மல்லிகைத்தீவு நிருபர்
யாழ்ப்பாண
மாவட்டத்தை ஆவா ஆட்டி படைப்பது போல அம்பாறை மாவட்டத்தை மாவா வாட்டி
வதைக்கின்றது என்று தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்
சட்டத்தரணி ஏ. எல். எம். ரிபாஸ் தெரிவித்தார்.
மருதமுனையில் உள்ள இவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
மாவா
என்கிற போதை கலந்த பாக்கு பாவனை அண்மைய வருடங்களில் அம்பாறை மாவட்டத்தை
வெகுவாக ஆக்கிரமித்து உள்ளது. தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த கணிசமான
இளையோர்கள் மாவா பாக்கு பாவனைக்கு ஆட்பட்டு வருகின்றனர். கல்முனை
நீதிமன்றத்துக்கு சாதாரணமாக மாதாந்தம் மாவா பாக்கு பாவனையுடன் தொடர்புபட்டு
50 வழக்குகள் வரை வருகின்றன என்பதை சட்டத்தரணி என்கிற வகையில் நான்
அறிவேன்.
ஆவா குழு காரணமாக வட மாகாணம்
முழுவதும் பய பீதியில் உறைந்து கிடப்பது போல மாவா பாக்கு பாவனை காரணமாக
கிழக்கு மாகாணம் முழுவதும் குலைந்து கிடக்கின்றது. கேரளா கஞ்சாவை போலவே
மாவா பாக்கும் பேராபத்தானது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நாடு
முழுவதையுமே மாவா பாக்கு பாவனை மெல்ல மெல்ல தின்று வருகின்றபோதிலும்
குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த இளையோர்களையே திட்டமிடப்பட்ட
வகையில் இலக்கு வைத்திருக்கின்றது என்ப்து எமது வலுவான சந்தேகம் ஆகும்.
இளையோர்கள்,
பொதுமக்கள் ஆகியோருக்கு மாத்திரம் அன்றி அரசாங்க உயர் மட்டத்தினருக்கும்
மாவா பாக்கு குறித்து விழிப்பூட்டப்பட வேண்டும். ஏனென்றால் இது ஒரு நுகர்வு
பொருள் என்றேதான் பலரும் எண்ணுகின்றனர். ஆனால் போதை கலக்கப்பட்டு
இருப்பதால் இது ஒரு போதை பொருளே ஆகும். இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில்
இருந்து இது இறக்குமதி செய்யப்படுகின்றது. பாரிய மாபியா கும்பல்கள் இதன்
இறக்குமதி, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு உள்ளன. ஆனால் இதை
உண்பவர்களே பெரும்பாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்
நிறுத்தப்படுகின்றனர். வியாபாரிகளும், விநியோகஸ்தர்களும் பெரும்பாலும்
கைதாகாமல் தப்பி விடுகின்றனர்.
நல்லாட்சி
அரசாங்கம் மாவா பாக்கு மீது முழுமையான தடையை வெளிப்படையாக விதித்தல்
வேண்டும். இதன் இறக்குமதியை முற்றாக தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்கு
தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் பாரிய அழுத்த குழுவாக மாறி
உரத்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் இது விடயத்தில்
உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் எமது இனத்தில் இருப்பே மெல்ல
மெல்ல எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்பட்டு விடும்.
0 comments:
Post a Comment