சஹாப்தீன் -
தம்புள்ளை அல் - ஹைரிய்யா ஜும்ஆப்பள்ளிவாசல் புனித பூமி எல்லைக்குள் அமைந்துள்ளது. ஆதலால், அப்பள்ளியை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்ற பௌத்த மேலாதிக்கவாதிகளின் கோரிக்கையுடன் தொடர்புடைய பிரச்சினை மீண்டும் வலுப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே வேளை, பள்ளிவாசலை அமைப்பதற்கு பொருத்தமான மாற்றுக் காணி தராதபட்சத்தில் எக்காரணம் கொண்டும் பள்ளிவாசலை அகற்ற மாட்டோம் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எதுவும் அறியாதவர்கள் போன்று இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளே காரணமாகும். புனித பூமியில் இருந்து பள்ளிவாசலை அகற்றுவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும். பள்ளிவாசலை அமைப்பதற்கு நிக்கவட்டவன எனும் இடத்தில் காணி தருகின்றோம் என்று தம்புள்ளை மாநகர சபை மேயர் ஜாலிய ஓபாத தம்புள்ளை அல் - ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது கடந்த வாரம் தெரிவித்துள்ளார். ஆயினும், இதனை பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேயர் ஜாலிய ஓபாத பள்ளிவாசல் பிரச்சினையை இதற்கு முதல் கையாண்டதனை விடவும் மோசமான வகையில் கையாள எண்ணுகின்றார். அல் - ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் தம்புள்ளை நகரில் அமைந்துள்ளது. மேயர் குறிப்பிடும் நிக்கவட்டவன தம்புள்ளை நகரிலிருந்து சுமார் 19 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. ஆதலால், புனித பூமி என்ற பெயரில்p பள்ளிவாசலை அகற்றி மிகவும் நீண்ட தூரத்திற்கு அப்புறப்படுத்துவதற்கு மேயர் ஜாலிய ஓபாத எடுக்கும் முயற்சியானது பௌத்த இனவாதிகளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு துணை செய்வதாக இருக்கின்றது.
புனித பூமியில் பள்ளிவாசல் இருக்கக் கூடாதென்பது பச்சை இனவாத சிந்தனையாகும். புனித பூமி எனும் போது அவர்களினால் எல்லையிடப்படும் பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம்களும், அவர்களின் பள்ளிவாசல்களுமே இலக்கு வைக்கப்படுகின்றன. பள்ளிவாசல் மட்டுமன்றி வணக்கஸ்தலம் எல்லாமே புனிதமானவை. இதில் எந்தவொரு வணக்கஸ்லத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆதலால், புனித பூமி என்று வரும் போது அங்கு வணக்கஸ்தலம் எதுவாக இருந்தாலும் அவை அங்கிருப்பதற்கு நூறு வீதம் தகுதியுடையன. ஆனால், பௌத்தர்கள் அடையாளப்படுத்தும் புனித பூமியில் பள்ளிவாசல் இருக்க முடியாதென்று கூறுவதனை மனிதப் பண்புகளைச் சுமந்துள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். புனித பூமியில் மனிதர்களை பல வகையிலும் கெடுக்கக் கூடிய மதுபான விற்பனை நிலையங்களும், பௌத்த கலாசாரத்திற்கு மாற்றமான நிலையங்களும் இருக்கின்றன. ஆனால், அவை அகற்றப்பட வேண்டுமென்று பௌத்த தேரர்களோ, பௌத்த இனவாதிகளோ கோரிக்கைகளை முன் வைப்பதில்லை. புனித பூமி என்ற எல்லை என்ற பிரகடனம் முஸ்லிம்களை அகற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கையே அன்றி அந்த பிரகடனத்தில் புனிதமில்லை.
தம்புள்ளை அல் - ஹைரிய்யா ஜ}ம்ஆப் பள்ளிவாசல் 1965ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இதற்கான காணியை காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ஓ.மாமா என்று அழைக்கப்படுகின்றவர் அன்பளிப்பு செய்தவாக ஒரு தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் பழைமை வாய்ந்த இப்பள்ளிவாசல் 2002ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பௌத்த இனவாதிகள் என்றுமில்லாத வகையில் அரசியல் அதிகாரத்தின் பின்புலத்தில் முஸ்லிம் விரோத போக்கை மேற் கொண்டார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், ஹலால் உணவு, முஸ்லிம்களின் கலாசார ஆடை போன்ற பல விடயங்களில் வேண்டுமென்று மூக்கை நுளைத்து முஸ்லிம்களை அச்சுறுத்தினார்கள். இந்த இனவாத செயற்பாடுகளின் ஒரு கட்டமாகவே தம்புள்ளை பள்ளிவாசல் புனித பூமியில் அமைந்துள்ளது. ஆதலால், பள்ளிவாசலை அகற்ற வேண்டுமென்ற பிரச்சாரங்களை மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் அதிபதி இனாமலுவே தேரர் தலைமை தாங்கினார். பௌத்தர்களை தமது இனவாத நடவடிக்கைக்கு துணையாகக்கிக் கொள்வதற்காக ரங்கிரி எப்.எம் வானொலி திட்டமிட்ட வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டன.
பள்ளிவாசலை அகற்ற வேண்டுமென்ற பிரச்சாரத்தின் உச்சக் கட்ட நடவடிக்கையாக 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி இனாமலுவே தேரர் தலைமையிலான குழுவினர் பள்ளிவாசலை தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல்பல தடவைகள் தாக்கப்பட்டன. மட்டுமன்றி 2012ஆம் ஆண்டு முதல் தம்புள்ளையில் வாழுகின்ற முஸ்லிம்களும், வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்களும் அடிக்கடி பௌத்த இனவாதிகளின் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு பள்ளிவாசல் தொடர்ச்சியாக தாக்கப்படுவதனையும், அதனோடு இணைந்தவாறு முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனையும் கருத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் பொருத்தமான காணி வழங்கப்படும் பட்சத்தில் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கும், புதிய இடத்தில் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கும் விருப்பம் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆரம்பத்தில் தம்புள்ளை நகருக்கு சற்று தூரத்தில் ஒரு இடம் காண்பிக்கப்பட்டது. அக்காணிக்கு அருகில் மதுபான விற்பனை நிலையமொன்று அமைந்துள்ளமையால் அதனை பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அமைச்சர் சம்பிக்க ரணவிக்கவுடன் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரினால் காண்பிக்கப்பட்ட காணியை பள்ளிவாசல் நிர்வாகிகள் பார்வையிட்டார்கள். அக்காணியை சட்ட ரீதியாக வழங்கும் போது பள்ளிவாசலை அகற்றி அவ்விடத்தில் அமைப்போம் என்று கூறினார்கள். ஆனால், இன்னும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் அக்காணி ஒப்படைக்கப்படவில்லை.
இப்போது முஸ்லிம்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காணியை வழங்காது நிக்கவட்டவன எனும் தூர இடத்திற்கு பள்ளிவாசலை நகர்த்துவதற்கு தம்புள்ளை மாநகர சபையின் மேயர் ஜாலிய ஓபாத எடுக்கும் முயற்சி இதற்கு முதல் முஸ்லிம்களை தம்புள்ளை நகரிலிருந்து துரத்த வேண்டுமென்று எடுக்கப்பட்ட முயற்சிகளை விடவும் மோசமானதாகும். பள்ளிவாசல் நிர்வாகிகள் நிக்கவட்டவனவிற்கு செல்ல முடியாது. அங்கு பள்ளிவாசல் அமைக்கவும் முடியாது. தங்களுக்கு ஏற்கனவே அமைச்சர் சம்பிக்க ரணவக்க காட்டி காணியை தருமாறு கேட்கின்றார்கள். அதனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பூதாகாரமாக்கப்பட்ட பள்ளிவாசல் பிரச்சினையை தீர்த்து தருமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் பல தடவைகள் முஸ்லிம் அமைச்சர்களையும், அரசாங்கத்தையும் மஹிந்தராஜபக்ஷ காலம் முதல் இன்று வரைக்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அரசாங்கமும், முஸ்லிம் அமைச்சர்களும் இப்பிரச்சினைக்கு தீர்வுகளை காண்பதற்கு முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நல்லாட்சி அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட போது தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பௌத்தர்கள் எவரும் வாழாத இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை வைத்த போது இரண்டு வாரங்களில் புத்தர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் ரவூப ஹக்கீம் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இப்படி முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வெறும் வாக்குறுதிகளை மாத்திரமே அளித்துக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம்களும் வாக்குறுதி எனும் ஓட்டை பலூனை நம்பி ஏமாறிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையையும், பொய்யையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள். இது முஸ்லிம்களுக்கு கசப்பாகவே இருக்கும். என்றாலும் அதுவே உண்மையாகும். அரசியல்வாதிகளுக்கும், கட்சிக்கும் அடிபிடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் முஸ்லிம்களின் எதிர்காலம் சூனியமாகிக் கொண்டிருக்கின்றது என்று கவலை கொள்ளுவதாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் அவ்வாறு கவலை கொள்வார்களாயின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்றோ மாற்றப்பட்டிருப்பார்கள். புதிய அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட்டிருப்பார்கள். முஸ்லிம் சமூகம் கவலை கொள்ளாது வெறும் பொய்களையும், உணர்ச்சி வார்த்தைகளையும் நம்பிக் கொண்டிருப்பதனால்தான் தலைவர் பண்புகளைக் கொண்டிருக்காதவர்களை அரசியல் தலைவர்கள் என்று தலையில் வைத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்ட போது ரணில் விக்கிரசிங்கவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. மஹிந்தராஜபக்ஷ பிரதமராக நிமியக்கப்பட்டார். இதன்போது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று வரிந்து கட்டிக் கொண்டு போராடினார்கள். நாளாந்தம் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது இத்தகைய நடவடிக்கைகளை காண முடிவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளை மறுப்பதென்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று தெரிந்தும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில்லை.
இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும், பிரதம மந்திரியாகவும் யார் வந்தாலும் முஸ்லிம்களின் உரிமைகளை தங்கத்தட்டில் வைத்துத் தரமாட்டார்கள். இதனையே மர்ஹும் அஸ்ரப் கூறினார். உங்களின் கால்களுக்கு தங்கத்தினால் செய்த பாதணி தருகின்றோம் கால்களைத் தாருங்கள் என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கேட்கின்றார்கள் என்றும் அன்று அஸ்ரப் தெரிவித்தார். இன்று அமைச்சர் பதவியை கொடுத்து முஸ்லிம்களின் கால்களையும், கண்களையும் பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பௌத்த இனவாதிகளுடன் ஒட்டுறவை வைத்துள்ள அரசாங்கத்தையும், அரசாங்கத்தின் தலைவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகளும், அரசியல் தலைவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போதும், இன்றைய ஆட்சியின் போதும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். மஹிந்தராஜபக்ஷவுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்தார்கள். இவ்வாறு பௌத்த மேலாதிக்கத்தை இந்த நாட்டில் நிலை நாட்டுவதற்கும், சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்குவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன் வைத்தால் ஆதரவு தருவோம் என்று சொல்வதற்கு தயாரில்லை. ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டவர்கள், அதற்காக ஒற்றுமைப்பட்டவர்கள் தம்புள்ளை பள்ளிவாசலை மாற்று இடத்தில் அமைப்பதற்கு பொருத்தமான காணியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்திருக்கலாம். முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு திர்வுகளை முன் வைக்க வேண்டுமென்று கேட்டிருக்கலாம். இறக்காமம் மாயக்கல்லி மலையில் உள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருக்கலாம். எதனையும் கேட்கவில்லை.
தங்களின் கோரிக்கைகள் எதுவும் அமைச்சர் பதவியை பெற்றிருக்கும் அரசாங்கத்திற்கு பௌத்த சிங்கள மக்களின் எதிர்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாதென்பற்கே முன்னுரிமை அளிக்கின்றார்கள். இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பிலான விழிப்புணர்வின்மையும், சமூக சிந்தனைக்கு அப்பால் கட்சி விசுவாசம் என்பதற்குப் பின்னால் அணி திரண்டிருப்பதும், சுயநலத்தை மட்டுமே ஆடையாக அணிந்துள்ள முஸ்லிம் தலைமைகளுமே காரணமாகும். ஒரு சமூகம் தமது நிலைமைகளையிட்டு விழித்துக் கொள்ளாத வரை அச்சமூகத்தின் எதிர் காலத்தை உறுதி செய்து கொள்ள முடியாது. முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் வெறித்தனமான ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும். எது நடந்தாலும் அக்கட்சிக்கே வாக்களிப்பேன். எந்த நன்மைகளைச் செய்தாலும் அக்கட்சிக்கு எதிராகவே வாக்களிப்பேன் என்ற மனோநிலையை முஸ்லிம்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நிரந்தர ஆதரவாளனாக இருக்கக் கூடாது. காலத்தின் தேவைக்கு ஏற்ப எந்த கட்சியும், தலைமையும் செயற்படுகின்றதென்று சீர்தூக்கிப் பார்த்து ஆதரவு வழங்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் போட்டி போட்டு செயற்படுவர். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கமாட்டார்கள். ஆதலால், முஸ்லிம்கள் கட்சிகள் மீது கொண்டுள்ள வெறித்தன ஆதரவை முதலில் வாபஸ் வாங்க வேண்டும். அதுவே முஸ்லிம் அரசியல் தலைமைகளை சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும் ஆயுதமாக மாறும்.
Virakesari 20.01.2019

0 comments:
Post a Comment