• Latest News

    January 14, 2018

    தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார்

     - துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் - 

    ன்றைய அரசியல் விளையாட்டில் மிகவும் தந்திரமாக விளையாடுபவர்களால் மாத்திரமே நீண்ட நேரம் விளையாட முடியும். எங்கு அடித்தால், எது விழும் என்பதில் மிக கவனமாகவும் இருக்க வேண்டும். தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சம்மாந்துறை மு.காவின் ஒரு முக்கிய புள்ளியான முஸ்தபா லோயார் உள்ளிருக்கும் எதிரிகளால் மிக தந்திரமாக  திட்டமிடப்பட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

    தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வீரமுனை வட்டாரத்தில் முஸ்தபா லோயார் போட்டி இடுகிறார். இவர் மயில் கட்சி வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான நௌசாத் அவர்களை எதிர்த்தே போட்டியிடுகிறார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான நௌசாதை எதிர்த்து போட்டியிடுமளவு முஸ்தபா லோயர் பலமானவரல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான நௌசாத் என்பவர் தனி மனித செல்வாக்குடையவர். இவருடைய தனி மனித செல்வாக்கு கடந்த காலங்களில் மு.கா என்ற கட்சிக்கே பெரும் சவாலாக விளங்கியமை யாவரும் அறிந்ததே. அவருடைய தனி மனித செல்வாக்கின் முன், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மு.கா தோல்வியை கூட சந்தித்திருந்தது. தற்போது கடந்த பொதுத் தேர்தலில் சம்மாந்துறையில் அதிகளவான வாக்குகளை பெற்று, மு.காவுக்கு சவால் விடுத்த அமைச்சர் றிஷாத் அணியினருடனும் அவர் ஒன்றாகியுள்ளனர்.

    கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இவர்கள் இருவரும் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடுடையவை. அது மாத்திரமன்றி வீரமுனை வட்டாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான நௌசாத்  அவர்களின் செல்வாக்குடைய வட்டாரம். அங்கு முஸ்தபா லோயருக்கு சொல்லுமளவான வாக்குகள் இல்லை. அவருடைய குடும்பம் கூட அப்பகுதியை சேர்த்தவர்கள் இல்லை. அது மாத்திரமன்றி, அவ் வட்டாரம் தமிழர்களின் ஆதரவு தேவையான ஒரு வட்டாரமும் கூட.

    இன்று வட்டார எல்லை பிரிப்பு தொடர்பில் முன் வைக்கப்படும் சில விமர்சனங்கள்,  முன்னாள் தவிசாளர் நௌசாதை நோக்கி தமிழ் மக்களின் வாக்குகளை திருப்பிக்கொண்டுமிருக்கின்றன. ஏற்கனவே, முன்னாள் தவிசாளர் நௌசாத் அப் பகுதி தமிழ் மக்களின் செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் அங்கு முஸ்தபா லோயார் தேர்தல் கேட்டால், நிச்சயம் தோல்வியை தழுவுவார் என்பது சிறு பிள்ளையும் அறியும்.

    சம்மாந்துறை மு.காவின் அரசியலில் முஸ்தபா லோயரை விட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் அதிக செல்வாக்கு பெற்றவர். இதனை நிறுவ வேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான நௌசாதை எதிர்கொள்ள, மு.கா ஒரு பலமான வேட்பாளரை களமிறக்க வேண்டுமாக இருந்தால், ஏன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரை களமிறக்கவில்லை? அவர் தானே பொருத்தமானவர். அவர் சாதூரியமாக தப்பித்துக்கொண்டார் என நம்புகிறேன்.

    முஸ்தபா லோயர்  இச் சிறு தேர்தலிலேயே தோல்வியை தழுவினால், பெருந் தேர்தல்களில் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள முடியாது. இத் தேர்தலோடு, தனது அரசியல் வாழ்வை முஸ்தபா லோயர் முடித்துக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டுமாக இருந்தால், ஏதாவதொரு காரணத்தை முன்னிருத்தி, இத் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top