• Latest News

    December 04, 2017

    உள்ளுராட்சி தேர்தல்: கட்சிகளின் செல்வாக்கை பரிசோதிக்கும் ஆய்வு கூடமாகும்

    - சஹாப்தீன் -
      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் என்றுமில்லாத வகையில் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கடசியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அரசியல் நகர்வுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலம் பற்றிய எந்த பிரஞ்ஞையும் இல்லாதிருப்பதாகவும், அக்கட்சியின் உயர்பீடம் தலைமையின் கைகளுக்குள் அகப்பட்டுள்ளதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதே வேளை, ஒரு சிலர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனம் செய்து மொட்டைத் தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சுப் போடுவதற்கும் எத்தனிக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் குரல் என்று கருதப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையிலும், அது முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையிலும் ரவூப் ஹக்கீமினதும், அக்கட்சியினதும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடை போட்டுப் பார்ப்பதனை குறை காண முடியாது.

      இந்தப் பின்னணியில் இலங்கை தேர்தல் ஆணைக் குழு உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்குரிய வேட்பு மனுக்களை கோரியுள்ளது. உள்ளுராட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டுமொரு தடவை தமக்குரிய மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டியதொரு இக்கட்டில் மாட்டியுள்ளது. ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீம் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இருந்து கொண்டிருக்கின்றார். இக்காலப் பகுதிக்குள் இக்கட்சி பல்வேறு தடைகளை தாண்டி வந்துள்ளது. ரவூப் ஹக்கீமின் தலைமை மீது அதிருப்தியடைந்து ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், றிசாட் பதியுதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் என பலர் கட்சியை விட்டும் விலகிச் சென்றார்கள். இவ்வாறு விலகிச் சென்றவர்களின் பட்டியல் நீண்டதாகும். இவர்கள் எல்லோரும் ரவூப் ஹக்கீமை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், அனைத்து விமர்சனங்களையும் தாண்டி கட்சியின் செல்வாக்கை நிலை நிறுத்தியது மட்டுமல்லாது, தமது தலைவர் பதவியையும் தக்க வைத்துக் கொண்டார். இதனால், தற்போது முன் வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களிலிருந்தும் அவர் தம்மையும், கட்சியையும் பாதுகாத்துக் கொள்வார் என்ற அதீத நம்பிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்ள தலைமைத்துவ விசுவாசிகளுக்கு இருக்கின்றது. ரவூப் ஹக்கீம் பிரச்சினைகளை கையாள்வதிலும், அதில் வெற்றி பெறுவதிலும் கை தேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

      ஆனால், ரவூப் ஹக்கீமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடந்த காலங்களில் எதிர் கொண்ட விமர்சனங்களுக்கும், இன்று எதிர் கொள்கின்ற விமர்சனங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுதான் ரவூப் ஹக்கீமையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் பெரும் சோதனைக்கு உட்படுத்தும் என்று எதிர் கூறப்படுகின்றன.

      கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ரவூப் ஹக்கீமும் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களினால் விமர்சிக்கப்பட்ட போது அதனை முஸ்லிம்கள் பேரினவாதிகளின் சதி என்றுதான் முடிவு செய்தார்கள். இதனால் கட்சியையும், தலைமையையும் பாதுகாக்க வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்தார்கள். மேலும், அன்றைய கால கட்டத்தில் இனப் பிரச்சினைக்குரிய தீர்வுகள் முன் வைக்கப்படவில்லை. நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதே அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகளை முன் வைக்கவில்லை. தற்போது நாட்டில் யுத்தமில்லை. இனப் பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வு முன் வைக்கப்படும் காலமாக மாறியுள்ளது. புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. இதற்காக இடைக்கால அறிக்கை ஒன்றினையும் அரசாங்கம் முன் வைத்துள்ளது. இவற்றோடு தொடர்புபட்ட வகையிலேயே ரவூப் ஹக்கீமுக்கு எதி;ரான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

      இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம்களுக்கு எவ்வாறு தீர்வு அமைய வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் தமது நிலைப்பாட்டை உறுதியாக முன் வைக்கவில்லை. மேலும், இடைக்கால அறிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யோசனைத் திட்டங்களை முன் வைக்கவில்லை. கரையோர மாவட்டத்தைப் பற்றி பேசாதுள்ளது. வடக்கும், கிழக்கும் இணைவதனை ஏற்றுக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதனை மக்களுக்கு தெளிவூட்டாதிருப்பது குறித்தும் முஸ்லிம்களிடையே பலத்த கருத்து பேதங்கள் உள்ளன. இத்தகைய விமர்சனங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. இதனால் முஸ்லிம்கள் கட்சியை காப்பாற்றுவதா, சமூகத்தை காப்பாற்றுவதா என்றதொரு முடிவினை எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அளிக்கின்ற பதில்கள் மக்களை திருப்திப்படுத்தினால் மாத்திரமே அக்கட்சியினால் மீண்டும் தமது செல்வாக்கை எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் நிரூபித்துக் காட்ட முடியும்.

      மேலும், உள்ளுராட்சி தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமல்ல இன்றைய அரசாங்கத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் துணை போயுள்ளார்கள். இப்போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைந்துவிடும் என்று வாய் பிளக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை காண்பதனை விடவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீதுதான் முஸ்லிம்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள். முஸ்லிம்களைப் பாதிக்கச் செய்யும் சட்ட மூலத்திற்கு ஏனைய கட்சிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்கள் ஆதரவாகச் செயற்பட்டிருக்க கூடாது என்று சொல்லுகின்றார்கள். முஸ்லிம்களின் இக்கருத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களின் குரல் என்று அவர்கள் கருதிக் கொண்டிருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தப் பணியில் வழி நெடுகிலும் தவறுகளை இழைத்துள்ளது என்றும் முஸ்லிம்கள் பேசிக் கொண்டிருப்பதுதான் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருக்கின்ற மிகப் பெரிய சோதனையாகும்.

    கடந்த காலங்களில் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களின் மீதுதான் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். இதனால் கட்சியையும், தலைமையையும் பாதுகாத்துக் கொள்வதில் அதிக கடினம் இருக்கவில்லை. தற்போது கட்சியின் மீதும், தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து விடுபடுவதுதான் கடினமாகும். ஆதலால் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்குற்றச்சாட்டுக்களுக்கு அளிக்கின்ற பதில்கள்தான் கடினத்தை உடைக்கும்.

      இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சித் தேர்தலில் தலைமையினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளினாலும் சோதனைக்கு உட்படும் என்பதில் ஐயமில்லை. அதாவது கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, வவுனியா ஆகிய இடங்களில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமென்று தெரிவித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தமது நண்பரும், கட்சியின் முக்கியஸ்தருமான சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மானிடம் இரண்டு வாரங்களுக்கு மாத்திரம் வழங்கினார். ஆனால், அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்துள்ள போதிலும் ரவூப் ஹக்கீம் சல்மானிடமிருந்து தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் மேற்படி பிரதேச ஆதரவாளர்கள் தங்களை கட்சியும், தலைமையும் இரண்டு வருடங்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன என்ற மன வேதனையில் உள்ளார்கள். குறிப்பாக அட்டாளைச்சேனைக்கு கடந்த பத்து வருடங்களாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமென்று நம்ப வைத்து கழுத்தறுப்பு செய்யப்பட்டுள்ளது.

      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை என்று இதுவரைக்கும் கல்முனைத் தொகுதியே இருந்து வந்துள்ளது. இத்தொகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான கோஷங்கள் முன் வைக்கப்பட்டு தொடர் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்பட வேண்டுமென்று அப்பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புக்கள் முன் வைத்த கோரிக்கையை ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்கள் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். இதே போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனும் உள்ளுராட்சி சபையை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார். இதற்கு அமைவாக றிசாட் பதியுதீன் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படுவதற்குரிய இறுதிக் கட்ட வேலை நடைபெற்றது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அமைச்சர் றிசாட்டினை சமரசம் செய்து தடுத்துள்ளார்;. இதனால், சாய்ந்தமருது மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். எந்த அரசியல் கட்சியும் எமது பிரதேசத்திற்கு வந்து அரசியல் செய்யக் கூடாதென்றும், அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் பள்ளிவாசலினால் தீர்மானம் நிறைவேற்றி மக்களுக்கு அறிவித்துள்ளார்கள். மாநகர சபைத் தேர்தலுக்கு சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்முனை மாநகர சபைக்கு தேர்தல் நடக்கும் பட்சத்தில் சாய்ந்தமருதுக்குள் எந்தக் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில வேளை கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அவர்களுக்கு சாய்ந்தமருது மக்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகமாகும்.

     சாய்ந்தமருது மக்களின் தொடர் போராட்டங்களினால் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அங்கு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாது உள்ளன. இதனால் மிகப் பெரிய நஸ்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் அனுபவிக்கும். சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் கோட்டையாகும். கடந்த மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஆதலால், சாய்ந்தமருது மக்களின் போராட்டம் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பின்னடைவினை ஏற்படுத்தும் என்பது அக்கட்சிக்கு கசப்பான உண்மையாகும்.
      இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதும், தலைமையின் மீதும் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துரைக்கவில்லை. கட்சியையும், தலைமையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்கள் எதுவும் தெரியாதவர்கள் போல் மௌனமாக இருக்கின்றார்கள். இதே வேளை, பிரதி அமைச்சர் ஹரீஸ் கட்சியின் தலைமையுடன் பலத்த அதிருப்தியைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; தலைமையோடு முரண்பட்டு கட்சியை விட்டு தூரமாகியுள்ள முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஆகியோர்கள் ரவூப் ஹக்கீமின் தலைமைப் பதவிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ரவூப் ஹக்கீமும், கட்சியும் பிரச்சினைகளை எதிர் கொண்ட போது இவர்கள் இருவரும் ரவூப் ஹக்கீமுக்கு பக்க பலமாக இருந்து கட்சியையும், ரவூப் ஹக்கீமின் தலைமையையும் பாதுகாத்தவர்கள். இவர்களும், தலைமையோடு முரண்பட்டுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில் ஆகியோர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் பலரும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளார்கள். அடுத்த வாரம் இக்கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.

      இதே வேளை, முஸ்லிம் கட்சிகளினதும், அரசாங்கத்தினதும் நடவடிக்கைகளைப் பற்றி ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் எனும் அமைப்பு நாடு பூராகவும் 'முஸ்லிம்களின் வாழ்வுரிமை' எனும் தலைமைப்பில் மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. இம்மாநாட்டில் பெருமளவில் பொது மக்கள் கலந்து கொள்கின்றார்கள். இவ்வமைப்பு தேர்தலில் குதிக்கப் போகின்றதோ என்று எண்ணும் அளவிற்கு அந்த அமைப்பினரின் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. ஆனால், நாங்கள் தேர்தலில் குதிக்க மாட்டோம். முஸ்லிம் கட்சிகளும், அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு செய்து கொண்டிருக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கின்றோம். எங்களின் உரிமைகளை கேட்கின்றோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பிரச்சாரங்களினால் முஸ்லிம் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

      இதே வேளை, முஸ்லிம்கள் தாங்கள் முஸ்லிம் கட்சிகளினாலும், அரசாங்கத்தினாலும், ஏனைய அரசியல் கட்சிகளினாலும் கைவிடப்பட்டுள்ளோம். எங்களுக்கு குரல் கொடுப்பதற்கு யாருமில்லை என்ற மனோ நிலையை அடைந்துள்ளார்கள். இதனால் புதிய அரசியல் சக்தியை வேண்டியவர்களாக உள்ளார்கள்.  கடந்த காலங்களில் வாக்குகளுக்காக ஏமாற்றியவர்கள் உள்ளுராட்சித் தேர்தலிலும் ஏமாற்றுவர்கள் என்றே நம்புகின்றார்கள். முஸ்லிம்களின் மனத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரமல்ல எல்லா முஸ்லிம் கட்சிகளுக்கும், ஏனைய கட்சிகளுக்கும் சோதனையாகவே அமைந்துள்ளது. கடந்த காலங்களைப் போன்று உள்ளுராட்சி தேர்தலிலும் முஸ்லிம்களிடம் உணர்ச்சியூட்டும் கதைகளைச் சொல்லி வாக்குகளை எடுக்க முடியாது. இதற்கு முஸ்லிம் கட்சிகளினால் நடத்தப்படும் கூட்டங்களுக்கு செல்லுகின்ற மக்களின் தொகை மிகக் குறைவாகவே உள்ளது. இது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். அரசியல்வாதிகள் பொய்களையே சொல்லுவார்கள், பாராளுமன்றத்தில் ஒன்றையும், அமைச்சரவையில் இன்னுமொன்றையும், மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமாகவும் பேசிக் கொண்டிருப்பதனை முஸ்லிம்கள் மிகத் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். ஆதலால் உள்ளுராட்சி தேர்தல் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கை பரிசோதிக்கும் சமூக ஆய்வு கூடமாகும். 
    Virakesari  03.12.2017
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளுராட்சி தேர்தல்: கட்சிகளின் செல்வாக்கை பரிசோதிக்கும் ஆய்வு கூடமாகும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top