(றிஸ்கான் முகம்மட் ஊடகப் பிரிவு)
சாய்ந்தமருது நகரசபையை
அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு
கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடை
நிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும்
அகோர செயல்.
இதற்கு பதில் இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.
இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது. பல
ஆளும் கட்சி அரசியல் அரசியல்வாதிகளும், அரசு சார்பு பெளத்த துறவிகளும்
கச்சை கட்டிக்கொண்டு, “இதை ஏன் செய்தீர்கள்” என அரசு தலைவரை மொய்த்தது
எங்களுக்கு தெரியும்.
அதேபோல் ஐ.தே.கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற
உறுப்பினர்களும் முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டார்கள். இவர்களை
நேரில் அழைத்து இப்படி பேசாதீர்கள் என நான் கூறினேன்.
எது
எப்படி இருந்தாலும், ஒரு அரசாங்கம் என்கின்ற போது அதற்கு பொறுப்பு அதிகம்.
“எடுத்தேன், கவிழ்த்தேன்” என அரசாங்கம் காரியமாற்ற முடியாது. தமிழ்,
முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களை நாம் கணக்கில்
எடுக்க மாட்டோம் என இந்த அரசு கூறமுடியாது.
யார் வாக்களித்தாலும்,
வாக்களிக்காவிட்டாலும், பதவிக்கு வந்த உடன் அது நாட்டு மக்கள் அனைவரது
அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி சொன்னார் என
பல திடீர் தேசபக்தர்கள் குதூகலமாக சொல்லி, பட்டாசு கொளுத்தி
கொண்டாடினார்கள்.
இதன்மூலம் இந்த அரசு ஒரு சிங்கள பெளத்த அரசு
நிறுவனம் மட்டுமே என மீண்டும் ஊர்ஜிதம் ஆகியுள்ளது. நான் இருந்த அரசு
அல்லது நமது கூட்டணி ரொம்ப சுத்தமானது என நான் சொல்ல வரவில்லை. ஆனால்,
கேள்வி கேட்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது என்பது கேள்வி கேட்கும்
முதுகெலும்புள்ள எனக்கு நன்கு தெரியும்.
இதனால்தான் தம்மை மாற்றிக்கொள்ளாதவரைக்கும் இத்தகைய பெரும் இனவாதிகளுடன் எனக்கு எப்போதும் “செட்” ஆவதில்லை.
இந்த அரசுக்கு இனியும் வெள்ளை அடிக்கும் சிறுபான்மை மேதாவிகளுக்குதான் இது
வெளிச்சம். இதற்கும் ஒரு நகைச்சுவை காரணத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள்,
மேன்மக்களே!
இந்த இனவாத, அரசியல் சித்து விளையாட்டில் அப்பாவி மருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது. இதையிட்டு மனம் வருந்துகிறேன்.
அதேபோல் நல்லவேளை நுவரேலியா மாவட்டத்தின் புதிய ஆறு உள்ளுராட்சி
மன்றங்களை, விட்டுக்கொடுக்காமல், தடைகளை மீறி அப்போதே செய்து முடித்தோம் என
நிம்மதியடைகிறேன்.
“இந்த நாடு, நம்ம நாடு இல்லை” என்ற எண்ணம்
இன, மத, மொழி சிறுபான்மை மக்களுக்கு ஏற்படா வண்ணம், ஆட்சி செய்பவர்தான்
உண்மை தலைவன் அல்லது தலைவி. அப்படிதான், நெல்சன் மண்டேலா, லீ குவான் யிவ்
ஆகியோர் தம் நாடுகளை ஆண்டார்கள்.
இங்கே தலைவர் இல்லை. மதம் பிடித்த தேர்தல் அரசியல் நடிகர்கள்தான் இருக்கிறார்கள்

0 comments:
Post a Comment