முன்னொரு காலத்தில் பூமிக்கு அப்பால் கிரகங்கள் இருக்கும் என்பதையே மனிதர்கள் நம்பியிருக்கவில்லை. நிலவில் காலடி பதித்து விட்டதாக நீல்-ஆம்ஸ்ட்ரோங் தனது குரலில் உலக மக்களுக்கு வானொலி ஊடாகப் பேசியபோது உலகமே ஆச்சரியமாகப் பார்த்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சீனாவின் விண்கலம் கொண்டு சென்ற விதைகள் நிலவில் முளைவிட்டிருக்கின்றன என்ற செய்தியை நீங்களும் நானும் இந்த உலகமும், சர்வசாதாரணமாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆக, ஒருகாலத்தில் நிகழவே முடியாது என தீர்மானிக்கப்பட்ட எத்தனையோ விடயங்களை இறைசக்தியும் விஞ்ஞானமும் அறிவியலும் காலமும் நிகழ்;த்திக் காட்டிருக்கின்றன. 'நம்மால் முடியாது, அது நடக்காது என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற எத்தனையோ காரியங்களை உலகில் எங்கோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கின்றான்' என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழியும் இருக்கின்றது.
இப்படித்தான், இலங்கை அரசியற் சூழலிலும் தற்போது நடப்பதற்கான சாத்தியம் குறைவு என வரையறுத்திருந்த பல விடயங்கள் பிற்காலத்தில் ஏதோ ஒருவகையில் நடந்திருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே, புதிய அரசியலமைப்பு, வடக்கு-கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், சமஷ்டி முறைமை போன்றவற்றையும் முஸ்லிம்கள் நோக்க வேண்டியிருக்கின்றது.
முரண்பட்ட நிலைப்பாடுகள்
2015ஆம் ஆண்டு இப்போதிருக்கின்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியலமைப்பு மறுசீரமைத்து புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் மீண்டும் உத்வேகம் பெற்றிருக்கின்றன. 2016ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வழிநடாத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் முன்னமே சாதக, பாதக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்க, இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பரிந்துரை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை என்ற பெயரிலான நகல் யாப்பு கடந்த 11ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்போதிலிருந்து இன்று வரை இணைந்த வடகிழக்கிலான தீர்வை வேண்டி நிற்பதுடன், அது புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக மாத்திரமே சாத்தியமென்று திடமாக நம்புகின்றது. மூவின மக்களும் ஒற்றுமையுடனும் சமஉரிமையுடனும் வாழ்வதற்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்று அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.
வடக்கு, கிழக்கு இணைக்கப்;படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னமே கூறியிருக்கின்றார். இந்நிலையில் பெருந்தேசிய அரசியலிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் 'ஏகித்த ராஜிய', 'ஒருமித்த நாடு' என்பதும் 'ஒற்றையாட்சி' என்பதும் ஒன்றுதானா எனக் குழப்பங்கள் ஏற்பட்டிருந்த வேளையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முக்கிய பௌத்த தேரர்களைச் சந்தித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'நாடு ஒற்றையாட்சி என்ற தன்மையில் இருந்து மாறுபடாது' என்று கூறியிருக்கின்றார்.
இதற்கிடையில், இலங்கைக்கு புதியதாக ஒரு அரசியலமைப்பு தேவையே இல்லை என்று முக்கிய பௌத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் காட்டமாக அறிவித்திருக்கின்றன. அத்துடன், மக்களின் ஆணையில்லாத அரசாங்கம் பௌத்த பீடங்களின் ஆசீர்வாதமின்றி யாருடைய தேவைக்காக இதனைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றன. அதுபோதாதென்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று தினங்களுக்கு முன்னர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். 'ரணிலைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் விரைவில் வடக்கு, கிழக்கை தாரைவார்த்து விடுவார்' என்று மஹிந்த கூறியிருக்கின்றார்.
இவ்வாறான ஒரு புறச்சூழலில், முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு, எதிர்காலம், அபிலாஷைகள், நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து முஸ்லிம் மக்களும் சிவில் அமைப்புக்களும் அரசியல் நோக்கர்;களும் சிந்தித்தும் எழுதியும் கொண்டிருக்க, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சாணக்கியர்களும் மேதைகளும் சூடுசுரணை இல்லாமல் இவ்விடயத்தில் நடந்து கொள்வது சிவில் சமூகத்தின் மத்தியில் கடுமையான விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைச் சொல்லாமல் விட முடியாது.
அதுபற்றி தெரியுமா?
முதலில், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நகர்வுகள், கொள்கை மற்றும் யாப்பு மறுசீரமைப்புக்கள் குறித்து அமைச்சர்களாகவும், இராஜாங்க, பிரதி அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்ற நபர்கள் அறிவார்களா அல்லது இருக்கின்ற ஒரு வருடத்திற்குள் தமது சொந்த கஜானாக்களையும் வாக்கு வங்கிகளையும் பலப்படுத்துவதில் மட்டும் குறியாக இருக்கின்றார்களா? என்ற கேள்வியை கேட்டே ஆக வேண்டும்.
உத்தேச அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்களை எத்தனை அரசியல்வாதிகள் முழுமையாக வாசித்திருக்கின்றார்கள்? அதில் உள்ள ஏக்கிய ராஜிய, ஒருமித்த ஆட்சி என்ற சொற்பதங்களுக்கும் பொதுவெளியில் பேசப்படுகின்ற ஒற்றை ஆட்சி என்பதற்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தை எத்தனைபேர் ஆழ்ந்து நோக்கியிருக்கின்றார்கள் என்ற சந்தேகமும், இவ்வறிக்கையின் அதிகாரப் பகிர்வுக் கோட்பாடுகள் பிரிவின் 2ஆம் உப பிரிவிலுள்ள 3 முன்மொழிவுகளினதும் தார்ப்பரியத்தை அறிவார்களா என்ற சந்தேகமும் நீண்ட நாட்களாகவே இருக்கின்றது.
'லைக்கா' என்ற நாய்க்குட்டியை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பிய காலத்திலேயே, முஸ்லிம் அரசியல்வாதிகளில் 99 சதவீதமானோர் இன்றும் இருக்கின்றனர். அவர்களில் அநேகர்; நீல்-ஆம்ஸ்டோங் காலத்திற்குக் கூட இன்னும் முன்னேறவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளைப் பார்கின்ற அவர்களுடைய ஆதரவாளர்களுக்கே புரிகின்றது.
நடக்க முடியாத விடயங்களை நடத்திக் காட்டுவதுதான் அரசியல் என்றால் அதனை தமிழ் தேசியம் செய்து கொண்டிக்கின்றது என்றால்,முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதைக் கூட திட்டவட்டமாகச் சொல்லாமல் இருக்கின்ற அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்.
பௌத்த பீடங்களையும் சிங்கள மக்களையும் மீறி புதிய அரசியலமைப்போ, முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பாதகமான தீர்வுத் திட்டமோ வழங்கப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான சாத்தியமே இல்லை என்ற கற்பிதங்களை இனிக் கைவிட்டிக்க வேண்டும். ஒருவேளை அப்படி நடந்தால்... முஸ்லிம்களிற்கு அதில் என்ன விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை உரக்கச் சொல்வதில் என்ன குறைந்து விடப் போகின்றது.
உண்மையில் இந்த ரகமான முஸ்லிம் அரசியல்வாதிகளை சமூகம் அவதானித்தே வருகின்றது. சில வேளைகளில் ஆட்சியாளர்களுக்காக கூஜா தூக்குகின்ற, தமது கட்சிசார்பு அரசியலுக்காகவும் சொந்த நிலைப்பாடுகளுக்காகவும் கூப்பாடு போடுகி;ன்ற இவர்கள் யாருக்கான அரசியல் பிரதிநிதிகள் என்பது சிலவேளைகளில் புரியாத புதிராகவே இருக்கின்றது. அரசியல்வாதிகளே இப்படியென்றால் மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மக்களின் நிலை
முஸ்லிம் மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. சமூக ஆர்வலர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், ஆய்வாளர்களும், ஒருசில ஊடகவியலாளர்களும் மட்டுமே நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற நகர்வுகளின் பாரதூரம் பற்றியும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் அதிகமாக சிந்திக்கி;ன்றனர். இன்னும் சிலர் நேரம் கிடைக்கும் போது சிந்திக்கின்றனர்.
பலருக்கு முஸ்லிம்களின் அரசியலும் அபிலாஷைகளும் தேனீர்க்கடையில் பொழுது போக்குவதற்கான கருப்பொருட்களாக மட்டுமே இருக்கின்றன. தமிழர்களின் அளவுக்கு, கணிசமான முஸ்லிம்கள் தம்முடைய அபிலாஷைகள், அரசியல்வாதிகளின் போக்குகள் பற்றி நேரிய மனதுடன் ஆழமாக சிந்திக்கின்ற தன்மை இல்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட தனித்துவக் கட்சிகளும் அக்கட்சிகள் மற்றும் பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாக செயற்படுகின்ற அரசியல்வாதிகளும் ஏராளம் பேர் இருக்கி;ன்றனர். அவர்கள் சமூகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என மறுக்க முடியாதபடி முஸ்லிம்களுக்கு பல சேவைகளை செய்திருக்கின்றார்கள்தான். ஆனால் அரசியலமைப்பு திருத்தம், மறுசீரமைப்பு, சட்ட வரைபுகள், இனப் பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களில் இவர்கள் காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை.
அதிலும் குறிப்பாக இலங்கையில் சுமார் ஐம்பது வருடகால வரலாற்றைக் கொண்ட இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை பெறுவதற்கான எல்லா விதமான உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களையும் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியம் செய்திருக்கின்றது. அத்துடன், அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஊடாகவும் வடக்கு கிழக்கை இணைத்தும் இனப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவாவி நிற்கின்றது.
அதாவது தமிழ்த் தேசியம் தமது சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கனகச்சிதமாகச் செய்திருப்பதுடன் அந்ந நிலைப்பாட்டில் விடாப்பிடியுடன் செயற்பட்டு வருகின்றமையும் கண்கூடு.
முஸ்லிம்களுக்குரிய பங்கு
அண்மைக்காலத்தைப் பொறுத்தவரையில், வட மாகாண சபையானது சமஷ்டி அடிப்படையிலான இனப் பிரச்சினைத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று சில காலத்திற்கு முன் தீர்மானம் நிறைவேற்றியது. சமஷ்டித் தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே முன்வைத்திருந்தது.
காலியில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி., சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியமற்றது என்று கூறியதாக தகவல் வெளியானதையடுத்து, அது தமிழர் அரசியலில் விமர்சனங்களுக்குள்ளாகியது. அப்போது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என்று செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் மீளவும் வலியுறுத்தினர். எனவே தமிழ்த் தேசியம் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
இனப் பிரச்சினை தீர்வு என்று வருகின்ற போது.... வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்ற அடிப்படையிலும், இனப் பிரச்சினையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற வகையிலும், இங்கே தமிழர்களுக்கு ஒரு அதிகார அலகு வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு 'ஏதாவது ஒன்று' வழங்கப்பட வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையிலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, இனப் பிரச்சினை தீர்வு போன்ற விடயங்களில் முஸ்லிம்களின் முஸ்லிம்களுக்குரிய பங்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
தமது தேவைப்பாடுகள் அபிலாஷைகள் என்னவென்பதை தமிழ்த் தேசியம் தெட்டத்தெளிவாகச் சொல்லியிருக்கின்றது. அப்படியென்றால், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அமைச்சர்களும் அரை அமைச்சர்களும் ஏன் இன்னும் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக, எழுத்துவடிவில், பகிரங்கமாகச் சொல்லவில்லை? இது ஜனநாயகத்திற்கான போராட்டம் இல்லையா? முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதும் அதற்காக குரல்கொடுப்பது முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடமை இல்லையா?
அவ்வாறாயின், இன்று வரை அதுபற்றி பேசாதிருக்கின்ற அல்லது மூடுமந்திரம் வாசிக்கும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.மாரிடம் ஏன் நமது வாக்காளப் பெருமக்கள் அதுபற்றி கேட்கவில்லை? ஒரு பள்ளிவாசல், பொது அமைப்பு, நலன்விரும்பிகள், இளைஞர்கள் அல்லது ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளை வழிமறித்து நிறுத்தி, ஏன் உறைக்கும் விதத்தில் இது குறித்து வினவவில்லை? 'முஸ்லிம்களின் அபிலாஷைகளை தீர்வுத்திட்டத்தில் உறுதி செய்வதற்காக நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள்' என்ற விபரத்தை இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்காளர்கள்; ஏன் தமது மக்கள் பிரதிநிதியிடம் கோரவில்லை?
மக்களே இப்படி அக்கறையற்றிருந்தால் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது கரிசனை எங்கிருந்து வரப் போகின்றது! மிகச் சுலபமாக காரணங்களையும் கற்பிதங்களையும் கூறிக் கொண்டு அல்லது 'புதிய அரசியலமைப்பு வராது, தீர்வுத்திட்டம் கொடுக்கப்படாது, மாகாணங்கள் இணைக்கப்படாது' என்று மேலோட்டமாகச் சொல்லிக் கொண்டே அவர்கள் நமது தலையில் மிளகு அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது.
சமஷ்டிக் கோரிக்கை
அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் தீர்வுத்திட்டம் போன்றவற்றில் மூன்று விடயங்கள் முக்கியமானவை. ஒன்று, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி இடைக்கால அறிக்கையில் உள்ள முன்மொழிவுகள். இரண்டாவது, ஏக்கிய ராஜிய என்பது உண்மையில் எதனைக் குறிக்கின்றது என்ற விடயம். மூன்றாவது சமஷ்டி அடிப்படையிலான தீர்வு பற்றிய சாத்தியக்கூறுகள்.
இவற்றுள், முதல் இரு விடயங்கள் பற்றியும் கேசரி வாரவெளியிட்டுக் கட்டுரைகளில் முன்னமே அலசியிருக்கின்றோம். இப்போது சமஷ்டி பற்றி, முஸ்லிம்களின் கோணத்தில் இருந்து நோக்க வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.
சுமகால முஸ்லிம் அரசியல் ஆய்வாளரான வை.எல்.எஸ்.ஹமீட் போன்றோரின் கருத்தின்படி, உத்தேச அரசியலமைப்பானது மிகச் சூசகமான முறையில் சமஷ்டி (பெடரல்) அடிப்படையிலான தீர்வுக்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிகின்றது. இலங்கைக் குடியரசு என்பது மத்தியினதும் மாகாணங்களினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஏக்கிய ராஜிய ஃ ஒருமித்த நாடாகும் என்று இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை நினைவூட்டுகி;ன்ற ஹமீட், மத்தியினதும் மாகாணங்களினதும் அரசுகளை சமாந்திர நிலைக்கு கொண்டுவருவதன் ஊடாக சமஷ்டியின் பண்பியல்பு தோற்றுவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றார்.
சமஷ்டி என்று வெளிப்படையாக குறிப்பிட்டால் ஏற்படும் சிக்கல்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஏக்கிய ராஜிய, ஒருமித்த நாடு என்ற சொற்பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களை கட்டமைத்து அவற்றையெல்லாம் சேர்த்து இவைதான் ஒருமித்த நாடு என்று வரைவிலக்கணம் கூறப்படலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.
எனவே சமஷ்டித் தீர்வொன்று வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இதில் அதிகார எல்லைகள், மத்திய-மாநில மேலாதிக்கங்கள், பிரிந்து செல்வதற்கான நிகழ்தகவு, சுயநிர்ணய உரிமையின் செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கலாம் என்பது குறித்தெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் முதலில் நன்கு படித்தறிந்து, சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது.
தமிழர்கள் கால்மேல் கால்போட்டுக் கொண்டு உல்லாசமாக இருந்து விட்டு தீர்வுகேட்கவும் இல்லை. வெற்றிலை பாக்கு வைத்து ஆட்சியாளர்கள் அதை வழங்க முன்வரவும்; இல்லை. சரி பிழைகளுக்கு அப்பால் இது நீண்டகால முயற்சியின் பயனாக கிடைக்கப் போகின்றது. எனவே முஸ்லிம்கள் இதற்கு குறுக்கே நிற்கவேண்டியதில்லை. ஆனால் இனப் பிரச்சினையுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புபட்ட இனக் குழுமம் என்ற வகையில் தனியொரு தேசிய இனம் என்ற வகையிலும் தமக்குரிய பங்கை அல்லது உபதீர்வை கோருவதில் எந்தத் தவறும் இல்லை.
1956 தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாட்டிலும், 1961இல் 9ஆவது மாநாட்டிலும், 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் முஸ்லிம்களுக்கும் ஒரு சுயாட்சி அலகு வழங்குவதற்கான விருப்பை கொள்கைப் பிரகடனமாக முன்னைய தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தார்மீகமாக அதை இப்போது மறுக்க முடியாது. ஆனால் முஸ்லிம்கள் கேட்காமல் அது கிடைக்கவுமு; மாட்டாது.
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ அல்லது வேறு சட்ட ஏற்பாடுகளின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் போது, முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டது போல முஸ்லிம்களுக்கும் ஒரு சமஷ்டி வேண்டுமா? ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் எம்.ரி.ஹசன்அலி சொல்வது போல நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணமா? அல்லது முஸ்லிம் அதிகார அலகா? நுpலத்தொடர்புள்ள மாகாணமா வேண்டும்? அவ்வாறில்லாவிடின் ஒன்றும் தேவையில்லை என்று நினைக்கின்றீர்களா? என்பதை இனியாவது அதிகாரமுள்ள முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் சொல்ல வேண்டும் அதற்கான சொல்ல வேண்டும். அதற்கான அழுத்தத்தை ஒவ்வொரு முஸ்லிம் பொது மகனும் வழங்க வேண்டும்.
நிலவில் போய் குடியேற நினைக்கும் காலத்தில், பாட்டி வடைசுடும் கதைகளை சொல்வதற்காக மட்டுமே நிலவினை எண்ணிப்பார்ப்பதைப் போல, தமிழர்கள் வெளிப்படுத்துகின்ற அக்கறையில் கால்வாசியையாவது முஸ்லிம்கள் வெளிப்படுத்தாமல் விடுவார்களேயானால், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்காலமும் அமாவாசைகள் நிறைந்ததாக இருப்பதே விதியாகும். அதை நீங்கள் தலையெழுத்து என்பீர்கள்.
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 20.01.2019)

0 comments:
Post a Comment