ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் சாய்ந்தமருதில் உள்ள கவிஞர் பரீட்சனின் இல்லத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருதை சேர்ந்த 200 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவால் சுற்றி வளைத்து மடக்கப்பட்டார்.
கவிஞர் பரீட்சன் எழுதிய முரண்பாட்டு சமன்பாடுகள் கவிதை நூல் மீதான வாசிப்பு அனுபவ பகர்வு அவரின் இல்லத்தில் இரவு 7.00 மணி முதல் இடம்பெற்றது. இதில் இலக்கியன் முர்சித், எழுத்தாளர் சாஜித் மற்றும் இனாம் அக்னா, கவிதாயினி திருமலை சஹீ, கல்முனை வர்த்தகர் சங்க தலைவர் ஷாபி ஹாத்திம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தனியான பிரதேச சபை வேண்டும் என்கிற சாய்ந்தமருது மக்களின் அரசியல் அபிலாஷையாக உள்ளது. ஆனால் சாய்ந்தமருதுக்கு மாத்திரம் தனியான பிரதேச சபை கொடுக்கப்படுவதை கல்முனையை சேர்ந்த அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் முழுமையாக நிராகரிக்கின்றார்கள். இந்நிலையில் சாய்ந்தமருது மக்களின் கோபம் கல்முனையை சேர்ந்த அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பெரிதும் திரும்பி உள்ளது.
சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கைக்கு வலிமை சேர்ப்பதாக சம்பவத்துக்கு சற்று முன்னர் கல்முனையை நோக்கி நடத்தப்பட்ட மாட்டு வண்டி பேரணியில் களேபரம் மூண்டதை அடுத்து ஏற்பட்ட கோபத்துடனேயே சாய்ந்தமருதை சேர்ந்த பல நூற்று கணக்கான இளைஞர்கள் ஜவாத் வந்திருப்பதை அறிந்து கவிஞர் பரீட்சனின் வீட்டை முற்றுகையிட்டனர். ஜவாத், ஷாபி ஹாத்திம் ஆகியோர் கவிஞரின் வீட்டில் இருந்து வெளியே வந்து விட முடியாதபடி மறியல் போட்டார்கள். வீட்டுக்கு கல்லால் எறிந்தனர்.
ஆனால் சம்பவத்தை கேள்விப்பட்ட ஜவாத்தின் குடும்பத்தினர் கல்முனை பொலிஸாருக்கு மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து விசேட பொலிஸ் குழு ஒன்று விசேட அதிரடி படையினருடன் கவிஞர் பரீட்சனின் வீட்டுக்கு வந்து ஜவாத், ஷாபி ஹாத்திம் ஆகியோரை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றது. இருப்பினும் சம்பவம் தொடர்பாக எவரும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
அவருடைய வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என்று கவிஞர் பரீட்சன் என்கிற புனைபெயரால் அறியப்படுகின்ற கிழக்கு தேசத்தின் நிறுவுனரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளருமான வஃபா பாருக் எமக்கு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கருத்து கூறுகையில் முஸ்லிம்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தையே நடந்து முடிந்த சம்பவம் படம் பிடித்து காட்டி உள்ளது என்றார்.
இதனிடையில் முன்னாள் அமைச்சரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகருமான பஷீர் சேகு தாவூத் தொலைபேசியில் வஃபா பாருக்கை தொடர்பு கொண்டு மிகுந்த கரிசனையுடன் சம்பவம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது சாய்ந்தமருது – கல்முனைக்கு இடையிலான பிரச்சினை இனியும் நீடிக்கப்பட கூடாது, இப்பிரச்சினையை தீர்த்து வைக்கின்ற முயற்சியில் முன்னின்று செயற்பட வாருங்கள் என்று பஷீர் சேகு தாவூத்துக்கு வஃபா பாருக் அழைப்பு விடுத்தார்.

0 comments:
Post a Comment