சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக தங்களுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்பட வேண்டுமென்று கோரி வந்துள்ளார்கள். பல அரசியல் கட்சிகளிடமும், தலைவர்களிடமும் தமது இக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள். எல்லா அரசியல் கட்சிகளும், தலைவர்களும் சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபை கோரிக்கையை நிராகரிக்கவில்லை. சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை நாங்கள் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆயினும், இறுதியில் சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றமே அடைந்தார்கள். என்ற போதிலும், அவர்கள் தங்களின் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்காக போராட்டங்களை மேற்கொண்டார்கள். அவற்றில் பல போராட்டங்கள் ஜனநாயகத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும், ஒரு சில நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு மாற்றமாகவே இருந்தன. இவ்விதமாக தொடர்ந்த போராட்டம் தற்போது வெற்றிப்படி ஏறி மீண்டும் சறுக்கியுள்ளது. கடந்த 14ஆம் திகதி சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162/50 எனும் இலக்கத்தையுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அடிப்படையில் இதன் பின்னணியில் முழுமையாக அரசியல் பின்னணி உள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். ஆயினும் சாய்ந்தமருது மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை பிரகடனத்தை கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் இவ்விரு பிரதேசங்களும் இணைந்து ஒரு சமூக துரோகத்தை செய்து விட்டதாகவே பேசிக் கொள்கின்றார்கள்.
நிராகரிப்பும், ஏமாற்றமும்
1987ஆம் ஆண்டிற்கு முன்னர் கல்முனை தேர்தல் தொகுதியில் கல்முனை பட்டின சபை கல்முனையிலும், கரைவாகு தெற்கு கிராம சபை சாய்ந்தமருதிலும், கரைவாகு வடக்கு கிராம சபை மருதமுனை, பாண்டிருப்பு பிரதேசங்களைக் உள்ளடக்கியதாகவும், கரைவாகு மேற்கு கிராம சபை சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பிரதேசங்களைக் உள்ளடக்கியதாகவும் நான்கு உள்ளுராட்சி சபைகள் காணப்பட்டன. இவ்வாறு இயங்கிய உள்ளுராட்சி சபைகளை இணைத்து 1988ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் ஆட்சியில் கல்முனை பிரதேச சபையாக பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சாய்ந்தமருது முஸ்லிம்களும், கல்முனை தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபை வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இதே காலப் பகுதியில் கல்முனையில் (தமிழ்) உப பிரதேச செயலகமொன்று உருவாக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசம் தனியாக இயங்கிய நிலையில், கல்முனை பிரதேச சபை எனும் பெயரில் கல்முனை ஆளுகையின் கீழ் இருப்பதனை சாய்ந்தமருது மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. இதனால், தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கையை முன் வைத்தார்கள். இதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் நிராகரித்தார். கல்முனையிலிருந்து சாய்ந்தமருதை பிரிப்பது கல்முனை முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமையும். அதனால், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கு நடவவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மர்ஹும் அஸ்ரப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய சாய்ந்தமருது பிரதேச செயலகம், 2001ஆம் ஆண்டு முதல் தனியான பிரதேச செயலகமாக செயற்படத் தொடங்கியது.
ஆயினும், சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையிலிருந்து விலகவில்லை. காரணம், கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருந்த அரசியல் பிரதிநிதித்துவங்கள் சாய்ந்தமருதின் அபிலாசைகளுக்கு மாற்றமாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தன. தங்களை கல்முனைக்கு மாத்திரமானதொரு பிரதிநிதித்துவமாகவே கணித்துச் செயற்பட்டார்கள். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களின் சுமார் 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று, கல்முனையில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக் கொள்வதனையே நோக்கக் கொண்டது. சாய்ந்தமருதில் தழைக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் தமது அரசியலுக்கு சவாலாக அமைந்துவிடுமென்ற பயம் கல்முனை பாராளுமன்ற உறுப்பினருக்கு தொடர்ச்சியாக இருந்து வந்தது. அது மட்டுமன்றி கல்முனை மாநகர சபையின் நடவடிக்கைகள் கூட சாய்ந்தமருது மக்களின் அதிருப்பிக்கு வழிகோலியது. ஆயினும், சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்று வீதியில் இறங்கிப் போராடவில்லை. இதே வேளை, சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வேண்டுமென்ற கோரிக்கையை மக்கள் மயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில்தான் 2011ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைக்காக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிவு மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சிக்குள் இருக்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சிராஸ் மீராசாஹிவு இரண்டு வருடங்களின் பின்னர் மேயர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று உடன்பாடு ஒன்றினை உருவாக்கிக் கொண்டார். இக்காலப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவி கிழக்கில் இருக்க வேண்டுமென்ற கோஷத்தை சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மக்களிடையே முன் வைத்துக் கொண்டிருந்தார்.
இதே வேளை, தமது மண்ணைச் சேர்ந்த ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டதனால் சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்ததொரு நிலையை அடைந்தார்கள். சிராஸ் மீராசாஹிவு தமது பணியை சாய்ந்தமருது மக்கள் திருப்தியடையும் வகையில் மேற்கொண்டார். அது மட்டுமல்லாது, ஏனைய பிரதேசங்களுக்கும் சிறப்பான சேவையை செய்தார். ஆனாலும், கல்முனையின் அரசியல் ஆதிக்க பேர்வழிகள் சிராஸ் மீராசாஹிவுவின் அரசியல் வளர்ச்சியையும், புகழ்ச்சியையும் பொறுத்துக் கொள்ளவில்லை. அதனால், இரண்டு வருடங்களின் பின்னர் சிராஸ் மீராசாஹிவு பதவி விலக வேண்டுமென்ற உடன்பாட்டை பயன்படுத்தி மேயர் பதவியை கல்முனைச் சேர்ந்த சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு வழங்க வேண்டுமென்று ரவூப் ஹக்கீமை கேட்டுக் கொண்டார்கள். இதற்கு சாய்ந்தமருதை சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்த ஏ.எம்.ஜெமீலும் ஆதரவாக இருந்தார். ஆயினும், சிராஸ மீராசாஹிவு மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதனை சாய்ந்தமருது மக்களில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. பதவி விலகக் கூடாதென்று சாய்ந்தமருதில் போராட்டம் வெடித்தது. கடை அடைப்புக்கள் நடைபெற்றன. அரச மற்றும் தனியார் காரியாலங்கள் மூடப்பட்டன. இப்போராட்டம் ஒரு சில நாட்கள் நீடித்தன. இந்நிலையில், சிராஸ் மீராசாஹிவு பதவி விலகினால் என்ன நடக்குமென்பதனை சரியாக விளங்கிக் கொள்வதற்கு பதிலாக கட்சிக்குள் தமக்கும் இருக்கும் நெருடிக்கடியை தீர்ப்பதற்கு இதுவே தருணமென்று நினைத்து, சிராஸ் மீராசாஹிவுவின் மேயர் பதவியை பறித்துக் கொண்டார்கள். சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேயராக நியமிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் சாய்ந்தமருது மக்களிடையே ஏற்கனவே நீர்பூத்துக் கிடந்த தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை மேலும், வலுப்படுத்துவதற்கு உரம் சேர்த்தது. சிராஸ் மீராசாஹிவு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகினார். சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை தருதல் வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். இதன் போது தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாஹ் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவுல்லாஹ் சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையை தான் தருகிறேன் என்று தெரிவித்தார். அதற்காக அவர் கல்முனை மாநகரத்தை நான்காக பிரிப்பதற்கு திட்டமிட்டார். இதில் உள்ள எல்லைப் பிரச்சினையை முன் வைத்து கல்முனையின் அரசியல்வாதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதனால் சாய்ந்தமருதிற்கு தனியே உள்ளுராட்சி சபை வழங்க முடியாது. அது கல்முனை முஸ்லிம்களுக்கு பாதகமாக அமையும் என்;று தெரிவித்து, அதாவுல்லாஹ் இந்த முயற்சியை கைவிட்டார்.
சிராஸ் மீராசாஹவு தேசிய காங்கிரஸில் இணைந்தமையும், சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை என்ற கோரிக்கையும் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் அரசியலாகியது. சாய்ந்தமருது மக்களின் உணர்வோடு விளையாடி அங்குள்ள வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாடகமாடத் தொடங்கினார்கள். 2015ஆம் ஆண்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை தருவேன் என்று உறுதி கூறினார். ஆனால், அவர் பிரதமராக வந்ததன் பின்னர் அதனை நிறைவேற்றவில்லை. அதே வேளை, தேர்தலுக்காக நாங்கள் எழுதிக் கொடுத்ததை ரணில் தெரிவித்தார் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
ரவூப் ஹக்கீம், ஹரீஸ் ஆகியோர்கள் முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை பெற்றுத் தரும். அதற்கான தார்மீகப் பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை சாந்தமருதிற்கு அழைத்து வந்து, உள்ளுராட்சி சபையை பெற்றுத் தருவோம் என்று உறுதி மொழி வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து றிசாட் பதியூதீன் சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையை வழங்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதனை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், கல்முனை முஸ்லிம்களுக்கு ஆபத்தாக அமையுமென்று தெரிவித்து, றிசாட் பதியூதீனைச் சந்தித்து, அதனை தடுத்தார். இதனை ஹரீஸ் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
போராட்டம் வெடித்தது
தங்களின் நீண்ட காலக் கோரிக்கைக்கு கல்முனையின் அரசியல் பிரதிநிதியும், முஸ்லிம் காங்கிரஸும் தடையாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கு வாக்குறுதி தந்த அரசியல் கட்சிகளும் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், தமது கோரிக்கை தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்டு வருவதனையும், தாம் ஏமாற்றப்பட்டு வருவதனையும் முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாய்ந்தமருது, மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் தலைவரின் கீழ் ஒற்றுமைப்பட்டு வீதியில் இறங்கிப் போராடத் தீர்மானித்தார்கள். தமது மண்ணில் எந்தவொரு அரசியல் கட்சியும் அரசியல் செய்வதற்கு வரக் கூடாதென்று ஜனநாயகத்திற்கு மாற்றமானதொரு தடையை விதித்தார்கள். அரசியல் தலைவர்களுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை மேற்கொண்டார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கொடும்பாவிகளை எரித்தார்கள். பெரிய பள்ளிவாசல் சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபையை பெறுவற்கான பிரதான காரியாலயமாகச் செயற்பட்டது. அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.ஹனிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் போராட்;டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் நிர்வாகத்தின் வழிகாட்டலில், சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு சுயேட்சைக் குழுவில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். இத்தேர்தலில் குறிப்பிட்ட சுயேட்சைக் குழு 06 வட்டாரங்களில் வெற்றி பெற்று, பட்டியல் மூலமாக 03 உறுப்பினர்களைப் பெற்று 09 உறுப்பினர்களை கல்முனை மாநகர சபைக்கு அனுப்பியது. இதன் மூலமாக சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை மேலும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், தங்களுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை எந்த கட்சி அல்லது தலைவர் நிறைவேற்றித் தருவாரோ அவருக்கே தமது மக்கள் வாக்களிப்பார்கள் என்று பள்ளிவாசல் தலைவர் அறிவித்தார். இந்த கோரிக்கையை எந்தவொரு அரசியல் கட்சியும், தலைவரும் நிறைவேற்றுவதற்கு முன் வரவில்லை. சாய்ந்தமருதிற்கு தனியே உள்ளுராட்சி சபை வழங்குவது என்பது கல்முனை முஸ்லிம்களின் ஆளுகைக்கு ஆபத்து என்று உணரப்பட்டது. இதனால், கல்முனை மாநகர சபையை 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்தது போன்று நான்காக ஒரே நேரத்தில் பிரிப்பதே சிறந்ததென்ற முடிவுக்கு அரசியல் கட்சிகள் வந்தன.
இந்தப் பின்னணியில் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் தலைவர், நிர்வாகிகள் மற்றும் சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களை சந்தித்து தமது கோரிக்கைகளை தெரிவித்தார்கள். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு சாய்ந்தமருது மக்களை கேட்டுக் கொள்வதாகவும், அதற்கு உபகாரமாக உள்ளுராட்சி சபையை பிரகடனப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அதே வேளை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வையும் சந்தித்துக் கொண்டார்கள். அவரும் சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையை பெற்றுத் தருவதனை தமது பொறுப்பாக்கிக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விமலவீர திஸாநாயக்கவையும் இவர்கள் சந்தித்து தமது கோரிக்கையை முன் வைத்தார்கள். அவரும் ஒப்புதல் அளித்தார்.
உள்ளுராட்சி சபை பிரகடனம்
சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையை பிரகடனம் செய்தால் தமது அரசியலில் ஏற்பட்டுள்ள வாக்கு வங்கியின் வீழ்ச்சியை சரி செய்து கொள்ளலாமென்று அதாவுல்லாஹ் திட்டமிட்டார். தனியே சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையை வழங்கினால் கல்முனை முஸ்லிம்களின் ஆளுகைக்கு ஆபத்து என்ற தமது முன்னைய கொள்கையை மாற்றிக் கொண்டார். அதே வேளை, நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். கல்முனைக்கு எது நடந்தாலும் அக்கறையில்;லை. எங்களுக்கு உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்பதில் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தார்கள். மேலும், சாய்ந்தமருதிற்கு தனியே உள்ளுராட்சி சபை வழங்குவதனால் கல்முனை முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும் வாதித்தார்கள்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் உள்ளுராட்சி சபையை அரச வர்த்தமானியில் அறிவிக்க வேண்டுமென்பதில் அதாவுல்லாஹ் அவசரம் காட்டினார். அதற்கமைய கடந்த 14ஆம் திகதி சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதி அமுலாகும் வகையில் 2162ஃ50 எனும் இலக்கத்தையுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது மக்கள் பட்டாசு கொளுத்தி, வான வேடிக்கைகளை செலுத்தி மகிந்தார்கள். பால்சோறாக்கி வீதியால் பயணித்தவர்களுக்கு கொடுத்தார்கள். இரவு வேளையில், முற்றவெளியில் சாய்ந்தமருது மக்களுக்கு சோறு சமைத்து உண்ணக் கொடுத்தார்கள். விடுதலை அடைந்த தேசம் போன்று சாய்ந்தமருது காட்சி அளித்தது. சாய்ந்தமருது மக்களின் இந்த கேலிக்கைகளும், மகிழ்ச்சியும் கல்முனை முஸ்லிம்களுக்கு துன்பமாகவே இருந்தது.
ஆயினும், சாய்ந்தமருது மக்களின் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாதாவினால் கொண்டுவரப்பட்ட சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை பத்திரமானது நாடு பூரராகவும் உள்ள அனைத்து தனியான உள்ளூராட்சி மன்ற உருவாக்க கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு ஏனைய அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை உருவாக்கத்திற்கான அனுமதியினை அமைச்சரவை நேற்று இடைநிறுத்தியுள்ளதென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அகப்பையில் வந்தது வாய்க்குள் வரவில்லை என்றாகியுள்ளது.
Vidivelli 21.02.2020


0 comments:
Post a Comment