• Latest News

    November 27, 2017

    இன உறவுகள் வலுப் பெறும் கருத்துக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.

    - எம்.சஹாப்தீன் -
      இலங்கையின் இன ஐக்கியம் மீண்டும் சீரழிக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை எல்லா சமூகங்களிலும் உள்ள இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு தனி மனிதரும் தமது இனத்தின் மீது பற்றுதல் கொள்ளல் வேண்டும். தமது இன மக்களை நேசிக்க வேண்டும். தமது இனத்தின் மீதான பற்றுதல் இனவாதமாக மாறிவிடக் கூடாது. இனவாதம் மாற்று இனத்தவரை இழிவுபடுத்தவும், உரிமைகளை மறுக்கவும், வரலாற்றை திரிபுபடுத்தவும் செய்கின்றது. தமது இனம் மாத்திரமே எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்ற சிந்தனையே இனவாதத்தை தூண்டுகின்றது. பெரும்பாலும் இனவாதத்தை தூண்டுகின்றவர்கள் அரசியல்வாதிகளாகவே உள்ளார்கள். தங்களின் சுய இலக்கை அடைந்து கொள்வதற்காக இனவாத்தை கையில் எடுக்கின்றார்கள். இனவாதத்தின் உச்சக் கட்டம்தான் மாற்று இனத்தவரை கொலை செய்வது, அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது, வாழ்விடத்திலிருந்து அவர்களை துரத்துவது போன்ற நடவடிக்கைகளை அமைக்கின்றன. இவை அனைத்தையும் நாம் இலங்கையில் பார்த்துள்ளோம். தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டில் எப்போது இனவாத செயற்பாடுகள் முற்றாக ஒழிக்கப்படுகின்தோ அன்றுதான் இந்நாடு உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும்.

      தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பௌத்த இனவாதிகளும், பேரினவாதிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மையினர் எவ்வளவு பொறுமையுடனும், விட்டுக் கொடுப்புடனும் இருந்தாலும் இனவாதிகளின் கோரப்பற்கள் சிறுபான்மையினரை கடித்துக் கொண்டே இருக்கின்றன. இதனை முறியடிப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுதல் வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுதல் வேண்டுமென்பதற்காக பல மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஒரு சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தமிழ், முஸ்லிம் உறவுகளை கட்டியெழுப்புவதில் தடைகளாக இருந்து கொண்டிருக்கின்றன.

      இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்று தமிழர் தரப்பினரும், வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென்று முஸ்லிம் தரப்பினரும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கும், கிழக்கும் இணைவதனை முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று நிபந்தனையும் விதித்துள்ளது. இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் நிற்கக் கூடாதென்று தமது நல்லபிப்பராயத்தையும் வெளியிட்டுள்ளார்.

      வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்பதில் தமிழ் அரசியல் தலைவர்களிடையே வேறுபாடுகள் கிடையாது. எல்லா தமிழ்க் கட்சிகளும் இதில் உறுதியாகவே இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் கட்சிகளிடையேயும், மக்களிடையேயும் வடக்கு, கிழக்கு இணைவதில் கருத்து முரண்பாடுகள் இருப்பதனால் முரண்பாடான கருத்துக்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
      வடக்கும், கிழக்கும் இணையுமாக இருந்தால் மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடுமென்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் அமைப்பு சபையில் தெரிவித்துள்ளார்.

      கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 42 சதவீதம் வாழ்கின்றார்கள். நாட்டிலே கிழக்கு மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாட்டின் வரலாற்றினை எடுத்துப் பார்க்கையில் வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்தபோது இரத்த ஆறு ஓடியது. கிழக்கு மாகாணத்தில் இருந்த மூவினங்களும் பிரிந்திருந்தனர். கிழக்கு மாகாணம் தற்போது அமைதியாக இருக்கின்றது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தினை தமிழ் சகோதரர், முஸ்லிம் சகோதரர் என மாறிமாறி முதலமைச்சராக இருந்துள்ளார்கள். மூன்று இனக் குழுவையும் பிரதிநிதித்துவப்படும் அமைச்சரவையொன்று காணப்படுகின்றது. இந்த விசேட தன்மையானது ஏனைய மாகாணங்களில் இல்லை.

      வடக்குடன் கிழக்கு இணைந்திருந்தாக வரலாறொன்று இல்லை. கிழக்குடன் வடமத்திய மாகாணத்தினை இணைத்து ஆட்சி நடத்தியமைக்கான  வரலாறு இருக்கின்றன. எனவே வடக்கினை கிழக்குடன் இணைக்க வேண்டும் என்று கோருவதில் நியாயமில்லை. இந்த நட்டில் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது இனங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும் என்று  அவர் தெரிவித்துள்ளார்.
      ஹிஸ்புல்லாஹவின்; இக்கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. வடக்கும், கிழக்கும் இணையக் கூடாதென்று கூறுவதற்கும் அவருக்கு உரிமையுண்டு. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கு கடந்த காலங்களில் எற்பட்ட கசப்பான சம்பவங்கள்தான் தடையாக இருக்கின்றது. வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த போது ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் காணப்பட்டன. இக்காலப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஆயுதக் குழுக்களினால் பல வகையிலும் அச்சுறுத்தப்பட்டார்கள்.

      வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த போது தமிழ் உயர் அதிகாரிகள் முஸ்லிம்களை புறக்கணித்துச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்குளும் உள்ளன. இவைகள் இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ளன. இதனால்தான் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு, கிழக்கு இணைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அத்தகையதொரு நிலைப்பாட்டையே ஹிஸ்புல்லாஹ்வும் வெளியிட்டுள்ளார். ஆனால், வடக்கும், கிழக்கும் இணைந்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடுமென்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. வடக்கும், கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம்களிடம் காணப்படும் கடந்த கால கசப்பான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். அத்தகைய உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் தமிழர் தரப்பினர் முன் வைக்கவில்லை. வடக்கும், கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கும் அதில் ஓரளவு அதிகாரம் கிடைக்கும், முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்போம் என்றெல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் வடக்கும், கிழக்கும் இணையும் போது முதலமைச்சர் பதவியையோ, ஓரளவு அதிகாரத்தையோ விரும்பவில்லை. தமிழர்களைப் போல் முஸ்லிம்களும் அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றே விரும்புகின்றார்கள். வடக்கும், கிழக்கும் இணையும் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் சுமார் 18 வீதமாக குறைவடையும். ஆதலால், முஸ்லிம்களுக்கு ஏற்படவுள்ள இத்தகைய பாதிப்பை ஈடுசெய்யக் கூடியவாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதனை ஏற்றுக் கொள்வார்கள்.

      வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தால் தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாட்டில் மாற்றங்கள ஏற்பட வேண்டும். ஆனால், இதனைச் செய்யாது முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை தருகின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்டபை;பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தமை முஸ்லிம்களுக்கு பதவியைக் கொடுத்து சமாளித்துக் கொள்ளலாமென்ற எண்ணத்தில் அவர் உள்ளாரென்று தெரிகின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வாறு இருக்கலாம். புதவிக்கும், பணத்திற்கும் இணைவதற்கு சம்மதிக்கலாம். ஆனால், முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இவ்வாறில்லை. இன்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான அரசியல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல் கட்சிகளினால் ஏற்படுத்த முடியாது. முஸ்லிம்கள் மத்தியில் பிரதேச ரீதியாக உள்ள சிறு  சிறு அமைப்புக்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வமைப்புக்கள் அரசியல் நோக்கங்களைக் கொண்டவையல்ல. இத்தகைய அமைப்புக்களே முஸ்லிம்களின் அரசியல் போக்கை தீர்மானிக்கின்றன. இந்நிலைப்பாடு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் கட்சிகள் பிரதேச ரீதியாக உள்ள அமைப்புக்களிலேயே தங்கியுள்ளன.
      முஸ்லிம்களிடையே இவ்வாறு பலத்த அச்சம் உள்ள நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முஸ்லிம்களிடையே பலத்த விமர்சனைங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களிடையே காணப்படும் அச்சத்தை வலுப் பெறவும் செய்துள்ளது. வட மாகாண முதலமைச்சர் முன் வைத்துள்ள கருத்துக்கள் வடக்கும், கிழக்கும் ஒரு போதும் இணையக் கூடாது. தமிழர்களின் எண்ணப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்ற நிலைப்பாட்டையும், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் கருத்துக்களுக்கு வலுச் சேர்ப்பதாகவும் உள்ளது.

      முஸ்லிம் மக்களுள் இரு வகையினர் உள்ளார்கள். தென் இந்தியாவிலிருந்து மரக்கலங்களில் குடியேறியவர்கள். மத்திய கிழக்கிலிருந்து வந்து குடியேறியவர்கள். தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களில் பலர் தமிழ்ப் பாரம்பரியங்களில் திளைத்தவர்கள். அவர்கள் முதலில் தமிழர். அடுத்து இஸ்லாமியர்கள். அடுத்த பிரிவினர் தமது மதத்திற்கு முதலிடம் கொடுப்பது மட்டுமல்ல. தம்மை வோறொரு இனமாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள். அவர்கள்தான் வட கிழக்கை எதிர்ப்பவர்கள் என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

      இவரின் இக்கருத்துக்கள் தமிழ் தலைவர்கள் இன்னும் முஸ்லிம்களை தனி இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைக் காட்டுகின்றது. 1885ஆம் ஆண்டு  பிரித்தானியா இலங்கையின் சுதேச மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த போது முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக வாதாடினார்கள். இதன் போது முஸ்லிம்களுக்கு எதிராக சேர் பொன் இராமநாதன் 'முஸ்லிம்கள் தனியொரு இனம் அல்ல, தமிழர்களின் வழித்தோன்றல்கள், அவர்களுக்கு பிரத்தியோகமான பிரதிநிதித்துவம் அவசியமில்லை, அவர்கள் இஸ்லாமிய தமிழர்கள் என்று குறிப்பிட்டு பிரித்தானிய அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றினை முன் வைத்தார்.

      இக் கருத்துக்கு எதிராக ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம் மற்றும் பாரம்பரியத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, முஸ்லிம்கள் தனியொரு இனமென்று உறுதிப்படுத்தினார்கள். இதனை ஏற்றுக் கொண்ட பிரித்தானியா 1889ஆம் ஆண்டு எம்.சீ.அப்துர் ரஹ்மானை சட்ட நிருபண சபையின் உறுப்பினராக நியமித்தது.

      ஆகவே, விக்னேஸ்வரன் இந்த வரலாற்றை மறந்து பேசக் கூடாது. முன் வைக்கப்படும் கருத்துக்கள் தமிழ், முஸ்லிம் இனங்களின் உறவை வளர்ப்பதாகவும், அவர்களிடையே காணப்படும் அச்சங்களை இல்லாமல் செய்வதாகவும் இருக்க வேண்டும். பௌத்த இனவாதம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் தீர்வினை இல்லாமல் செய்வதற்கு வரிந்து கட்டிக் கொண்டு அடவாடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் முஸ்லிம்களை குறி வைத்து ஆயுதாரிகளாக முஸ்லிம் பிரதேசங்களில் உட்புகுந்து தாக்குதல்கைளை மேற்கொள்ளும் போது வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் முஸ்லிம்களை எவ்வாறு பாதிக்கச் செய்யும் என்று சிந்திக்க வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களின் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படாத வரையில் வடகிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை.
      முஸ்லிம்களைப் பொருத்த வரை அவர்கள் தங்களை மொழியினால் அடையாளப்படுத்துவதில்லை. மதத்தின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர் எந்த மொழியை பேசினாலும் தன்மை முஸ்லிம் என்றே சொல்லுவார். இதுதான் உலகத்தில் முஸ்லிம்கள் அனைவரினதும் நிலைப்பாடாகும். முஸ்லிம்களின் வரலாற்றைப் பார்த்தால் அது உலகின் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களின் வழித் தோன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. அந்த வரலாற்றை கூறுவது எமது நோக்கமல்ல. தமிழ், முஸ்லிம் உறவுகள் முரண்பாடான கருத்துக்களினால் மேலும் விரிசல் அடைந்து விடக் கூடாதென்பதாகும்.

      வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக இணைக்கப்பட்டன. இதற்கு முஸ்லிம் தரப்பின் அபிப்ராயம் கேட்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட முஸ்லிம்களின் விகிதாசாரம் 33 வீதத்திலிருந்து 17 வீதமாக குறைவடைந்தது. இதனால், முஸ்லிம்களிடையே இணைப்புக்கு எதிர்ப்பு காணப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டுதான் மர்ஹும் அஸ்ரப் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமாயின் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற மாகாணம் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார். இதனைக் கூட தமிழர் தரப்பினர் அன்று ஏற்றுக் கொள்ளவில்லை. அது சாத்தியமில்லை என்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தனித் தமிழீழத்தை வேண்டினார்கள். தமிழ்க் கட்சிகளும் இதற்கு ஆதரவாகவே இருந்தன.

      ஆயினும், தற்போது தமிழ்த் தரப்பினர் தனித் தமிழீழக் கோரிக்கையையும், சமஸ்டியையும் கைவிட்டு ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வினை வேண்டுகின்றார்கள். வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்றும் கூறுகின்றார்கள். இது போலவே முஸ்லிம்களின் நிலைப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் வடக்கும், கிழக்கும் இணைவதனை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆகவே, அரசியல் நகர்வுகளுக்கு இடையே தீர்வு குறித்தான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும். அதனையே முஸ்லிம்களும் செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் இந்த நிலைப்பாட்டிற்கு தமிழ்த் தலைவர்களின் கருத்துக்கள்தான் காரணமாகும்.

      அதற்காக அன்று வடக்கும், கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம்கள் சம்மதித்த போது முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் தமிழர்களை விடவும் குறைவாக இருந்தது. அதனால் அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்றும், இன்று முஸ்லிம்களின் விகிதாசாரம்  தமிழர்களை விட அதிகமாக இருப்பதனால் கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டுமென்று; கேட்கின்றார்கள் என்று யாரும் கூற முடியாது. மேலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் அதிகரிப்பு 05 வீதமாகவும், சிங்களவர்களின் இனவிகிதாசார அதிகரிப்பு 02 வீதமாகவும், தமிழர்களின் இனவிகிதாசார அதிகரிப்பு 01 வீதமாகவும் உள்ளதாகவும், முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றப் போகின்றார்கள் என்றேல்லாம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். முஸ்லிம்கள் எந்தவொரு இனத்திற்கும் போட்டியாக தமது இனவிகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ளவில்லை. மட்டுமல்லாது தமிழ்ச் சகோதரர்கள் இன விகிதாசாரத்தை அதிகரிக்கக் கூடாதென்றும் கூறவில்லை. வடமாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணம் தங்களின் கைகளை விட்டுப் போகப் போகின்றது என்ற கவலையில் சொல்லியிருக்கலாம். இக்கவலை ஏற்றுக் கொள்ளக் கூடியததுதான். ஆனால், கிழக்கு மாகாணம் கையைவிட்டுப் போகப் போகின்றது என்பதற்காக வடக்கும். கிழக்கும் இணைய வேண்டுமென்று கூற முடியாது. எந்த இனம் கிழக்கு மாகாணத்தில் அதிகமாக இருந்தாலும் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தால் இரண்டு இனங்களுக்கும் பாதுகாப்பும், உறுதி ஏற்படுமென்றால் அதற்குரிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
     
      முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு தனியே இருக்க வேண்டும். இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்கின்றார்கள், தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களை தூரமாக்கும் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் மறைமுகமாக கிழக்கு மாகாணம் தனியே இருக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்ற எண்ணத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை வடகிழக்கு இணைப்புக்கு ஆதரவானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    நன்றி - வீரகேசரி 26.11.2017

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன உறவுகள் வலுப் பெறும் கருத்துக்கள் முன் வைக்கப்பட வேண்டும். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top