மட்டக்களப்பு நகர் சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய
காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின்
மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன.
முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின்
சிதறிய தசைகளையும் என்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு
இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே காரணமாகும்.
இவ்வாறே இந்து மயானங்களின் உயிரோடிருக்கும் உரிமையாளர்களும் ஆசாத்தின்
மண்டையோட்டை ஏற்க மறுக்கிறார்கள் மண்டையோடுகளுக்கு மதமிருக்கிறதா? இல்லை
அரசியல் இருக்கிறதா என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.
ஆசாத்தின் வாப்பா முஹம்மது நிஸார் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராயிருந்து தமிழீழ விடுதலைக்காக உயிர் நீத்த விடுதலை வீரராகும்.
ஆஸாத்தின் வாப்பா நிஸார் 1985 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
1990 இல் நிகழ்ந்த அரசியல் இராணுவ மாற்றங்களினால், நிஸார் காத்தான்குடி
ஐந்தாம் குறிச்சி சந்தையில் வைத்து புலி உறுப்பினர் என்பதனால் சுட்டுக்
கொல்லப்பட்டார். கொன்றவர்கள் எவர் என்பதை இங்கு கூறவேண்டியதில்லை. ஆனால்
நிஸாரின் ஜனாஸா காத்தான்குடி மையவாடியில்தான் புதைக்கப்பட்டது என்பதைச்
சொல்வது அவசியமாகும்.
நிஸாரின் பூதவுடலை அவர் புலி உறுப்பினர் என்பதனால் மட்டக்களப்புக்
கள்ளியங்காட்டு மயானத்தில்தான் புதைக்கவேண்டும் என்று எவரும் அன்று
கோரவில்லை, அக்காலத்தில் கள்ளியங்காட்டில் முஸ்லிம் மையவாடி இருந்த போதும்,
வரலாற்றை புதைகுழிகள் எழுதும் காலத்தில் வாழ்கிறோம் என்பது மிகவும் கேவலமானமாகும்.
வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் புல்டோஸர் கொண்டு
தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களையும், கிழக்கில்
எங்குமில்லாது எங்கும் 'காணப்படும் " தரைமட்டமான துயிலும் இல்லங்களையும்
நினைந்தே இக்குறிப்பை எழுதினேன்.
பசீர் சேகுதாவூத் -
0 comments:
Post a Comment