• Latest News

    December 06, 2017

    “அரசியலிலிருந்து ஒதுங்கிவிட எண்ணிய எனக்கு, புதிய தெம்பு கிடைத்திருக்கின்றது” முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹம்ஜாட் தெரிவிப்பு

    -ஊடகப்பிரிவு-  

    ரசியலிலிருந்து ஒதுங்கி விடுவோமா என்ற சலிப்புடன் இருந்த எனக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மக்கள் சேவைகளின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், மீண்டும் அரசியலில் நாட்டம் ஏற்பட்டது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட் தெரிவித்தார்.

    கண்டி உடதலவின்னவில் நேற்று முன்தினம் (04/ 12/ 2017) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
    அவர் மேலும் கூறியதாவது, 
       
    கண்டி மாவட்டத்தில் பேரினவாதக் கட்சிகளில் இணைந்து நீண்டகாலமாக அரசியல் நடாத்தி வரும் என்னைப் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், மனமுடைந்து வெறுப்புடன் இருக்கின்றனர். சமூகத்துக்கான பிரச்சினைகளை தீர்ப்பதிலும், சமூகத்தின் தேவைகளை பெற்றுக்கொடுப்பதிலும் கடந்தகாலங்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும் போதும் என்றாகிவிட்டன. முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, அவர்களின் பிரதிநிதிகளான நாங்கள் பேரினவாத கட்சிகளின் தலைவர்களிடமோ, அமைச்சர்களிடமோ  பெற்றுக்கொள்வதில் கல்லிலே நார் உரிப்பது போன்றே இருக்கின்றது. 
    எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை பெரும்பான்மைக் கட்சிகள் பகடைக்காய்களாக பயன்படுத்தி, நாம் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை கொள்ளையடித்துவிட்டு அந்த மக்களையும், எங்களைப் போன்ற அரசியல்வாதிகளையும் கறிவேப்பிலையாகத் தூக்கி எறிகின்ற அரசியல் கலாச்சாரமே நடைபெற்று வருகின்றது
    எனவேதான் அண்மைய காலங்களாக முஸ்லிம் சமூகத்தின் குரலாக இயங்கி வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நான் இணைந்துகொண்டேன். 

    தம்புள்ளையிலோ, கிரேன்ட்பாஸிலோ, அளுத்கமையிலோ, கின்தோட்டையிலோ பிரச்சினை ஏற்பட்டால் அர்த்தராத்திரியிலும் உயிராபத்தையும் பொருட்படுத்தாது, பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுபவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பதை பொதுமக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தேர்தலை மையமாக வைத்தோ, வாக்குகளை வசீகரிப்பதற்காகவோ அவர் இந்தப் பணிகளை மேற்கொள்வதில்லை என்பதை நான் உணர்வு பூர்வமாக அறிந்து வைத்திருக்கின்றேன். 

    சமூகத்தின்பால் கொண்ட அக்கறையும், அன்புமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இவ்வாறான பணிகளுக்குத் தூண்டுகின்றது என்று மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் தெரிவித்தார்.
    இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்டத்தின் கட்சியின் முக்கியஸ்தர் றிஸ்மி, உடுநுவர விவாகப் பதிவாளர் என்.இஸட்.எம்.முஸம்மில், கட்சியின் பாத்ததும்பர முக்கியஸ்தர் ஏ.எம்.எம்.அக்பர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.   
                 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “அரசியலிலிருந்து ஒதுங்கிவிட எண்ணிய எனக்கு, புதிய தெம்பு கிடைத்திருக்கின்றது” முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஹம்ஜாட் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top