• Latest News

    January 08, 2018

    ‘நாட்டின் ஆகக்கூடிய கிளைகளைக்கொண்ட வலையமைப்பாக சதொச நிறுவனம் சாதனை படைக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

    -ஊடகப்பிரிவு-
    'தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கும் அரசின் இலக்கு நிறைவுபெற்ற பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக, சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம' என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
    பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பங்குபற்றுதலுடன், இலங்கையின்  முதலாவது மெகா சதொச நிலையம்  இன்று காலை (05) வெலிசறையில் திறந்துவைக்கப்பட்டது.
    இச் சதொச நிறுவனக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது:
    நாட்டின் ஆகக்கூடிய கிளைகளைக்கொண்ட வலையமைப்பாக சதொச நிறுவனம்  சாதனை படைக்கின்றது. தரமிக்க உணவு மற்றும் நாளாந்த நுகர்வுப் பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கும் நோக்கில், நாடெங்கும் சதொச விற்பனைக் நிலையங்களை அமைக்கும் அரசின் திட்டம் தற்போது வெற்றிபாதையில் செல்கின்றது. நேற்று மட்டும் ஒரே நாளில் நாடு முழுவதிலும் மூன்று சதொச நிலையம்  திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது நாடு பூராகவும் 400 சதொச கிளைகள் காணப்படுகின்றது. கடந்த வருட இறுதிக் கணக்கெடுப்பின் படி சதொச நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 3-6 பில்லியனாக அதிகரித்துள்ளது.   இன்று இலாபமீட்டும் நிறுவனமாக சதொச நிலையத்தை நாம் மாற்றியுள்ளதோடு,  இவ்வருட இறுதிக்குள் சுமார் 500 மெகா சதொச கிளைகளை திறந்துவைத்து அரசின் இலக்கு நிறைவுபெற்ற பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரேவிலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சதொச நிலையம் ஊடாக இலாபமீட்டும் நோக்கத்தை விட மக்களின் விமோசனமே எங்களின் தாரக மந்திரமாகும்.
    நாம் இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்கும் போது நாடளாவிய ரீதியில் 300 சதொச  கிளைகளே இருந்தன. இன்று (5) கொழும்பில் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படிருக்கும் கிளையானது, நிறுவனத்தின் 400 ஆவது கிளையாகும். அதுமட்டுமின்றி நவீன வசதிகளுடன் கூடிய கிளையாக நாங்கள் ஆரம்பித்துவைக்கவுள்ள 45 கிளைகளில் இது முதலாவது கிளையாகும்.
    கடந்த இரண்டு வருடங்களில் பாரிய மற்றங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.  அனைத்துக் கிளைகளுக்கும் கணணி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சீ.சீ.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நாங்கள் வெற்றிகரமாக இந்தப் பயணத்தை தொடர்கின்றோம்.
    சதொச நிறுவனம் முழுமையாக கணினி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ‘நாட்டின் ஆகக்கூடிய கிளைகளைக்கொண்ட வலையமைப்பாக சதொச நிறுவனம் சாதனை படைக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top