எஸ்.றிபான் -
முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், பள்ளிவாசல்களையும் அழிப்பதனை கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வரும் பௌத்த இனவாதிகள் மற்றுமொரு தாக்குதல்களை திங்கட்கிழமை மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்களினால் முஸ்லிம்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் மீது இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவது இது முதற் தடவையல்ல. 1915ஆம் ஆண்டிலிருந்து பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட எல்லா தாக்குதல்களின் போதும் பாதுகாப்பு தரப்பினர் பொடுபோக்காகவே செயற்பட்டுள்ளார்கள். திங்கட்கிழமை கூட ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலேயே முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்கள் வயல்வெளிகளில் ஓடித் தப்பியுள்ளார்கள்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் பிரதேசங்கள் சோதனையிடப்பட்டு வாள், கத்தி போன்ற ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றிச் சென்றனர். இதன் போது முஸ்லிம்களின் தற்பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டன. அதே வேளை, சிங்களவர்களின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அங்கும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பெரும்மளவு வாள், கத்திகளை பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றியிருக்க முடியும்.
முஸ்லிம்களிடம் தற்காப்பு ஆயுதங்கள் கூட இல்லாத நிலையில் நிராயுதபாணிகளின் மீது ஆயுததாரிகள் வாள்,கத்தி, இரும்புக் கம்பி போன்றவற்றை பயன்படுத்தி முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்களை தாக்கியுள்ளார்கள். அத்தோடு, பெற்றோல் குண்டுகளையும், பெற்றோலையும் பயன்படுத்தியே முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு தீ வைத்து எரித்துள்ளார்கள்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் பஸ் வண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வருகை தந்தவர்களே தங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக தாக்குதலுக்குள்ளான முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். இதன் மூலமாக ஊரடங்கு சட்டம் என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்பதாகவும், பௌத்த இனவாதிகள் சட்டத்தை மதிக்காது செயற்படவும், முஸ்லிம்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தவும் அனுமதிக்கும் ஒன்றாகவே ஊரடங்குச் சட்டம் உள்ளா என்று எண்ண வேண்யுள்ளது. திகன, கண்டி ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது இவ்வாறே நடைபெற்றுள்ளன. ஆதலால், முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமல்லாது பௌத்த இனவாதிகளின் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளும், பாதுகாப்பு தரப்பினரும் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் இலக்குகள் முடிவடைந்ததன் பின்னர் சிலர் கைது செய்யப்படுவதும், அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவதும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலக்ளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று பம்மாத்துக் காட்டுவதற்காகவே கைதுகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டவர்களின் மீது இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் திங்கட்கிழமை நடைபெற்ற தாக்குதல்கள் நடைபெற்றிருக்காது. ஏனெனில், ஏற்கனவே முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்களே இத்தாக்குதல்களையும் வழி நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில்தான் டான் பிரசாத், நாமல்குமார, அமீத் வீரசிங்க ஆகியோர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்றதன் பின்னர் சூத்திரதாரிகளை கைது செய்வதனால் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரயோசனமுமில்லை. தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட முஸ்லிம்களை பாதுகாக்கவில்லை. இதனால், முஸ்லிம்கள் பாதுகாப்பு தரப்பினரின் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்நிலை நீடிக்கக் கூடாது. இந்நிலை நீடிக்குமாயின் அது பயங்கரவாத்திற்கே வித்திடும் என்பதனை அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பினரும் கவனத்திற் கொள்ள வேண்டும். இக்கருத்தை ஒரு சில அரசியல்வாதிகளும் முன் வைத்துள்ளார்கள்.
முஸ்லிம்கள் தங்கள் மத்தியில் ஒரு சிறிய குழுவினர் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்ததுடன் மட்டுமல்லாது, அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இச்சிந்தனையுடன் முஸ்லிம்கள் செயற்படும் போது வேண்டுமென்று பௌத்த இனவாதக் காடையர் கும்பல் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது முஸ்லிம்கள் மத்தியில் வன்மமே வளரும். தற்காப்புக்கு கூட எதுவுமில்லாத ஒரு சமூகத்தின் மீது ஆயுதங்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளும் போது, முழ நாட்டினதும் அமைதியையும் நீண்ட காலத்திற்குப் பின்னர் இல்லாமல் செய்திடும். தமிழர்களின் மீது இனவாத ஒடுக்கு முறையை மேற்கொண்டதனால்தான் 30 வருடமாக யுத்தம் செய்ய வேண்டியேற்பட்டது. இந்த யுத்தத்தினால் நாடு பலவற்றை இழந்ததை இலங்கை மக்கள் மறக்க முடியாது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த போதிலும், அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகமாகும். ஒரு இலடசத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. இதே வேளை, 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை யுத்தமற்ற நாடாக இருந்த போதிலும், இக்காலப் பகுதியில் முஸ்லிம்களின் மீது ஒரு மௌன யுத்தத்தை பௌத்த இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதிக இழப்புக்களை முஸ்லிம்களே சந்தித்துள்ளார்கள். யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் இழப்புக்கள் சந்தித்தார்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்;லிம்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகள் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றார்கள். முஸ்லிம் பிரதேசங்களில் படையினரால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்கள் மென்மையாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை கண்டித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் உட்பட பலர் அறிக்கைகளை விடுத்துள்ளார்கள். இதே வேளை, இப்பத்தி எழுதும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த கண்டன அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் தாக்கப்பட்டதன் பின்னர் அறிக்கைகளை மாத்திரம் விடுத்துவிட்டு வாழாவெட்டியாக இருக்க முடியாது. குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள், ஜம்மிய்யத்துல் உலமா சபை, ஏனைய முஸ்லிம் சமூக அமைப்பபு;கள் அறிக்கைகளை விடுவதும், முஸ்லிம்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்வதும்தான் தாக்குதல்களின் பின்னர் விடுக்கின்ற முதற் செய்தியாக இருக்கின்றது. யார் எதனைச் சொல்லாது விட்டாலும் முஸ்லிம்கள் பொறுமையாகவே இருப்பார்கள். ஆனால், முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்திற்கு ஆதாரங்களின் அடிப்படையில் ஆவணமாக முன் வைக்க வேண்டும். இதனை முஸ்லிம் தலைவர்கள் செய்வதில்லை. இதே வேளை, மௌலவி நிப்லார் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புத் தலைமையகத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீயாயங்கள் பற்றி முறைப்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களை அரசாங்கம் பாதுகாப்பதற்கு தவறிவிட்டதென்று சொல்லும் தைரியம் முஸ்லிம் தலைவர்களுக்கு கிடையாது. மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போதும், தற்போதைய ஆட்சியின் போதும் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு தாக்குதல்களையும் முஸ்லிம் தலைவர்கள் சர்வதேசத்திடம் கொண்டு போகவில்லை. இது முஸ்லிம் தலைவர்களினால் சமூகத்திற்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகச் செயலாகும். முஸ்லிம்களுக்கு எந்த அரசாங்கத்திலும் பாதுகாப்பு இல்லையெனும் போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்று பங்காளிகள் என்று தலைப்பாகை கட்டுவதில் சமூகத்திற்கு எந்தப் பெருமையும் கிடையாது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தோடு இருக்கமாட்டார்கள். ஏனைய துறைசார் தலைவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக வழிப் போராட்டங்களை மேற்கொள்வார்கள். சர்வதேசத்தின் அழுத்தம் வருமென்ற நிலையை தோற்றுவித்தால்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். ஆட்சி அதிகாரம் பறிபோவதனை பேரினவாதக் கட்சிகளும், தலைவர்களும் விரும்புவதில்லை.
இதே வேளை, எப்போதும் நாட்டை இனவாத பிரச்சினையில் வைத்து அரசியல் செய்து பழக்கப்பட்ட பேரினவாதிகள், நாட்டில் இனங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய்வதற்கு முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டை எங்களினால்தான் பாதுகாக்கவும், அமைதியாக வைத்துக் கொள்ளவும் முடியுமென்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, ஆளுங் கட்சியினர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகவே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இவ்விரு தரப்பினரும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. அரசியல் தேவைக்காக ஒரு இனத்தின் அழிவின் மீது அரசியல் இலாபம் அடைந்து கொள்ள நினைக்கும் பேரினவாதக் கட்சிகள் நாட்டை சீரழித்துக்; கொண்டிருக்கின்றார்கள்.
1980ஆம் ஆண்டுகளின் பின்னர் பௌத்த இனவாதிகளும், அவர்களை தோளில் சுமந்து வைத்திருந்த அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியினரும் தமிழர்களை எப்படி கையாண்டார்களோ அது போலவே முஸ்லிம்களையும் கையாள நினைக்கின்றார்கள். தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்கிய பெருமையில் உள்ள பௌத்த பேரினவாதம் முஸ்லிம்களையும் அடக்குவதற்கு நினைக்கின்றது. ஆட்சியாளர்கள் தேர்தல் முறை மாற்றத்தின் மூலமாக முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அரசாங்கத்தின் உயர்தொழில் வாய்ப்புக்கள் ஆகியவற்றில் முஸ்லிம்களை புறக்கணித்தும் கொண்டிருக்கும் அதே வேளை, இனவாத சிந்தனைக்குரிய காடையர்கள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய செயற்பாடுகள் கூட பயங்கரவாத நடவடிக்கையாகவே இருக்கின்றது. பயங்கரவாதம் என்பது உயிர்களை கொல்வது, சொத்துக்களை அழிப்பது, மனிதர்களின் நிம்மதி வாழ்வினை கெடுப்பது, நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பது போன்ற பல முகங்களைக் கொண்டுள்ளன. இவை யாவற்றையும் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவாத தாக்குதல்கள்தாரிகளிடம் காணக் கூடியதாக இருக்கின்றன. ஆதலால், இவர்களும் பயங்கரவாதிகளே, ஆதலால், இந்தப் பயங்கரவாதிகளை அழிப்பதற்கு அரசாங்கமும், பாதுகாப்பு படையினரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே நாட்டின் அமைதியையும், அபிவிருத்தியையும் விரும்பும் உண்மையான பிரஜைகளின் வேண்டுகோளாகும்.
Vidivelli 17.05.2019

0 comments:
Post a Comment