• Latest News

    September 17, 2018

    “பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” - லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்

    ஊடகப்பிரிவு-
    இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையில் “பொதியிடல்” பிரதான அம்சமாக இருப்பதாகவும், அந்தத் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், முதன் முதலாக அரசாங்கம் இத்துறையினருக்கு உதவியளிக்க முன் வந்துள்ளமை அவர்களுக்கான அதிர்ஷ்டம் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  
    “லங்கா பெக் – 2018” என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) இடம்பெற்ற பொதியிடலுக்கான கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் கலந்துகொண்டார்.
    கைத்தொழிற்துறை சார்ந்த உணவு, குளிர்பானங்கள், கால்நடை உற்பத்தி, அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள், சுகாதார உற்பத்தி ஆகியவை தொடர்பில் இடம்பெற்ற இந்த 03 நாள் கண்காட்சி, 37வது வருடமாக இம்முறை இடம்பெறுகின்றது.
    இந்த நிகழ்வில், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர்.ஷில்பக் என் அம்புலே ஆகியோரும் உரையாற்றினர்.  
    அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
    உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையின் பொதியிடல் துறையும் மிகவும் இன்றியமையாததாக அமைகின்றது. சர்வதேசச் சந்தையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கு அச்சிடலும், பொதியிடலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலங்களாக அமைந்து, இலங்கையின் தரத்தை அடையாளப்படுத்துகின்றது. இதனை உணர்ந்ததனால் தான் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைத் துறையில், பொதியிடலை வலுப்படுத்துவதற்கான முயற்சியை அண்மையில் தொடங்கி வைத்தோம் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
    பொதியிடல் மற்றும் அச்சிடலுக்கான இந்தக் கண்காட்சித் தொடரில், துறை சார்ந்த பலர் பங்கேற்றிருந்தனர்.
    அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,
    கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையின் இந்த அறிமுக திட்டத்தை இரண்டு கட்டங்களாக வகைப்படுத்தி உள்ளதுடன், 150 தொழில் முயற்சியாளர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் 10.3 மில்லியன் ரூபாய்களை செலவிடுகின்றது. முதலாவது கட்டத்தில் 6.2 மில்லியன் ரூபாய்களை செலவிட்டு, இந்தத் துறை சார்ந்த 1௦௦ தொழில் முயற்சியாளர்களுக்கு பொதியிடலுக்கான பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குகின்றது. அடுத்த கட்டத்தில் அதாவது, 2019 ஆம் ஆண்டளவில்  சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் 50 பேருக்கு, 4.5 மில்லியன் ரூபா செலவில் பொதியிடலுக்கு உதவி வழங்குகின்றது.
    இதைத் தவிர மற்றுமொரு திட்டமாக, இந்தத் தொழில் முயற்சியாளர்களுக்கு விஷேடமாக ஊக்குவிப்பு மற்றும் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளது.
    இலங்கையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான நுண் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதாவது, இந்தத் துறை சார்ந்த 40% சதவீதமானோர் உணவு செயன்முறைத் துறையில் ஆர்வங்காட்டுகின்றனர்.
    பொதியிடல் துறையில், பொதியிடலுக்கான உறைகள் மற்றும் மீள்சுழற்சி அற்ற செயன்முறைகளினால் தற்போது இலங்கை உட்பட சர்வதேச நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன. அத்துடன் சர்வதேச பொதியிடல் தேவைப்பாடுகள் எமது ஏற்றுமதித் துறையிலும் தாக்கம் செலுத்துகின்றன. எனவே, அவற்றிலும் நாம் கவனஞ்செலுத்த வேண்டும்.  
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இலங்கையில் பொதியிடலில் சூழலியலை பாதுகாக்கும் கொள்கைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.








       
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” - லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top