ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை
உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக
மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின்
உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் ஐ.தே.க.தலைமையிலான ஜனநாயக தேசிய
முன்னணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது.
இதில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாடலி சம்பிக ரணவக, மனோ கணேசன்,
மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, அகில
விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயக தேசிய
முன்னணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
குறித்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த கலந்துரையாடலின்போது இணக்கப்பாடு
ஒன்றை எட்ட முடியாமல் போனதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக
புதிய கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி, தலைமையகம், உத்தியோகபூர்வ முகவரி
என்பன குறித்தும் கூட்டணியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டிய ஜனாதிபதி
தேர்தல் வேட்பாளர் குறித்தும் இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் கருத்து
முரண்பாடுகள் தலைதூக்கியதாக தெரிய வந்துள்ளது.
அது குறித்த முரண்பாடுகளுக்கான தீர்வுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம்
திகதிக்கு முன்னதாக முன்வைப்பதாக ஐ.தே.க.வின் உப தலைவர் ரவி கருணாநாயக்க
உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment