• Latest News

    September 27, 2019

    இரும்புத்திரையை உடைப்போம்!

    எஸ்.றிபான் -
    நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பௌத்த இனவாத கடும்போக்காளர்களின் ஆதிக்கம் நாடு பூராகவும் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காவல்துறையினரும், அரசாங்கமும் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு பல சான்றுதல் உள்ளன. அச்சான்றுகளில் ஒன்றாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் முல்லைத்தீவு குருகந்த  ரஜமஹா விகாரையின் அதிபதி கொழும்பு மேதா லங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரமும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இந்த சம்பவம் நாட்டில் பௌத்த இனவாதம்; எந்தளவிற்கு காலூண்றியுள்ளது என்பதனை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. மேலும் நாட்டின் சட்டமும், ஒழுங்கும், நீதிமன்றங்களின் தீர்ப்பும் எங்களை கட்டுப்படுத்த முடியாதென்ற பௌத்த இனவாத தேரர்களின் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்றுக் கொள்ள முடியாத ஜனநாயக விரோத செயற்பாடுகளின் எதிரொலியாகவே சுமார் 30 வருடங்கள் கொடூர யுத்தம் நாட்டில் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் ஏற்பட்ட வெற்றி பௌத்த இனவாதிகளின் எண்ணத்தில் அகங்காரங்களை உருவாக்கியுள்ளன. அந்த சேற்றில் புதைந்து கொண்டு இருப்பதனால் யுத்தத்தின் காரணத்தையும், அதனால் ஏற்பட்ட வடுக்களையும், படிப்பினைகளையும், பின்னடைவுகளையும் உணர்ந்து கொள்வதற்கு முடியாத வகையில் பௌத்த இனவாதிகளுக்கும், அவர்களை இயக்குகின்ற தேரர்களுக்கும் அறிவு மழுங்கியுள்ளார்கள். இந்நிலை நீடிக்குமாயின் இலங்கை மிக மோசமான இனவாதத்தைக் கொண்டதொரு நாடு என்ற அவல நிலைக்குள்ளாகிவிடும்.

    இதே வேளை, பௌத்த இனவாதிகளும், தேரர்களும் சிறுபான்மையினரை தேவைக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதவிட்டு நிரந்தர பகையாளிகளாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை உணர்ந்து கொள்ளாது தமிழர்களும், முஸ்லிம்களும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.

    குருகந்த ரஜமஹா விகாரை
    முல்லைத்தீவு நாயாறு, குருகந்த ரஜமகா விகாரையின் வரலாறு மிகவும் குறுகியதாகும். குறிப்பிட்ட இடத்தில் முல்லைத்தீவு நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயமே இருந்துள்ளது. இதற்கு நீண்ட வரலாறு இருப்பதாக அப்பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள். யுத்த காலத்தில் குறிப்பிட்ட பிரதேசம் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த போதுதான், அங்கு புதிதாக இந்த விகாரை கட்டப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குரியது என்றும் தெரிவிக்கப்படுகின்றன. அதாவது ஆலயத்தின் காணியின் ஒரு பகுதியினை அபகரித்தே குருகந்த ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையின் நிலைபேற்றுக்கு அங்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாம் பெரும் துணையாக இருந்துள்ளது.
    இதே வேளை, இந்த ஆலயத்தின் முழுக் காணியையும் கபளிகரம் செய்து கொள்ளும் திட்டமும் விகாரையதிபதிக்கு இருந்துள்ளது என்பதனை அவரது நடவடிக்கைகளின் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவர் நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வருகின்ற பக்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஆலயத்திற்கு வருகின்ற தமிழர்களுக்கு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி அவர்களின் வருகையை முற்றாகத் தடுக்கும் போது நாளடையில் முழு காணியும் விகாரைக்குரியதாக மாற்றப்படுவதோடு, ஆலயமும் இல்லாமல் போய்விடும். இது இஸ்ரேலியர்களின் நில ஆக்கிரமிப்புக்கு ஒப்பானதாகும்.  இத்தகைய நடவடிக்கையை கண்டித்து ஆலய நிர்வாகத்தினால் பொலிஸில் முறைப்பாடு (2019 ஜுன் மாதம்) செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போது இரண்டு வழிபாட்டுத் தலங்களும் தங்களது வழிபாட்டுக் கடமைகளை பக்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தாது செயற்படுத்த வேண்டுமென்றும், உள்ளுராட்சி சபையின் அனுமதியைப் பெற்று புதிய கட்டிடங்களை அமைக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயினும், இதன் பின்னரும் ஆலயத்திற்கு வருகை தந்தவர்களுக்கு இடையூறுகள் செய்யப்பட்டதாகவே தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    இதே வேளை, குறிப்பிட்ட பிரதேசத்தை தொல்பொருள் திணைக்களத்திற்குரியது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய பெயர் பலகையும் நடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாயாறு பாலத்துக்கு அண்மையாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அடாத்தாக பிடித்து அப்பகுதியில் பல நூறு ஆண்டுகளாக  பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு இடத்தை சொந்தமாக்குவதற்கும்  2018ஆம் ஆண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அப்பகுதியில் உள்ள ஆலயத்தினதும், தமிழ் மக்களினதும் காணிகளை அபகரிப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் ஊடாக நில அளவைத் திணைக்களத்தால் 2018.07.03 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு மக்களும் அரசியல்வாதரிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏற்கனவே வனஜீவராசிகள் திணைகளம் ஊடாக 21 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை சுவவிகரிப்பு செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் சூழலிலே இந்த நடவடிக்கை எடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
     
    மேதாலங்கார தேரர் மரணம்
    பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார்; ஆலயத்தின் காணியினை அடாத்தாக பிடித்து விகாரை அமைத்துக் கொண்ட தேரர் கொழும்பு மேதாலங்கார தேரர் என்றே அழைக்கப்படுகின்றார். மேதாலங்கார தேரர் புற்று நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கொழும்பு மஹரகம  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (21.09.2019அன்று) மரணமடைந்தார்.

    இந்நிலையில் மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டு வந்து இறுதிகிரியைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக ஆலயத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் நிர்வாகத்தினரால் (22.09.2019) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று செய்யப்ட்டது.

    இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. இதன்படி 23.09.2019 காலை 9 மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நாளைய (23.09.2019) தினம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தால் கட்டளை ஒன்று பிறப்பிக்கும் வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது எனவும் பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் 23ஆம் திகதி விசாரணைகள் நடைபெற்றன. நாயாறு, குருகந்த ரஜமகா விகாராதிபதியின் உடலை, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய நீதிமன்றம் தடை உத்தரவிட்டது. அத்தோடு, தேரரின் உடலை இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் தீர்ப்பளித்துள்ளது.

    இதே வேளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்தில் பெருமளவு மக்கள் திரண்டு இருந்தார்கள். பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரின் தலைமையில் இனவாத பௌத்த பிக்குகளும், சிங்கள அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தின் வளாகத்தில் இருந்தார்கள்.

    நீதிமன்றத்தில் உத்தரவு மீறப்பட்டது
    எனினும் நீதிமன்ற உத்தரவினை கருத்தில்கொள்ளாது, பொது மக்களின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் தேரரின் உடல் நீராவியடி ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாற்றமாக கொழும்பு மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். அத்தோடு, சட்டத்திற்கு மாற்றமாகச் செயற்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கினார்கள். சட்டத்திற்கு மாறாக நடக்கின்றவர்களை கைது செய்ய வேண்டியவர்கள் சட்டத்தை மதிக்காது செயற்படுகின்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது இலங்கையின் சட்ட ஆட்சியில் உள்ள பாரபட்சத்தைக் காட்டுகின்றது.

    இதே வேளை, ஆலயத்தின் எல்லைக்குள் உடலை தகனம் செய்வது நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எத்pரானது என்று சட்டத்தரணி ஒருவர் ஞானசாரத் தேரர் தலைமையிலான பிக்குகளுக்கும், ஏனையவர்களுக்கும் சுட்டிக் காட்டிய போது ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால், ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
    சட்டம் அனைவருக்கும் சமமா?
    சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமம் என்று காலத்திற்கு ஆட்சியாளர்கள் தெரிவித்துக் கொண்டாலும், எல்லாக் காலங்களிலும் சட்டம் பாரபட்சமாகவே கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆட்சியாளர்களுக்கும் - சாதாரண மக்களுக்கு இடையேயும், பௌத்தர்களுக்கும் - ஏனைய மதத்தினருக்கு இடையேயும், பெரும்பான்மையினருக்கும் - சிறுபான்மையினருக்கும் இடையேயும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாரிய வேறுபாடுகளைக் காணக் கூடியதாக இருக்கின்றன. மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது உயர்நீதிமன்ற நீதிபதி சரத் என் சில்வா பெற்றோலின் விலையை நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யுமாறு வழக்கொன்றில் தீர்ப்பாக அறிவித்தார். ஆனால், அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. 

    அண்மையில் களுத்துறையில் தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் (70வயது) பூதவுடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவிட்டது. அதனை மீறி பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும காணி ஒன்றில் உடலை அடக்கம் செய்திருந்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செயற்பட்டதனால் பாலித தேவபெரும கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஆதலால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக செயற்பட்டவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று சட்டத்தரணிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தரணிகள் தமது எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.

    இதே வேளை, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாற்றமாக ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் செயற்பட்டதானது இந்து - பௌத்த மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை ஞானசாரத் தேரர் மறுத்துள்ளார். இந்து – பௌத்த மோதலை உருவாக்க நாம் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை  வடக்கு கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளதென   அவர்   தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு தாமதமானதால்தான்  தேரரின் பூதவுடலை தகனம் செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அது மட்டும் அல்ல அந்த பூமி விகாரைக்கு உரித்தான பகுதியாகும். இந்துக்களுக்கு எவ்வாறு அங்கு சகல உரிமையும் உள்ளதோ அதேபோல் பௌத்தர்களுக்கும் சம உரிமை உண்டு. அங்கு எமது தேரர் ஒருவருக்கு நெருக்கடி என்றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.  இந்த நாட்டில் பௌத்த சிங்கள முதன்மைத்துவம் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் அது வடக்கு கிழக்குக்கு பொருந்தாது என்றே நினைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆகவே, சட்டத்தை மீறிச் செயற்பட்டுள்ளமையை இவரது கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், பௌத்த சிங்களவர்கள் என்றால் அவர்களை சட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களின் செயற்பாடுகளுக்கே முன்னுரிமை. அவர்களின் நடவடிக்கைகளுக்கு சட்டத் வளைந்து கொடுக்க வேண்டுமென்பதாகவே இக்கருத்துக்கள் அமைந்துள்ளன. ஆதலால், சட்டம் அனைவருக்கும் சமம் என்பது போலித்தனமான வார்த்தையாகும்.

    ஞானசார தேரரை எடுத்துக் கொண்டால் அவர் சட்டத்தை பல தடவைகள் மீறியுள்ளார். ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் முறைகேடாக நடந்து கொண்டமைக்காக சிறைக்குச் சென்றவர். இவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். அவர் விடுவிக்கப்பட்ட நாள் முதல் தனது பௌத்த இனவாத ஆதிக்கப் போக்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

    நாட்டில் பௌத்தர்கள் தொடர்பாக என்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அங்கு முதலில் செல்லும் ஒருவராக ஞானசார தேரர் இருக்கின்றார். அவர் அங்கு சென்று நீதி, நியாயங்களை ஆராயாது பௌத்தர்களுக்கு சாதகமாக செயற்படும் ஒரு சண்டித்தனப் போக்கை பின்பற்றிக் கொண்டிருக்கின்றார். இவருக்கு பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் பலர் துணையாக இருக்கின்றார்கள்.

    கண்டனங்கள்
    பௌத்த தேரர்களும், ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காது செயற்பட்டமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, கோத்தபாய ஆகியோர்கள் கண்டித்துள்ளார்கள். இவ்வாறு கண்டித்துள்ள இவர்கள் சட்டத்தை மதிக்காது நடந்தவர்களை கைது செய்ய வேண்டுமென்று தெரிவிக்கவில்லை. தற்போது ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் தமிழ் மக்களை திருப்திப்படுத்துவதற்காகவே தாமரை இலையில் ஒட்டாது தண்ணீர் போன்று நடந்து கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாதிகளினதும், இனவாத தேரர்களினதும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் போது இவ்வாறுதான் சிங்கள அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

    நாட்டை நிர்வகிக்கும் ஆணையை சட்ட ரீதியாக பெற்றுக் கொண்ட ஆட்சியாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாரபட்சமாக நடந்து கொள்வது பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. இந்த அரணை உடைக்காத வரை நாட்டில் நீதியை நிலைநாட்ட முடியாது.

    தமிழர்களும், முஸ்லிம்களும்
    பௌத்த இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சியாளர்களின் உதவியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை தமிழர்களும், முஸ்லிம்களும் மிகவும் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். ஆனால், நடைமுறையில் இதனைக் கண்டு கொள்ள முடிவதில்லை. தமி;ழர்களுக்கும், முஸ்லிமக்ளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை தீர்த்து வைக்குமாறு பௌத்த இனவாதிகளை நாடுகின்ற ஒரு நிலையை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலைப்பாட்டை அண்மைக்காலமாக தமிழர்களிடமே அவதானிக்க முடிகின்றது. 

    தமிழர்களுக்கும், முஸ்லிமகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்வதில் பௌத்த இனவாதிகள் முண்டியடித்துக் கொண்டு முன்னே வருவதனையும் பார்க்கின்றோம். ஒரே மொழியை பேசுகின்ற இரண்டு இனங்களையும் மோதவிட்டு புதினம் பார்க்கின்ற தரப்பாகவே பௌத்த இனவாதிகளும், அவர்களை இயக்குகின்ற பிக்குகளும், அரசியல்வாதிகளும் உள்ளார்கள்.

    இத்தகைய பௌத்த இனவாதிகள் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிணக்குகள் ஏற்படும் போது தமிழர்களின் பக்கம் நின்று போராடுகின்றார்கள். தமிழர்கள் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகளை எடுக்கின்றார்கள். இது தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பலவீனத்தைக் காட்டுகின்றது. தமிழர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, உயிர் இழப்புக்களை சந்திப்பதற்கும், தங்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தடையாக இருப்பவர்கள் பௌத்த இனவாத கடும்போக்கு தேரர்களும், அரசியல்வாதிகளுமாவார்கள். இத்தகையவர்களை துணைக்கு அழைத்து முஸ்லிம்களை அடக்க நினைப்பது அல்லது நியாயத்தைப் பெற்றுக் கொள்ள எண்ணுவது சரணாகதி நிலையாகும். தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தருவோம் என்று முஸ்லிம்களோடு மல்லுக்கட்டும் பௌத்த இனவாத தேரர்களும், அரசியல்வாதிகளும் சிங்கள மக்களுக்கும், தமிழர்களுக்கும் பிணக்குகள் ஏற்படும் போது தமிழர்களுக்கு பாதகமாக செயற்படுவதனைக் காண்கின்றோம்.

    கல்முனை பிரதேச (தமிழ்) உபபிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமடைந்த போது,  தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று 2019.7.17ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், இவ்விவகாரத்தில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. கல்முனையில் தமிழ், முஸ்லிம் இனமோதல் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு அந்த உண்ணாவிரதம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக 07 நாட்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது.
    இந்த உண்ணாவிரதம் கல்முனை சுபத்ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது. இவருடன் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவரும், கல்முனை முருகன் ஆலயத்தின் பிரதம குருவுமான சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தரும், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன், அழகக்கோன் விஜயரத்னம், இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர்களும் பங்கேற்றனர்.

    இவர்களின் போராட்டத்தில் நியாங்கள் இருந்தன. அதனை பெரும்பான்மையான முஸ்லிம்களும் ஏற்றுள்ளார்கள். எல்லைகளை தீர்மானிப்பதில்தான் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இவர்கள் தற்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமையிட்டு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மௌனமாகவே இருக்கின்றார்கள். கல்முனை முஸ்லிம்கள் கல்முனை தமிழர்களுக்கு அநியாயங்களைச் செய்கின்றார்கள் என்று அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கும் ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தையிட்டு கருத்துக்களை சொல்லவில்லை.

    மேலும், கல்முனையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தி கல்முனையில் தமிழ், முஸ்லிம்களிடையே விரிசல்களை ஏற்படுத்த வேண்டுமென்று அத்துரலிய ரத்ன தேரர், கலகொட அத்தஞானசார தேரர், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் ஆகியோர்கள் அங்கு சென்றிருந்தார்கள்;. இதற்கு முன்னதாக தமிழர்களுக்கு எதிராக பல கருத்துக்களை வெளியிட்டு போராட்டங்களைச் செய்த இவர்களை உண்ணாவிரத்தை ஏற்பாடு செய்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். மேலும், உங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துத் தருகின்றோம் என்று வருகை தந்த பிக்குகள் தெரிவித்திருந்தார்கள். இந்த உண்ணாவிரத்தைக் கூட ஞானசார தேரரே முடித்து வைத்தார். தற்போது  ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதியாது, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனித்தையும் மதியாது பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு தலைமை தாங்கியுள்ளார். ஆகவே, இவர்களின் மனநிலையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

    இதே வேளை, அரசியல் ரீதியாக தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான்,  பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர்கள் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக பச்சையாக இனவாத்தைப் பேசினார்கள். தமிழர்களுக்கு அநியாயம் செய்யப்பட்டள்ளது என்றார்கள். ஆனால், இவர்கள் கூட நீராவியடி ஆலய விவகாரப் பிரச்சினையை அறிந்து கொள்ள விஜயம் செய்யவில்லை. அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. அது தமிழர்களுக்கு அநியாயம் என்று சொல்ல முடியவில்லை. ஆகவேஈ இவர்கள் தங்களின் வங்குரோத்து அரசியலை சரிசெய்து கொள்வதற்கு கல்முனை விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். 

    ஆகவே, தமிழர்களும், முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொள்ளும் விடயங்களில் எவ்வாறு தமது நோக்கத்தை அடைந்து கொள்ளலாமென்று பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் தமது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு முன் வருதனையும் காண்கின்றோம்.

    ஆதலால், தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுகை செய்து இரண்டு இனங்களையும் நிரந்தரமாக மோதவிடுவதற்கு பௌத்த இனவாதிகளும், அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்கு இனவாத அரசியல்வாதிகளும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதனை தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். பேசித் தீர்க்க வேண்டிய விவகாரங்களை விட்டுக் கொடுப்புக்களை செய்து தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனைச் செய்யாது தாங்கள் எங்கள் முடிவினில் மாறமாட்டோம் என்று தமிழர்களும், முஸ்லிம்களும் விடாப் பிடியாக இருந்தால் பௌத்த இனவாதிகளும், பேரினவாதிகளும் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படாத வரை இரண்டு இனங்களும் பௌத்த இனவாதிக்கத்தின் இரும்புத் திரையை உடைக்க முடியாது.
    Thanks Vidivelli 27.09.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரும்புத்திரையை உடைப்போம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top