• Latest News

    February 24, 2020

    சாயந்தமருது நகர சபையை நானே நிறுத்தினேன் : கருணா அம்மான்

    நான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னைத்துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

    நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமாம். சரி இந்த கோடீஸ்வரன் இதுவரை இருந்து சாதித்தது என்ன? அவர் தேர்தலில் வெளியிட்ட விஞ்ஞாபனம் உள்ளதே.

    அதில் ஒன்றையாவது செய்திருந்தால் அவரை மன்னிக்கலாம். ஒன்றையாவது செய்தாரா? இல்லையே. அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ளன. 

    சரி 60 வீதமானோர் வாக்களித்தால் 70ஆயிரம் வாக்குகள் விழும். அப்படிப்பார்த்தால் 2 ஆசனங்களையே பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
    இந்த நிலையில் தமிழ் பிரதிநிதித்துவம் எவ்வாறு இல்லாமல்போகும்? 19 வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டு. அம்பாறை தளபதியாகியது நான் மட்டுமே.

    வடமராட்சி ஒப்பரேசன் தொடக்கம் தலைவருக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் எமது மட்டு. அணிதான் அங்கு சென்று சரித்திரம் படைத்ததை அனைவரும் அறிவார்கள்.

    எனவே அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தேவை எனக்குள்ளது. கல்முனைத் தமிழ் பிரதேச செயலக விவகாரம் கடந்த 30 வருட காலமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கம் திடீரென நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    குறித்த அமைச்சரிடம் கேட்டபோது தனக்குத் தெரியாது என்றார். உடனடியாக பிரதமர் ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு நானே அதை நிறுத்தினேன். சாய்ந்தமருது நகரசபையாகலாம் மாநகரசபையாகலாம். அது பிரச்சினையல்ல.

    ஆனால் எமது பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. எல்லை நிர்ணயம் என்று கூறி இழுத்தடிக்க முடியாது.
    தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த கல்முனையை எமது இடமென்று கூறிக் கொண்டு செயலகம் தரமுயர்த்த முடியாது என்று சொல்லயாருக்கும் உரிமையில்லை.
    எனவேதான் உரிமை அபிவிருத்திக்காக அதிகாரத்தோடு குரல் எழுப்ப நாடாளுமன்றம் செல்ல வேண்டும். முன்பு இரு தடவைகள் தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் சென்றேன். 

    ஆனால் இம்முறை அம்பாறைத் தமிழ் மக்களுக்காக தேர்தலில் நின்று நாடாளுமன்றம் செல்வேன். அதற்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என கோரியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாயந்தமருது நகர சபையை நானே நிறுத்தினேன் : கருணா அம்மான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top