எஸ்.றிபான் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு சென்று சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அமைச்சர் றிசாட் பதியூதீனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளார்;. இதற்கு எதிர்க்;கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் ஆதரவாக ஒப்பமிட்டுள்ளார்கள். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலிகளின் பின்னர் அமைச்சர் றிசாட் பதியூதீனை பௌத்த இனவாதிகளும், எதிர்க் கட்சியினரும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் செயற்பாடுகள் அரசியல் பின்னணியைக் கொண்டதாக இருக்கின்றது. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். ஆட்சியை மாற்ற வேண்டும். தாம் ஆட்சிக்கு வர வேண்டுமென்று பல்வேறு காய்களை நகர்;த்திக் கொண்ட போதிலும், அவற்றில் அவர்கள் தொடர் தோல்விகளையே சந்தித்துக் கொண்டார்கள். இந்நிலையில்தான் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இவர்களின் அதி;கார வெறி மீதான பசிக்கு அமைச்சர் றிசாட் பதியூதீன் தீனியாக்கப்பட்டுள்ளார் என்பதே புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோர்களின் பரவலான கருத்தாக இருக்கின்றது.
அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது பௌத்த இனவாதிகள் இதற்கு முதலும் பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்கள். அதாவது, சட்ட விரோதமாக வில்பத்து காட்டினை அழித்து முஸ்லிம்களை குடியேற்றியுள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு முஸ்லிம்களை குடியேற்றியுள்ளார். ஊழல்வாதி என்று நீண்ட பட்டியலைக் கொண்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இக்குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிருபிக்கப்படவில்லை. எந்தவொரு குற்றச்சாட்டும் சட்ட ரீதியாக நிருபிக்கப்பட வேண்டும். தெருச் சந்தியில் கதைப்பது போன்று வாயால் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டு ஒருவரை குற்றவாளி என்று முத்திரை குத்த முடியாது.
இன்றுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பௌத்த இனவாதிகளின் அதிகபட்ச விமர்சனத்திற்குரிய ஒருவராக அமைச்சர் றிசாட் பதியூதின் இருப்பதற்கு வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அவர் எடுத்துக் கொண்ட அக்கறை என்றே சொல்ல வேண்டும். வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு போதிய காணியில்லாத நிலையில் அரசாங்கத்தின் அங்கிகாரத்தோடு குறிப்பிட்ட அளவு காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்துள்ளார். இதே வேளை, முசலி போன்ற பிரதேச முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் சுமார் 25 வருடங்களாக கவனிப்பாற்று இருந்தமையால் காடுகள் வளர்ந்துள்ளன. அதற்காக, அவற்றை காட்டுப் பிரதேசம் என்று அடையாளப்படுத்த முடியாது. முஸ்லிம்களை தமது சொந்த இடத்தில் குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இனவாதிகள், காடுகளை அழித்தும், சிறுபான்மையினரின் காணிகளைப் பறித்தும் பௌத்தர்களை குடியேற்றிக் கொண்டிருப்பதனை அங்கிகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே, பல்வேறு குற்றச்சாட்டுகளை அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது முன் வைத்து போராட்டங்களையும், விவாதங்களையும் நடத்திக் கொண்டிருக்கும் பௌத்த இனவாதிகளும், அவர்களை போஷித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் தற்போது புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இக்குற்றச்சாட்டு ஏற்கனவே முன் வைத்த குற்றச்சாட்டுக்களை விடவும் பாரதூரமானதாகும்.
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்த அமைப்புக்கும் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு இடையே தொடர்புகள் உள்ளதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஆதாரமாக தற்கொலைதாரிகளின் தந்தை இப்றாகிம் ஹாஜியாருடன் அமைச்சர் றிசாட் பதியூதீன் காணப்படும் போட்டோ ஒன்றை காட்டுகின்றார்கள். அத்தோடு, தற்கொலைதாரியின் தொழிற்சாலைக்கு வெற்று துப்பாக்கி ரவைகளை அளவிற்கு அதிகமாக விநியோகம் செய்தார் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இக்குற்றச்சாட்டுக்களை அமைச்சர் றிசாட் பதியூதீன் முற்றாக மறுத்துள்ளார். அதற்குரிய ஆதாரங்களையும் முன் வைத்துள்ளார்.
அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது ஏற்கனவே முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சிந்தனைகளைக் கொண்டதாகும். இதில் தேசிய ரீதியான அரசியல் நகர்வுகள் இருக்கவில்லை. ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை முன் வைத்து றிசாட் பதியூதினின் அரசியலை பின்னடையச் செய்ய வேண்டுமென்று ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட்டார்கள். அத்தோடு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் அரசியலாக்கி இலாபம் தேடிக் கொள்ள முயற்சிகளை எடுத்தக் கொண்டார்கள். ஆனால், தற்போது முன் வைத்துள்ள குற்றச்சாட்டு தேசிய அரசியலை மையப்படுத்திய குற்றச்சாட்டுக்களாகும்.
அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கும் ஐ.எஸ் அமைப்புக்குமிடையே தொடர்புகள் இருக்குமாயின் அவரை சட்டத்திற்கு முன் நிறுத்தியாக வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது இப்றாகிம் ஹாஜியாருடன் உள்ள போட்டோவை வைத்துக் கொண்டும், சட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெற்று ரவைகளை வைத்துக் கொண்டும் பாராளுமன்றத்தில் பேசுவதனால் மாத்திரம் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டுவது அரசியல் பின்னணியைத் தவிர வேறு எதுவுமில்லை. சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர் றிசாட் பதியூதீனை பயங்கரவாதி போன்று காட்டுவதன் மூலமாக முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் என்ற பார்வையை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்றாகிம் ஹாஜியார் பல கட்சிகளின் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டவர். அவர்களுடனும் போட்டோக்களில் காணப்படுகின்றார். ஆனால், அவர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்திப் பேசவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மலையக் கட்சிகளின் கூட்டமைப்பாகிய தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கே என்பது முடிவானதாகவே இருக்கின்றது. இதனால், கோத்தபாயாவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு என்பது கல்லில் நார் உறிக்கும் கதையாகவே இருக்கும். இதனால், பெரும்பான்மை சிங்கள மக்களின் அமோக வாக்குகளினால் வெற்றி பெறுவதற்குரிய திட்டத்தை வகுத்துச் செயற்படுவதாகவே இருக்கின்றது. சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் 40 வீதத்திற்கும் அதிகமான சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுமாயின் சிறுபான்மையினரின் பெரும்பான்மையான ஆதரவுடன் வெற்றி பெற முடியுமென்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கணிப்பாக இருக்கின்றது.
இந்த அரசியல் சித்துவிளையாட்டுக்குள் அமைச்சர் றிசாட் பதியூதீன் அகப்பட்டுள்ளார். இதே வேளை, ஐக்கிய தேசிய கட்சியும் அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது எதிர்க் கட்சியினரால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டாலும், இக்குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியல் இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. அதாவது, அமைச்சர் றிசாட. பதியூதீன் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் இதனை திட்டமிட்ட சதியாகவே பார்க்கின்றார்கள்.
அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது. வில்பத்துவாக இருந்தாலும், வேறு குற்றச்சாட்டுக்களாக இருந்தாலும் இவற்றை முன் வைக்கின்றவர்களுக்கு இதன் உண்மைத் தன்மை தெரியாமலுமில்லை. நீதிமன்றத்திற்கு சென்றால், அங்கு தீர்ப்பு அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு சாதகமாக அமைந்தால் பின்னர் அதனைப் பற்றி பேச முடியாது. அது போலவே ஐ.எஸ் தொடர்பு என்ற குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் சென்றால் அதற்குரிய தீர்ப்பு வரும் வரைக்கும் அமைச்சர் றிசாட் பதியூதீனை குற்றவாளி என்று பேச முடியாது. அத்தோடு தற்போது மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்க முடியாது. அது மட்டுமல்லாது தீர்ப்பு அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு சாதகமாக அமைந்தால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றாகிவிடும். இந்த கூட்டல், கழித்தல்களை மேற்கொண்டே அமைச்சர் றிசாட் பதியூதினுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சர் றிசாட் பதியூதீன் மீது பாhராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமாயின் அவரை அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு அழுத்தங்களை கொடுப்பார்கள். அத்தோடு, அரசாங்கத்தை கலைப்பதற்குரிய அழுத்தங்களையும் கொடுப்பார்கள். அரசாங்கத்தை கலைக்காது போனால் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்துவார்கள். இதனால், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் மோசமடையும், அதனையும் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். ஆக, தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவும் அரசியல் பின்னணியைக் கொண்டதேயன்றி வேறு எதுவுமில்லை.
அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகத்தான் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் என்றால் அமைச்சர் றிசாட் பதியூதீன் மாத்திரம் ஏன் குறி வைக்கப்படுகின்றார் என்ற கேள்வியும் எழுகின்றது. இன்றைய அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்று மஹிந்தராஜபக்ஷ அணியினர் பல முயற்சிகளை எடுத்துள்ளார்கள். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும், நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்காவுக்கு எதிராகவும் மஹிந்தராஜபக்ஷ அணியினர் நம்பிக்கையில்லாத் பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளார்கள். இவற்றில் மஹிந்தராஜபக்ஷ அணியினர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கபடத்தனமாக உறவைப் பேணி, அவரை பொது வேட்பாளராக நிறுத்துவதாக உடன்பாடு கண்டு, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு, மஹிந்தராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை, புதிய அமைச்சரவையை நியமித்தது. இவை கூட அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய சதியாகும். இந்த சதி நடவடிக்கை கூட 52 நாட்களே நீடித்தது. அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் பாராளுமன்றத்தையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பயன்படுத்தி கலைத்தார்கள். இறுதியில் இவை யாவும் செல்லுபடியற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இந்தப் பெரும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்கு சிறுபான்மைக் கட்சிகளின் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் திடமான முடிவும் ஒரு காரணமாகும். முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தால் 113 என்ற பெரும்பான்மையை மஹிந்தராஜபக்ஷ இலகுவாக காட்டியிருப்பார்.
இவ்வாறு, அரசாங்கத்தை மாற்றுவதற்கு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மஹிந்தராஜபக்ஷ அணியினர் எடுத்துக் கொண்ட போதிலும் தோல்வியை பெறுபேறாகப் பெற்றுக் கொண்டார்கள். ஆயினும், அரசாங்கத்தை உரிய காலத்திற்கு முன்னதாக கலைக்க வேண்டுமென்ற முயற்சியை அவர்கள் கைவிடவில்லை.
அமெரிக்க போன்ற ஒரு சில சர்வதேச நாடுகளின் தேவைக்காகவும், இலங்கையின் அரசியலை தமது கைக்குள் வைத்துக் கொள்வதற்காகவும், இலங்கையின் அரசியல் தேவைக்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையின் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உட்பட சர்வதேச அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கப்படுகின்ற தற்கொலை தாக்குதல்கள் நடைபெற்றன. இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் என்பதனைக் கையில் எடுத்து அரசாங்கத்தை மாற்றலாமா என்று முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமையில் கட்டிவிட்டால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க நாட்டில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் வளர்வதற்கு இடமளித்து விட்டார் என்று பிரச்சாரம் செய்வதற்கும், தங்களை நாட்டின் பாதுகாவலர் என்று காட்டுவதற்கும், இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மஹிந்த, கோத்தபாய ஆகியோர்களுக்கே முடியும் என்று காட்டுவதற்கும் தற்கொலை தாக்குதலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதில் ஏன் அமைச்சர் றிசாட் பதியூதீனை குறி வைத்துள்ளார்கள் என்றால், தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட இருவர்களின் தந்தையாக இப்றாகிம் ஹாஜியார் உள்ளார். இவருடன் அமைச்சர் றிசாட் பதியூதீன் போட்டோ ஒன்றில் காணப்படுகின்றார். இதனையே ஆதாரமாக சிங்கள மக்கள் மத்தியில் காட்டுவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இப்றாகிம் ஹாஜியாருடன் உள்ள போட்டோவில் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு மாற்றமாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் போட்டோவில் காணப்பட்டிருந்தால் அவரை பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று சொல்லியிருப்பார்கள். இதற்குள்ள மற்றுமொரு நல்ல உதாரணம்தான் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீதும் பயங்கரவாதிகளுடன் தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு கூட தற்கொலை தாக்குதல்களை தலைமை தாங்கிய சஹ்ரான் காசிம் ஹிஸ்புல்லாஹ்வோடு கைகுலுக்கும் போட்டோ ஒன்றையே காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக இவர்களின் எண்ணம் தெளிவாகின்றது.
ஏற்கனவே, வில்பத்து போன்ற குற்றச்சாட்டுக்கள் பௌத்த இனவாதிகளினால் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், போட்டோவையும், அமைச்சர் றிசாட் பதியூதீன் சம்பந்தப்படாத நிலையில் வெற்று ரவைகளை வழங்கியமையும் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதற்கு இலவாகியுள்ளது.
மேலும், அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய 52 நாள் போராட்டக் காலத்தில் தங்களுக்கு அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆதரவு வழங்குவார் என்று மஹிந்தராஜபக்ஷ அணியினர் பெரிதாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அதற்காக எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்ட ஒரு சிலர் அமைச்சர் றிசாட் பதியூதீனுடன் பேசிய போதிலும், அவர் ஆதரவு வழங்குவதற்கு மறுத்துவிட்டார். 52 நாள் பிரதம மந்திரியாக இருந்தமை, பாராளுமன்றத்தை கலைத்தும் பயனில்லாது போனமை ஆகியவற்றில் மஹிந்தராஜபக்ஷ அணியினருக்கு கௌரவக் குறைச்சலையே ஏற்படுத்தியது. இதனால், ரவூப் ஹக்கீம் உட்பட குறிப்பாக றிசாட் பதியூதீன் மீது மிகுந்த கோபத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வரமாட்டார். ஆனால், றிசாட் பதியூதீன் வருவார் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால், றிசாட் பதியூதீனும் ரணிலோடு ஒட்டிக் கொண்டமையை அவர்களினால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த சம்பவங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் றிசாட் பதியூதீனின் கழுத்திற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை; கத்தியாக வந்துள்ளது.
இதே வேளை, இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு அரசியலை செய்து கொண்டிருப்பவர்கள் தமது இந்த முயற்சியிலும் தோல்வி அடைய முடியாதென்பதில் குறியாக இருக்கின்றார்கள். இதனால், அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் றிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து விட்டு, அதாவது, றிசாட் பதியூதீனுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என்ற பொருளைக் கொண்ட சிங்கள மொழியிலான வாசகங்கள் உள்ள பதாகைகளை ஊருபொக்க, பொலநிறுவை, அநுராதபுரம், பொரலஸ்கமுவ, வெலிவிட்ட, கடுவெல, மாலவே ஆகிய இடங்களில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலமாக இவர்களின் நோக்கத்தை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
எனவே, அரசியல் பின்னணியைக் கொண்ட அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீது சிறுபான்மைக் கட்சிகள் தமக்கு இடையே உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
Vidivelli 24.05.2019

0 comments:
Post a Comment