சஹாப்தீன் -
இம்மாதம் 16ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும்
எம்.எச்.எம்.அஸ்ரப்பின் 19வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. முஸ்லிம்
காங்கிரஸ் ஏற்பாடு செய்த நினைவு தினம் குருநாகலில் நடைபெற்றது.
பெரும்பாலும் அரசியல்வாதிகளே இத்தினத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அரசியல்வாதிகள் தங்களுக்கு எதில் இலாபமோ அதனை கெட்டியாகப் பிடித்துக்
கொள்வார்கள். அது மட்டுமன்றி, தமது கட்சியின் ஆதரவாளனாக இருந்தாலும்,
முக்கிய உறுப்பினராக இருந்தாலும், தனது அரசியல் வெற்றிக்காக உழைத்தவனாக
இருந்தாலும் அரசியல்வாதிகள் தங்களின் தேவைக்காக பயன்படுத்திக்
கொள்வார்கள். தேவை முடிந்ததும் கைவிடுவார்கள். இந்நிலைதான் மர்ஹும்
அஸ்ரப்புக்கும் ஏற்பட்டுள்ளது. மர்ஹும் அஸ்ரப்புக்கு 19வது நினைவு தின
வைபவங்களை ஏற்பாடு செய்தவர்கள் அவரது கொள்கைளை கடைப்
பிடிக்கின்றவர்களல்லர். அவர்கள் தங்களை மர்ஹும் அஸ்ரப்பின் பாசறையில்
வளர்ந்தவர்கள்
என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கின்றார்கள். ஆனால், அவரது கொள்கையை
நிலை நிறுத்தவில்லை. மர்ஹும் அஸ்ரப்பைப் பற்றி பேசாமல் தங்களது அரசியலைச்
செய்ய முடியாதென்பதற்காகவே வருடாந்தம் நினைவு தினத்தை ஏற்பாடு செய்து
வருகின்றார்கள். ஆதலால், மர்ஹும் அஸ்ரப்புக்காக ஒவ்வொரு
வருடமும் நினைவு தினத்தை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அவரின் உண்மை
விசுவாசிகள் என்று அடையாளப்படுத்த முடியாது. மர்ஹும் அஸ்ரப்பின் கொள்கைகளை
வாழ வைப்பவனும், அதற்காக உழைப்பவனுமே உண்மை விசுவாசியாக இருக்க முடியும்.
சுமார் 40 வருடங்களாக முஸ்லிம்களுக்கு தனித்துவமானதொரு அரசியல் கட்சி
இருக்கவில்லை. முஸ்லிம்கள் மத்தியில் தலை சிறந்த தலைவர்கள் பலர்
இருந்தார்கள். அவர்கள் தேசிய கட்சிகளின் மூலமாகவே அரசியலில் ஈடுபட்டு
வந்துள்ளார்கள். முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார்கள்.
சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்ளுக்கும் தனித்துவமான
அரசியல் கட்சிகள் இருந்தாலும், முஸ்லிம்களுக்கு தனித்துவமானதொரு அரசியல்
கட்சி இருக்கவில்லை. தேசிய கட்சிகள் எப்போதும் பௌத்த இனவாத கடும்போக்கு
தேரர்களுடன்தான் நெருக்கங்களை வைத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால், தேசிய கட்சிகளை வழி நடத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற
நடவடிக்;கைகளை பௌத்த இனவாதிகளே மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால்,
முஸ்லிம் அரசியலை தேசிய கட்சிகளுக்குள் ஒரு மூலையில் வைத்துக்
கொண்டிருக்கும் நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மர்ஹும் அஸ்ரப்
சிந்தித்தார்.
அவ்வாறு செய்தால்தான் எங்களின் தேவைககளை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும்,
அதற்காக குரல் கொடுக்கவும், பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகளை தெரிவு
செய்து கொள்ளவும் முடியுமென்று கருதினார். இதனால்தான் அவர் முஸ்லிம்
காங்கிரஸை தோற்றுவித்தார்.
மர்ஹும் அஸ்ரப் தாம் உயிரோடு இருக்கும் வரை தமது பணியை முடிந்த வரை
செய்தார். அதில் முஸ்லிம் சமூகமும் திருப்தியடைந்தது. இவ்விடத்தில் மர்ஹும்
அஸ்ரப்பிடமும் பலவீனங்கள் இருந்தன என்பதனை சொல்லியாக வேண்டும். ஆனால்,
அவரது பலவீனங்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை
சிதைக்கவில்லை. பேரம் பேசும் சக்தியை மலினப்படுத்தவில்லை என்பது
அவதானத்திற்குரியதாகும். ஆனால், இன்று முஸ்லிம் காங்கிரஸ் உட்பட
அக்கட்சியிலிருந்து பல காரணங்களுக்காக பிரிந்து தனிக் கட்சிகளை அமைத்துக்
கொண்டு செயற்படுகின்றவர்களின் பலவீனங்கள் முஸ்லிம் சமூகத்தை தலை
குனியச் செய்துள்ளது. முஸ்லிம்களின் அரசியல் சக்தியின் வலுவைக்
குறைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்காக வலுவாகக் குரல் கொடுக்க
முடியாதவர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்
உள்ளார்கள்.
மர்ஹும் அஸ்ரப்பின் திடீர் மரணம் அவரது கொள்கைளையும் மரணிக்கச்
செய்துள்ளது. அவரது அரசியல் வழிகாட்டலில் செயற்பட்டுக் கொண்டவர்கள்
சமூகத்தை மறந்து கண் போன போக்கிலே காலகளையும் போகவிட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் கட்சி இருக்க வேண்டுமென்று
ஆரம்பிக்கப்பட்ட
முஸ்லிம் காங்கிரஸின் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட அனைவரையும் பதவி எனும்
நோய் விரைவாக தொற்றிக் கொண்டது. இந்நோய் அஸ்ரப்பின் மரணம் இடம்பெற்று ஒரு
சில மணித்தியாலங்களில் வெளிப்பட்டது. கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்றிக்
கொள்வதற்கு முனைப்புக் காட்டினார்கள். அதற்காக
உயர்பீட உறுப்பினர்களை குழுக்களாக பிரித்து கையாண்டார்கள். இன்னும் சில
உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் தலைமை தம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டுமென்று விரும்பினார்கள். திரைமறைவில் அவர்கள் தலைவர்கள் போன்று
செயற்பட்டுக் கொண்டார்கள். ஆகவே, மர்ஹும் அஸ்ரப்பின்
மரணம் முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் பாடம் கற்றுக் கொண்டவர்களின் வேஷத்தை
கலைத்தது. ஆயினும், அவரது மரணத்தின் பின் இன்று வரைக்கும் முஸ்லிம்
சமூகத்தின் அரசியலை சமூகம் எனும் போர்வை போர்த்திக் கொண்டவர்களின் கைககளிலே
இருந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் அரசியல்
பலத்தை கேக்கை வெட்டிப் பிரிப்பது போன்று பிரித்து ஆளுக்கொடு துண்டை
வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். புதிய கட்சிகளையும் ஆரம்பித்துள்ளார்கள்.
எல்லோருடைய கைககளிலும் கேக் துண்டு போன்று அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால்,
சமூகத்தைப் பற்றி கவலை கொள்வதற்கு தலைமைகளில்லை.
தமது அரசியல் இலாபங்களுக்காகவே சமூகத்தை பயன்படுத்திக்
கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள்
தங்களை மர்ஹும் அஸ்ரப்பின் கொள்கைகளைப் பின்பற்றுவோர் என்று சொல்லிக்
கொண்டிருக்கின்றார்கள்.
இன்று முஸ்லிம்களின் அரசியலை எடுத்துக் கொண்டால், எந்த அரசியல்
கட்சியாக இருந்தாலும் பேரினவாத தேசிய கட்சிகளின் முகவர்களாகவே செயற்பட்டுக்
கொண்டிருக்கின்றன. தேசிய கட்சிகளின் தலைவர்களை திருப்திப்படுத்திக்
கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட
தனித்துவத்தை காண முடியாதுள்ளது. மர்ஹும் அஸ்ரப்பின் அரசியல் கொள்கை
என்பது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் யாப்பாகும். இன்று அந்த யாப்புக் கூட
உருக்குலைந்துள்ளது. மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் கட்சியின்
நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த தலைவர், செயலாளர், தவிசாளர்
உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த பதவிகளை பெற்றுக் கொண்டவர்களும், உயர்பீட
உறுப்பினர்களும் இந்த உருக்குலைவுக்கு துணையாகவே செயற்பட்டார்கள்.
கட்சியின் யாப்பை உருக்குலைவு செய்யும் நடவடிக்கைகள் கூட மர்ஹும் அஸ்ரப்
மரணமடைந்தவுடனேயே ஆரம்பமாகிதையும் காண்கின்றோம்.
இதே வேளை, முஸ்லிம்களுக்காக மாற்றுக் கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள்
முஸ்லிம் காங்கிரஸில் அஸ்ரப்பின் கொள்கைகளுக்கு இடமில்லை. அதனால்தான் புதிய
கட்சிகளை ஆரம்பித்துள்ளோம் என்று பறையடித்தவர்கள் கூட தமது பதவிப்
பசிக்காகவே கட்சிகளை தொடங்கினார்கள் என்றும் தெரிந்து
கொண்டோம்.
முஸ்லிம் சமூகத்தின் நிலை இன்று மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தின் மீது பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் நாளாந்தம்
ஏதாவதொரு கதையைச் சொல்லி முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்கே
திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கருத்தடை,
ஹலால், ஹிஜாப் என்று அவர்களின் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே
போகலாம். இக்குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருப்பவர்கள்
வேண்டுமென்று, குறுகிய மனத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
என்பதனை அரசாங்கமும் அறிந்து வைத்துள்ளது. என்றாலும் அவர்களுக்கு
எதிராக எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் கிடையாது. முஸ்லிம்களை
குறிவைத்து அநீதி இழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை
எடுப்பதற்குரிய அழுத்தங்களை கொடுக்கும் நிலைமையில் முஸ்லிம் அரசியல்
தலைமைகளுமில்லை. கைகள் சுத்தமின்றி இருப்பதும் ஒரு காரணமென்று
தெரிவிக்கப்படுகின்றன.
ஆகவே, பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து மர்ஹும் அஸ்ரப்புக்கு நினைவு
தினத்தை நடத்திக் கொள்வதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த பயனுமில்லை.
வெறுமனே நினைவு தினத்தை மாத்திரம் மேற்கொள்வது மர்ஹும் அஸ்ரப்புக்கு
செய்யும் கௌரவமாக இருக்காது. ஒரு தினத்தில் மர்ஹும் அஸ்ரப்பைப்
பற்றி பேசும் இவர்கள் அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும்
அமைச்சர்கள் என்றும் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்
சமூகம் தேய்வடைந்து கொண்டு போய்க் கொண்டிருப்பதுதான் பரிதாபமாகும்.
சமூகத்தை மறந்து பைகளை நிரப்பிக் கொண்டிருப்பவர்கள்தான் இன்று
முஸ்லிம் சமூகத்தின் அரசியலை தீர்மானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களைத்தான் முஸ்லிம்களும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
மர்ஹும் அஸ்ரப் தேர்தலொன்றில் ஒரு அரசியல் கட்சி பெற்றுக் கொள்ளும்
வாக்குகள் ஆகக் குறைந்தது 12 வீத வெட்டுப் புள்ளியைக் கொண்டிருக்க
வேண்டுமென்று 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
வெட்டுப்புள்ளி அளவு சிறுபான்மையினக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல
சிங்கள சிறு கட்சிகளுக்கும் பாதக நிலையையே ஏற்படுத்தும் என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த ஆபத்து முஸ்லிம்களின் தனித்துவ அரசியலையும், பேரம்
பேசும் சக்தியையும் மேற்கொள்வதற்கு தடையாக அமையுமென்று மர்ஹும் அஸ்ரப்
விளங்கி இருந்தார். 1989ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய
தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.பிரேமதாஸ முஸ்லிம்
காங்கிரஸின் ஆதரவைக் கோரிய போது 12 வீத வெட்டுப்புள்ளியை 05 வீதமாக மாற்ற
வேண்டும். அதன் பின்னர்தான் ஆதரவு வழங்கலாமென்று கேட்டுக் கொண்டார்.
ஆர்.பிரேமதாஸ உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய
உறுப்பினர்களான லலித்அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோர்கள்
மர்ஹும் அஸ்ரப்பின் கோரிக்கையால் ஆடிப் போனார்கள். அதே வேளை, மர்ஹும்
அஸ்ரப் இக்கோரிக்கையை நிறைவேற்றினால்தான் ஆதரவு என்றும் உறுதியாகச்
சொன்னார். புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் படி முஸ்லிம்களின்
ஆதரவைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பதாக இருந்தது. இதனால், வேறு
வழிகளில் மர்ஹும் அஸ்ரப்பை சம்மதிக்கச் செய்ய முடியாதென்று 12 வீத
வெட்டுப் புள்ளியை 05 வீதமாக மாற்ற வேண்டிய நிலை அன்றைய ஐக்கிய தேசிய கட்சி
அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதுதான் ஒரு தலைமைக்கு
இருக்க வேண்டிய ஒன்றாகும். இதனைத்தான் மர்ஹும் அஸ்ரப் சரியான நேரத்தில்
சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார். ஆனால், இன்று சரியான
நேரத்தில் பிழையான முடிவுகளை எடுத்துவிட்டு அதனை சரியான முடிவுகள் என்று
சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு மர்ஹும் அஸ்ரப் எடுத்த முடிவுகள் பலவற்றை எம்மால் சொல்ல
முடியும். தென்கிழக்கு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டுமென்று எடுத்த
தீர்மானத்தின் பின்னாலும் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்க
வேண்டுமென்ற கதையுண்டு.
மர்ஹும் அஸ்ரப் சாதித்துக் காட்டிய 05 வீத வெட்டுப் புள்ளியைக் கூட
இல்லாமல் செய்து புதிய அரசியல் யாப்பு, புதிய தேர்தல் முறை, புதிய தேர்தல்
தொகுதிகள் என்பவற்றை ஆதரித்துக் கொண்டவர்கள்தான் இன்றைய முஸ்லிம் அரசியல்
தலைவர்கள். கைகளை உயர்த்துவதற்கு விலை பேசுகின்றார்கள்.
ஒரு தேர்தலில் தேசிய கட்சியோடு இணைந்து செயற்படுவதற்கு பேரம்
பேசுகின்றார்கள். அப்பேரம் பேசுதலில் சமூகம் பற்றி எதுவும் இருக்காது.
மர்ஹும் அஸ்ரப் மரணமடைந்ததன் பின்னர் இன்றைய முஸ்லிம் கட்சிகளும்,
தலைவர்களும் சமூகத்திற்கு எதனையும் சாதித்துக் காட்டவில்லை. முஸ்லிம்
சமூகம் இழந்தவையே அதிகமாகும். யுத்த காலத்திலும், அதன் பின்னரான
காலங்களிலும் முஸ்லிம்களின் காணிகளை தொல்பொருள் ஆய்வு என்றும், புனித
பிரதேசம் என்றும், வனபரிபாலன திணைக்களத்திற்குரியது என்றும், பாதுகாப்பு
தரப்பினரின் முகாம்களை அமைப்பதற்காகவும் முஸ்லிம்களிடமிருந்து
கையகப்படுத்தப்பட்ட காணிகளைக் கூட மீட்டுக் கொடுக்க முடியாத
வக்கற்றவர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முதல் பாராளுமன்ற
உறுப்பினர்கள் வரை உள்ளார்கள்.
இவ்வளவு ஏன்..? மர்ஹும் அஸ்ரப் மரணித்து 19 வருடங்களாகியுள்ளது. அவரது
மரணம் எவ்வாறு நிகழ்ந்ததென்று அறிந்து கொள்வதற்கு முயற்சிகளை
எடுக்கவில்லை. அது கொலையா? சதியா என்று தெரிந்து கொள்ளவும் நடவடிக்கைகளை
எடுக்கவில்லை. தன்னுடைய தலைவனின் உயிருக்கு என்ன நடந்ததென்று
அறிந்து கொள்வதற்கு நாட்டம் காட்டாதவர்களே காட்டமாக மர்ஹும் அஸ்ரப்பின்
வழித் தோன்றல்கள் என்று தோரணம் கட்டுகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின்
முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர்
சேகு தாவூத் கூட முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறியதன்
பின்னரே மர்ஹும் அஸ்ரப்பின் மரணம் பற்றிய கேள்வியை ஆவண ரீதியாக
எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இறக்காமம் மாயக்கல்லி மipயின்
உச்சியில் சட்டவிரோமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை இரண்டு வாரங்களில் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி கீழே இறக்குவோம் என்று சொன்னார்கள். ஆனால்,
தற்போது அங்கு பௌத்த பிக்குகள் தங்குவதற்குரிய
விடுதி கட்டுப்பட்டு முடிவுறும் நிலையில் இருக்கின்றது. முஸ்லிம் சமூகமும்
இதனைப் பற்றி சிந்திக்கவில்லை. இவ்விவகாரம் சூடேரிய போது அமைச்சர் தயாகமகே
கல்முனை முதல் பொத்துவில் வரை சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பௌத்த புனித
காணிகள் உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அது குறித்து
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசவில்லை. அம்பாரை மாவட்டத்திலுள்ள
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றவில்லை. அரசாங்கங்களில்
பங்காளிகள் என்ற போர்வையில் அங்குள்ள இனவாதிகளுடன் இணக்கம் கண்டு
செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின்
உதவியுடன் அரசாங்கத்தை அமைத்துக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக
செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு
பொய்யுரைத்துப் பலி சுமத்தும் பௌத்த இனவாதிகளை கட்டுப்படுத்தாது போனால்
அரசாங்கத்தை விட்டு விலகி எதிர்க்கட்சி வரிசைக்குச் செல்வோம்
என்று சொல்வதற்கு வாயில் வார்த்தைகளில்லாதவர்களே முஸ்லிம் அரசியல்
தலைவர்கள்.
முஸ்லிம்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் சட்ட மூலங்களுக்கு கைககளை
உயர்த்திவிட்டு, எங்களிடம் காட்டியது ஒன்று, பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்தது ஒன்று. அவர்கள் ஆதரவு அளித்தார் அதனால் நாங்களும் ஆதரவு
அளித்தோம் என்று தப்பிக்கும் தலைவர்களே முஸ்லிம்களின் இன்றைய தலைவர்கள்.
இவர்கள்தான் மர்ஹும் அஸ்ரப்பின் வழிதோன்றல்கள் என்று நினைவு தின வைபவங்களை
ஏற்பாடு செய்து மர்ஹும் அஸ்ரப்பின் சாதனைகளை பட்டியலிட்டுக்
கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு அவர் என்ன செய்தார் என்பதனை
சமூகம் அறியும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பட்டியலிடுங்கள்.
தன் சமூகம் வாழ பணி செய்பவனே உண்மையான தலைவன். அவனால் சமூகம் வாழும்.
ஆனால், இன்றைய முஸ்லிம் தலைவர்கள் சமூகம் வாழ்வதற்கு பணிகள் செய்யாது,
சமூகத்தால் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மர்ஹும் அஸ்ரப் சுமார் 14
வருடங்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவனாக இருந்தார்.
பலவற்றை சாதித்துக் காட்டினார். ஆனால், இன்றுள்ள அரசியல் தலைவர்கள் அவரை
விடவும் கூடிய வருடங்களாக தலைவராக இருக்கின்றார்கள். சாதித்துக்
காட்டவில்லை. சமூகத்திற்கு வழி காட்டவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கனவுகளை எல்லாம்
கால்களுக்குள் போட்டு மிதித்து சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆதலால், முஸ்லிம் சமூகத்தினர் தன்மானமுள்ள தலைவனை இழந்துள்ள நிலையில்
இன்னுமொரு தலைவனை தேடுகின்றார்கள்.
நன்றி - வீரகேசாி 22.09.2019
0 comments:
Post a Comment