• Latest News

    November 20, 2019

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்தை சிலர் இனவாதமாக பார்க்கின்றனர் - சரத் வீரசேகர

    சிங்கள மக்களின் வாக்குகளாலேயேதான் ஜனாதிபதியாக தெரிவானதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்தை சிலர் இனவாதமாக பார்ப்பதாக தெரிவித்துள்ள அவரது விசுவாசியான ஓய்வுபெற்ற படை அதிகாரியான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர, எனினும் இதுவே யதார்த்தம் என தெரிவித்துள்ளார்.

    அத்துடன் சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது மற்றும் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்ற விடயங்கள் பொய் என்பது நடந்துமுடிந்த தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாட்டை பிரிக்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்ததாலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்திருப்பதாகவும் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

    சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களை இணைத்து உருவாக்கியுள்ள தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் நேற்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

    “தான் சிங்கள மக்களின் வாக்குகளினால்தான் ஜனாதிபதியாக தெரிவானதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். எனினும் அதனை சிலர் இன்று இனவாதமாக பார்க்கின்றனர். எனினும் அதுவே யதார்த்தம். வடக்கு, கிழக்குத் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் அவர் வெற்றிபெற்றார். இது இனவாத கருத்து அல்ல. ஆகவே இவ்வளவு காலமும் இருந்த தவறான கருத்து ஒன்று பொய்யாகியுள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற கருத்துருவாக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியாது, அரசாங்கம் ஒன்றை நடத்திச் செல்ல முடியாது என்ற கருத்தை வைத்துக்கொண்டு இனவாத, அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகளே இதுவரைக்காலமும் இலாபமடைய முயன்றனர். 

    இதனால் சிங்கள மக்களுக்கு நியாயங்கள் கிடைக்காமல் போனது. எனினும் அதனை மாற்றியமைக்க முடிந்துள்ளது. இனவாத தமிழ் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்தது. காரணம் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த வாக்குகள் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப்படுவது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு. அவ்வாறான தலைவருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமையயே வடக்கு கிழக்கின் வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்தன. 

    அவர்களது பிரதான கோரிக்கை ஒற்றையாட்சி நாட்டை சமஷ்டி நாடாக மாற்றவேண்டுமென்பது. ஆகவே நாட்டை சமஷ்டி முறையில் ஆளவேண்டுமென்ற விடயம் தோற்றுப்போயுள்ளது. எந்தவொரு அரசாங்கத்திற்கும் நாட்டை சமஷ்டி முறையில் ஆட்சி செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை. நாடு ஒற்றையாட்சியுடன் இருக்க வேண்டுமென்பதற்காக மக்கள் வாக்கெடுப்பே அது. வடக்கு, கிழக்கு இணைப்பிற்கோ, நாட்டை பிரிப்பதற்கோ எவருக்கும் இயலாது. இதன் பின்னர் சமஷ்டி தொடர்பில் பேசும் அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

    புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த வட மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

    எனினும் சிங்கள மக்களுக்கு எதிராக பல செயற்பாடுகளை மேற்கொண்ட வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இவ்வாறானதொரு கோரிக்கையை விடுப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

    “வட மாகாண முன்னாள் முலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். எனினும் நீங்கள் அதிகாரத்தில் இருக்கையில் அனைத்து மக்களையும் சமமாக நடத்தினீர்களா எனக் கேட்க விரும்புகின்றேன். வடக்கில் இருந்த 25000 குடும்பங்களில் ஒன்றுக்கூட அங்கு இல்லை. சிங்களவர்களுக்கு வடக்கில் வாழ்வதற்கு எவ்வித உரிமையும் இல்லையெனத் எனத் தெரிவித்தார். வடக்கில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதற்கு முழுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். நாகதீபம் விகாரையில் புதிதாக புத்தர் சிலையை அமைப்பதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார். அவ்வாறான ஒரு மனிதர் எவ்வாறு ஜனாதிபதியிடம் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைக்க முடியும். இதுத் தொடர்பில் பேசுவதற்கு அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது”.

    பொறுப்புக் கூறலை நிறைவேற்றுவதோடு, இராணுவத்தை மறுசீரமைக்குமாறும் கோருவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித அருகதையும், உரிமையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ள கோட்டாவாதியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் எனவும் அமெரிக்காவிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    “இந்தத் தகவலை நான் இணையத்தளத்திலேயே பார்த்தேன். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பம்பியோ, பொறுப்புக் கூறலை நிறைவேற்றுவதோடு, இராணுவத்தை மறுசீரமைக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அவர் தனது வேலையை மாத்திரம் கவனிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். அவர் குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் எமது உள்ளக பிரச்சினை. இந்த விடயத்தை கோட்டாபய ராஜபக்சவும் வலியுறுத்தியுள்ளார். உள்ளக விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாது என. ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நாம் சரியான பதில்களை வழங்கியுள்ளோம். எந்தவொரு நாட்டிற்கும் எமது நாடு மீது விரல் நீட்ட அனுமதியில்லை
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்தை சிலர் இனவாதமாக பார்க்கின்றனர் - சரத் வீரசேகர Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top