• Latest News

    December 04, 2017

    மு.கா தலைவரின் அறை போர்க்களமாக மாறியது – மட்டக்களப்பில் நடந்த சம்பவம்

    அம்பலத்தார் -
    மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானாவுக்கும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இடையே இன்று  ஏற்பட்ட வாய்த் தகறாறு முற்றி ஈற்றில் செருப்பை கழற்றி அடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் முற்பட்ட போது மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் இடையில் பாய்ந்து தடுத்துள்ளார். பின்னர் அவர் கண்ணீர் சிந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
    பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா  இன்று காலை 08 மணியளவில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை சந்திப்பபதற்காக தனது மகன் அம்ஜத் மௌலானாவுடன் ரவூப் ஹக்கிம் தங்கியுள்ள பாசிக்குடாவில் உள்ள ஹாம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.  இவர்களுடன் தபாலக அதிபர் நஸீர், பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தரும் சென்றுள்ளார்.
    இவர்கள் அங்கு சென்ற போது மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் காலை உணவு எடுப்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார். இவர்களை அவதானித்த ரவூப் ஹக்கீம் வாருங்கள் என்றழைத்து சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.
    இவர்கள் காலை உணவை தலைவரோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமதும் அங்கு வந்து இணைந்துள்ளார். பின்னர் எல்லோருமாக காலை உணவை உட்கொண்டிருக்கும் போதே மாவட்ட அரசியல் விடயங்களைப் பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.
     இதன் போது தபால் அதிபர் நசீர் ஏறாவூர் அரசியல் விடயங்களைப் பற்றி பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.  சரி வாங்க, எனது அறைக்குள் சென்று பேசுவோம் என்று அனைவரையும் ரவூப் ஹக்கீம் அழைத்துச் சென்றுள்ளார்.
    பூட்டிய அறைக்குள்  ஏறாவூர் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் நியமிக்கும் விடயமாக ரவூப் ஹக்கீமோடு பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவிடம் கேட்டார். முன்னாள் முதலமைச்சருடன் இணைந்து இணக்கப்பாட்டுடன் வேட்பாளர்களை நிறுத்துமாறு ரவூப் ஹக்கீம் கேட்டடுள்ளார்.
    இதன் போது ஹாபிஸ் நசீர்  ஏறாவூர் விடயமாக பேசுவதாக இருந்தால் தபால் அதிபர் நஸீரோ வேறு நபர்களோ இருக்கக்கூடாது என்று ரவூப் ஹக்கீமைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
    இதனை ஏற்றுக் கொண்டு அறையிலிருந்து அதன்படி தபால் அதிபர் நசீர் மற்றும்  அம்ஜத் மௌலானா ஆகியோர்கள் அறையிலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் அருகாமையிலுள்ள கண்ணாடி அறையினுள் இருந்துள்ளனர்.
    இந்நிலையில் அறையில் ரவூப் ஹக்கிம், அலிசாஹிர் மௌலானா, ஹாபிஸ் நசீரும் அவரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருமே இருந்துள்ளனர்.
    சுமார் ஐந்து ஆறு நிமிடங்களில் இவர்கள் இருந்த அறையினுல் சண்டையுடன் கூடிய பெரிய சத்தம் கேட்கத் தொடங்கியது.
    வெளியிலிருந்த தபால் அதிபர்; நஸீர், அம்ஜத் மௌலானா ஆகியோருடன் பலரும் அந்த அறைக்குள் சென்றனர்.
    அப்போது முன்னாள் முதலமைச்சரை ஹாபிஸ் நசீரை ரவூப் ஹக்கிமும்,  மௌலானாவை பாதுகாப்பு உத்தியோகத்தரும் அசையாது இறுகப் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சி அங்கு இருவரும் கைகலப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அல்லது கைகலப்பில் ஈடுபடுவதற்கு முற்பட்டிருக்க வேண்டும். இதனைத் தடுப்பதற்காக இருவரையும் விலக்கிப் பிடித்திருக்க வேண்டும்.

    இந்நிலையில் ஹாபிஸ் நசீர் மௌலானாவை பார்த்து 'நீ ஒரு ஹராமிடா,  ஹராமிடா'  'என்று பலமாக சத்தமிட்டு செருப்பை கழற்றி அடிப்பதற்கு தயாரான நிலையில் காணப்பட்டுள்ளார்.

    இவ்வாறு ரவூப் ஹக்கிம் தங்கியிருந்த அறை யுத்த களமாக மாறியிருந்தது. ரவூப் ஹக்கிம் மௌலானாவை பார்த்து கண்கலங்கி மன்னிப்புக்கேட்டுள்ளார். 

    அவ் வேளை அந்த ஹோட்டல் முகாமையாளர் தலைவரிடம் ஓடி வந்து முன்னாள் முதலமைச்சரைப் பற்றிய திடுக்கிடும் தகவல்ளைச் சொன்னதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு முன்னாள் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தனக்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதன் பின்னர் இப்படி கேவலமான ஒருவனை இன்றுதான் பார்த்துள்ளேன் என்றும் ரவூப் ஹக்கீம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    ஏல்லாவற்றிக்கும் அல்லாஹ் போதுமானவன் என்று அலிசாஹிர் மௌலானர் தெரிவித்து விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.கா தலைவரின் அறை போர்க்களமாக மாறியது – மட்டக்களப்பில் நடந்த சம்பவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top