• Latest News

    January 13, 2019

    தமிழர்களும், முஸ்லிம்களும் கைகோர்க்க வேண்டும்

    சஹாப்தீன் -
    கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும், வடக்கு மாகாணத்திற்கு  சுரேஷ் ராகவனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் இனத்தவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்று தமிழ் பேசும் மக்களினால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மாகாண ஆட்சி முறை கொண்டு வரப்பட்ட காலம் முதல் சிங்களவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பின்னணியில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விருவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் பேசும் இனங்களிலிருந்து ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் வரவேற்றுள்ளார்கள். ஆயினும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களில் ஒரு சிலர் ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநராக நியமித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனாதிபதி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இனரீதியான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 
    இலங்கையின் அரசியல் பெரும்பாலும் இனவாதத்தின் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எல்லா இனங்களிலும் இனவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகையதொரு நகர்வினை கிழக்கு மாகாண ஆளுநரின் நியமனத்திலும் காணக் கூடியதாக இருக்கின்றது. முன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அமைச்சர்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் நியமனத்தின் மூலமாக கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை பெரும்பாலும் ஆளுந் தரப்பு அரசியல் செய்து பழக்கப்பட்டவர்கள். எதிர்க்கட்சியில் இருந்தாலும், பின்னர் ஆளுந் தரப்புக்கு மாறிவிடுவார்கள். இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சி அரசியலில் நம்பிக்கையற்றவர்கள். ஆதலால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்து கொண்டிருப்பது இன்று மட்டும் ஏற்பட்டதொன்றல்ல. அரசாங்கத்தின் பக்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோ சென்றால் அமைச்சர் பதவியை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் விநாயக மூர்;த்தி முரளிதரனும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆகவே, அமைச்சர் பதவி என்பது ஆளுந் தரப்பில் அங்கம் பெறுவதன் மூலமாக கிடைக்கக் கூடியது. 

    கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை எதிர்க்கின்றவர்கள் கடந்த காலங்களில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்புக்களை காட்டவில்லை. பெரும்பான்மையின ஆளுநர்கள் மாகாணத்தின் நிர்வாகத்தில் தலையீடுகளைச் செய்து மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் முரண்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அப்போது கூட ஆளுநர்களைக் கண்டிக்கவில்லை. மாறாக, தமிழ் பேசும் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்றே கேட்டுக் கொண்டார்கள். ஆகவே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை முன்னிலைப்படுத்தி தமக்குரிய அரசியலை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு சிலர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும். இவர்களின் இந்த எதிர்ப்புக்களை வைத்து முஸ்லிம் ஒருவர் கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமையை தமிழர்கள் அங்கிகரிக்கவில்லை என்று முஸ்லிம்கள் புரிந்து கொள்ளக் கூடாது. தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வைச் சந்தித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சட்டத்திற்கு முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிச்சயமாக இரரா.சம்பந்தன் தனது அனுபவத்தை ஆலோசனையாக கிழக்கு மாகாண ஆளுநருக்குத் தெரிவித்திருப்பார். 

    இதே வேளை, கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்போது இத்தகைய கருத்துக்கள் முன் வைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து தீர்மானித்துக் கொண்டன. ஆகவே, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு இரு இனங்களிடையே விட்டுக் கொடுப்பு அவசியமாகும். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக சிவநேசன் சந்திரக்காந்தன் (பிள்ளையான்) இருந்த போது முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். 

    ஆளுநர்களின் நியமனமானது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தனக்கு விசுவாசமானவர்களை நியமிக்கின்றார்கள். அவர் நினைத்தால் இன்று கூட கிழக்கு மாகாணத்திற்கு புதியதொரு ஆளுநராக தமிழரையோ அல்லது சிங்களவரையோ நியமிக்கலாம். ஆதலால், ஆளுநரின் நியமனத்தை வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் ஆளுகைக்கு உள்ளாகி விட்டதென்று சொல்லுவது இனவாதக் கருத்தாகவே அமைந்துள்ளது.    

    இதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தான் ஒரு போதும் ஒரு சமூகத்தின் ஆளுநராக செயற்படப் போவதில்லை. மூவின மக்களினதும் ஆளுநராக செயற்படுவேன். கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை வைத்து இன ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியல் அனுகூலங்களை அடைந்து கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார். 

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணங்களின் ஆளுநர்களை பதவியை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது யாழ் மாவட்டச் செயலகத்தின் முன்பாக வடமாகாணத்திற்கு மீண்டும் ரெஜினல் குரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென்று தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலமாகக் கேட்டுக் கொண்டார்கள். காரணம் ரெஜினல் குரே தமிழ் பேசக் கூடியவர். தமிழ்த் தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டால் தங்களது பிரச்சினைகளை நேரடியாகக் கூற முடியாத நிலை ஏற்படுமென்பதே அவர்களின் எண்ணமாகும். ஆனால், தற்போது தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமையையிட்டு வடமாகாண தமிழர்களும், முஸ்லிம்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

    கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழ் தெரியாதவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டதனால் மக்களினால் தங்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கூற முடியவில்லை. மொழி பெரும் தடையாக இருந்தது. அந்த வகையில் தமிழ் பேசக் கூடிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களினால் தங்களின் பிரச்சினைகளை நேரயடியாகப் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மட்டுமல்லாது தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் பேசும் இனங்களிலிருந்து ஆளுநர்கள் நியமிக்கப்பட்டமையை ஒரு ஆரம்பமாகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தொடர்ந்தும் தமிழ் பேசக் கூடியவர்களை ஆளுநர்களாக நியமிக்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும்.   

    இதே வேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரானில் அரச உத்தியோகத்தர் ஒருவரும், இன்னும் இருவரும் நடந்து கொண்ட நாகரிகமற்ற கசப்பான சம்பவமொன்றும் பேசு பொருளாக இருக்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளை தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் பேசும் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி அதில் அரசியல் குளிர் காய்ந்து கொள்வதற்கு வரிந்து கட்டிக் கொண்டு காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். 
    நாட்டில் ஏற்பட்ட 30 வருட கால யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு மக்கள் பல சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்துள்ளார்கள். கடந்த கால கசப்புணர்வுகளை முஸ்லிம்களும், தமிழர்களும் மன்னித்து ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். தமிழர்களின் பிரதேசத்திற்கு முஸ்லிம்களும், முஸ்லிம்களின் பிரதேசங்களுக்கு தமிழர்களும் அச்சமின்றி செல்லுகின்றார்கள். அங்கு சுதந்திரமாக தொழில் செய்கின்றார்கள். இந்த நல்ல நிலை நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழ், முஸ்லிம் மக்களின் விருப்பமாகும். தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக சாதாரண மக்களை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துவதனை தமிழ், முஸ்லிம் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

    வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்பது பெரும்பான்மையான தமிழர்களின் விருப்பமாகும். கிழக்கு மாகாணம் தனியாக இயங்க வேண்டுமென்பதே பெரும்பான்மையான முஸ்லிம்களின் விருப்பமாகும். இந்நிலையில் முஸ்லிம்களின் விருப்பமின்றி கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க முடியாது. தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இருக்காதென்று தெரிவித்துள்ளது. இத்தகையதொரு நிலையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது வடக்குடன், கிழக்கு இணையக் கூடாதென்ற முஸ்லிம்களின் விருப்பத்தை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும். வடக்குடன் கிழக்கு இணைய வேண்டுமாயின் முஸ்லிம்களின் மனங்களை வெல்ல வேண்டும். 

    முஸ்லிம்களினால் முன் வைக்கப்பட்ட கரையோர மாவட்;டம், அதிகார அலகு ஆகியவற்றிக்கு தமிழர்கள் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தையும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பது தமிழ், முஸ்லிம் உறவை முரண்படச் செய்துவிடும். தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை பேசித் தீர்க்க வேண்டும். வளர்ந்து வருகின்ற இன உறவை மீண்டும் சிதைப்பதற்கு இடங் கொடுக்க முடியாது. தமிழர்களும், முஸ்லிம்களும் விட்டுக் கொடுப்புக்களுக்கு மத்தியில் ஒற்றுமைப்படாத வரை அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம்களிடையே காணப்படும் முரண்பாடுகளை காரணம் காட்டி அரசியல் தீர்வுகளையும், அதிகாரப் பகிர்வையும் பெரும் பேரினவாதம் மறுத்துக் கொண்டே இருக்கும் என்பதனை தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால், முரண்பாடுகளை வளர்க்காது இணக்கப்பாட்டினை வளர்ப்பதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் கைகோர்க்க வேண்டும். 

    இதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநர் மூவின மக்களினதும் ஒற்றுமையை வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்குரிய நடவடிக்கைகளை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளமையால் எப்போதும் ஜனாதிபதியினால் கீறப்பட்டுள்ள கோட்டிற்குள் நின்று கொண்டே செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினையாக இருந்தாலும், வேறு பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றிக்கான தீர்வு என்பது ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ள முடியும். 

    இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தைக் கொண்டுள்ள அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இன்றைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்குரிய நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார். அதிலொரு அம்சமாகவே புதிய ஆளுநர்களின் நியமனங்கள் உள்ளன. 
    ஆகவே, அரசியல் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் நியமனங்களையிட்டு அதற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருப்பது அரசியலின் சித்துவிளையாட்டுக்களை புரிந்து கொள்ளாத தன்மை என்றே கூறுதல் பொருத்தமாகும்.

    இதே வேளை, ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ்வை குறைத்து மதிப்பிட முடியாது. அபிவிருத்தி அரசியலை வெற்றிகரமாக மேற்கொண்டவர்களில் அவரும் ஒருவர். மூன்று மொழிகளிலும் பரிச்சயமுடையவர். கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூகங்களின் பிரச்சினைகளை முறையாக தெரிந்து கொண்டவர். மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதனால் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்களைப் பற்றியும் தெரிந்த ஒருவராக இருக்கின்றார். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழர்களும், முஸ்லிம்களும் கைகோர்க்க வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top