல்
வங்குரோத்தின் தெளிவான அடையாளம்.
இலங்கை முஸ்லிம்கள் சுமாராக ஒரு நவீன
‘தைம்’ சமூகமாகவே மாறி வருகின்றனர். ஜாஹிலிய்யக் காலத்தில் அறபுத்
தீபகற்பத்தில் ‘தைம்’ என்றொரு கோத்திரம் இருந்தது. அவர்கள் அளவில் பெரிய
கோத்திரமாக இருந்தபோதும், அவர்களின் கருத்துக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை.
அன்றைய சமூக அமைப்பில் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு தொடர்பான
கூட்டங்கள் கோத்திரங்களுக்கு இடையே நடைபெறுகின்றபோதும் தைம்
கோத்திரத்திற்கு யாரும் அழைப்பு விடுப்பதில்லை.
அத்தி பூத்தாற் போல எப்போதாயினும் ஒரு
அழைப்பு வரும். கலந்து கொள்கின்ற இந்தக் கோத்திரத்தவர்களும் கூட்டத்தில்
செல்வாக்குச் செலுத்தும் அளவு கருத்துச் சொல்வதில்லை. அவ்வாறு சொன்னாலும்
அவை எடுபடுவதுமில்லை. கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்வதும் கலந்து
கொள்ளாமல் இருப்பதும் ஏனைய கோத்திரங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.
அறபுத் தீபகற்பத்தில் முக்கிய விவகாரங்கள்
குறித்து இவர்களிடம் எந்தக் கருத்தும் கோரப்படுவதுமில்லை. கூறினால் அவை
ஏற்கப்படுவதுமில்லை. இதேபோன்றுதான் இன்று இலங்கை முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளும் ஆழ்ந்த
சமூக அக்கறையற்ற வில் தலைமைகளும் என முஸ்லிம் சமூகம் மிக மந்த கதியிலேயே
இயங்கிக் கொண்டிருக்கிறது. வில்பத்து விவகாரம், ஞானசாரவின் அச்சுறுத்தல்கள்
குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்காத ஜனாதிபதியுடன் கட்டாருக்குச் சென்ற
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அங்கு ஜனாதிபதியுடன்
பல்லிழித்துக் கொண்டிருக்கும் காட்சி ஊடகங்களுக்கு வந்தது. ஜனாதிபதியுடன்
இத்தனை நெருக்கமாக இருக்கும் இவர்கள், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து
கறாராகப் பேசுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்பது தான் ஆச்சரியமான
கேள்வியாகும்.
முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து இன்றே சிந்திப்போம். காலம் கடந்து கைசேதப்படுவதால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

0 comments:
Post a Comment