• Latest News

    March 16, 2018

    ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

    எஸ்.றிபான் -
    முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், பள்ளிவாசல்களையும் அழிக்க வேண்டுமென்ற சிந்தனைகளைக் கொண்டவர்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் தகுந்த இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், பொது அமைப்புக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் கட்சியாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்காது மௌனமாக இருப்பதும், அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கருத்துக்களை முன் வைப்பதும் சமூகப் பொறுப்பாக இருக்க முடியாது. இன்று முஸ்லிம்களுக்கு பல திசைகளிலிருந்தும் அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமது பொறுப்பைச் செய்யாது மௌனித்துப் போயுள்ளார்கள். இந்நிலையில் ஒரு சிலர் ஆச்சரியப்படும் வகையில் முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்ற போது அத்தகையவர்களுக்கு எதிராக முஸ்லிம்களே ஆத்திரப்படுவதனையும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிகளை எடுப்பதனையும் அவதானிக்க முடிகின்றன. இத்தகையதொரு சம்பவம் முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளும் இடம் பெற்றுள்ளமை முஸ்லிம்களிடையே அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

    முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் ஆகியவற்றின் மீது பௌத்த இனவாதிகள் அம்பாரை, கண்டி ஆகிய இடங்களில் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியுள்ளார்கள். அம்பாரை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மற்றும் கடைகள் பௌத்த இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் உடைத்து எரிக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடைபெற்ற போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாரையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கொடுமைகளைப் பார்வையிடுவதற்கு உடனடியாக செல்லவில்லை. நான்கு நாட்களின் பின்னரே சென்றிருந்தார். இதன் போது அவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துக் கொண்டு செல்ல இருப்பதாக காட்டுத் தீ போல் சமூக இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் பரப்பட்டன. ஆயினும், ரணில் விக்கிரமசிங்க அம்பாரைக்கு நகருக்கு செல்லாமல், ஒலுவிலுக்கு சென்று அம்பாரை பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். இதனை கொழும்பில் வைத்தே செய்திருக்கலாமென்று முஸ்லிம்களினால் தெரிவிக்கப்பட்டன.

    மேலும், கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பிலும் பாதுகாப்பு தரப்பினர் போதிய கவனம் எடுக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் காரசாரமாகக் கருத்துக்களை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாரையில் உள்ள அமைச்சர் தயாகமகேவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அம்பாரைக்கு வரவில்லை. அவர் தைரியமில்லாதவர் என்று தெரிவித்திருந்தார். மேலும், பெரும்படை பலத்தை வைத்துக் கொண்டு ஒரு மாவட்டத்தின் சில பகுதிகளை மாத்திரம் பாதுகாக்க அரசாங்கத்தினால் ஏன் முடியவில்லை என பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முஸ்லிம்களுக்கு அதிஉச்ச அளவிலான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய அவர் தவறினால் பிரதமருக்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 21 முஸ்லிம் எம்.பிகளும் ஆதரவு வழங்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்தார். இவரின் இந்த எச்சரிக்கை ஒரு வார்த்தை விளையாட்டாக இருந்தாலும், அரசாங்கத்தினை யோசிக்க வைத்துள்ளதெனலாம். 

    இதே வேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் இக்கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவர் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸில் சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தமையை ஏற்றுக் கொள்ளவில்லை. தலை இருக்க வால் ஆடக் கூடாதென்று நினைத்திருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கட்சியின் உயர்பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸீற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுள்ளார். இதனை உயர்பீடத்தில் உள்ள பலரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஒழுக்காற்று நடவடிக்கை பற்றிய பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பரின் இந்த முயற்சி முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பத்தி எழுதும் வரைக்கும் எக்கருத்தினை முன் வைக்கவில்லை.

    பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் கருத்துக்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கோபப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்லாது ரவூப் ஹக்கீமையும் சங்கடத்தில் மாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தமது கட்சி உறுப்பினரின் கருத்துக்களை சரியென்று சொல்லுவதா அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு பேசியதை கண்டிப்பதா இதில் எதனைத் தேர்வு செய்வது என்ற நிலையில்தான்,  பிரதமரின் இக்கோபத்தை தணிக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இதனைத் தான் செய்யாது கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் மூலமாக ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தோசப்படுத்த எண்ணியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, நிஸாம் காரியப்பர் பிரதி அமைச்சர் ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டமை ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதென்றும் தெரிவிக்கப்படுகின்றன. பொதுவாக எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தினை நடத்துவதற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கும். அது கட்சித் தலைவரின் அனுமதியைப் பெற்றிருக்கும். ஆதலால், நிஸாம் காரியப்பர் முன் வைத்த ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற விவகாரம் தெரியாதென்று கூறுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இதே வேளை, நிஸாhம் காரியப்பருக்கு தாருஸ்ஸலாம் குறித்தான விவகாரத்தில் உள்ள பிரச்சினைகளை கையாள்வதற்காக இவ்வாறு செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. 

    எது எவ்வாறு இருந்தாலும் ஹரீஸ் பேசியது சரியென்பதே முஸ்லிம்களின் கருத்தாக உள்ளது.. அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்றோம் என்பதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை சமாளிக்கும் தோரணையிலும், அரசாங்கத்தினை பாதுகாத்துக் கொள்ளும் விதமாகவும் கருத்துக்களை முன் வைக்க வேண்டியதில்லை. 

    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், பிரதித் தலைவர் ஹரீஸிற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதனால், ஹரீஸை ஓரங்கட்டுவதற்கு தமக்கு விசுவாசமாக உள்ளவர்களினால் காய் நகர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ரவூப் ஹக்கீமோடு பசீர் சேகு தாவூத், எம்.ரி.ஹஸன்அலி ஆகியோர்கள் முரண்பட்ட போது இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரவூப் ஹக்கீம் உயர்பீடத்தில் தமக்கு விசுவாசமாக உள்ளவர்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டார். அது போலவே ஹரீஸிற்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க ரவூப் ஹக்கீம் திட்டமிடுகின்றார் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றன.

    ஹரீஸின் கருத்துக்கள் சூடாக இருந்தாலும் இன்னொரு புறத்தில் அவர் வழக்கம் போல் ரவூப் ஹக்கீமை பாதுகாத்துள்ளார். அதாவது பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை அம்பாரைக்கு அழைத்து வந்தவர் ரவூப் ஹக்கீம். இன்றைய அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள சிறுபான்மைக் கட்சிகளில் முஸ்லிம் காங்கிரஸிற்கும், ரவூப் ஹக்கீமுக்கும்தான் செல்வாக்கு அதிகமாகும்.  ஆதலால், ரவூப் ஹக்கீம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அம்பாரைக்கு அழைத்து வருவதற்கு சக்தியற்ற தலைவராக உள்ளார் என்று தெரிவித்திருக்க வேண்டும். இதனைச் செய்யாது அவர் ரணில் விக்கிரமசிங்கவை நொந்து கொண்டமை ரவூப் ஹக்கீமை பாதுகாத்துக் கொள்வதற்கான நகர்வாகவும் பார்க்க வேண்டியுள்ளது. ஆயினும், அவரது கஸ்ட காலம் இந்த எண்ணம் கட்சியில் உள்ள நிஸாம் காரியப்பர் போன்றவர்களுக்கு வேறு விதமாக புரிந்துள்ளது. மேலும், நிஸாம் காரியப்பர் போன்றவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை பகைத்துக் கொள்ளும் ஒரு செயலை ஆதரிக்க முடியாதென்று கூட எண்ணியிருக்கலாம்.

    பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸைப் பொறுத்தவரை ரவூப் ஹக்கீம் பிரச்சினைகளை எதிர் கொண்ட பல சந்தர்ப்பங்களில் தலைவரை பாதுகாக்கும் வகையிலேயே நடந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் சமூகத்தை விடவும் கட்சித் தலைவரின் கௌரவம், தலைவருக்கான விசுவாசம் ஆகியவற்றிக்காக ரவூப் ஹக்கீமுக்கு ஆதரவாகவே செயற்பட்டுள்ளார். 

    அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்கள் பௌத்த இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான போது இவ்வாறு ஹரீஸ் கருத்துக்களை முன் வைக்கவில்லை. ஜிந்தோட்டையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதும் பிரதமருக்கு எதிராக கருத்துக்களை முன் வைக்கவில்லை. ஆனால், அம்பாரைக்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தராது போனமை ஹரீஸை பாதித்துள்ளதென்றே கூறுதல் வேண்டும். கல்முனைத் தொகுதியில் ஹரீஸின் செல்வாக்கு பழைய மாதிரியில்லை. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பிரதி அமைச்சர்கள் பைசால் காசிம் தமது சொந்த ஊரில் போதிய வெற்றியை பெற்றுக் கொள்ளவில்லை. கல்முனை மாநகர சபையில் ஹரீஸினால் போதிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க அம்பாரைக்கு ரவூப் ஹக்கீம் அழைத்துச் செல்லுவதில் தோல்வியடைந்துள்ளமை கட்சியின் செல்வாக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் கூட ஹரீஸிற்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்காக ரணில் விக்கிரமசிங்க மீது பலியைப் போட்டுள்ளாரா என்றும் நினைக்க வேண்டியுள்ளது.

    இதே வேளை,  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருப்பவதற்கு வெட்கப்படுகின்றேன் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அக்கட்சி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணியாத நிலையில் கட்சியின் செயலாளர் நஸாம் காரியப்பரினால் ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மறைமுகமாக வேறு திட்டங்களைக் கொண்டிருப்பாகவே இருக்கின்றது.
    Thanks - Vidivelli 16.03.2018
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top