• Latest News

    March 19, 2020

    தேர்தலைப் பிற்போடுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் நம்பிக்கை

    வெகுவிரைவில் தேர்தலைப் பிற்போடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுள்ளதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் ஒன்றிணைவான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

    நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டது. அந்நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்தே பொதுத்தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கிறோம். 

    அது குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடமும் கலந்துரையாடியிருக்கிறோம். அவரும் இதுவிடயத்தில் ஓர் இணக்கப்பாட்டுடன் இருப்பதாகத் தெரிகிறது. எனவே வெகுவிரைவில் தேர்தலைப் பிற்போடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கருதுகின்றோம்.

    ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் பொதுத் தேர்தல் பிற்போடப்படவில்லை எனில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துமே தவிர கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதில் கவனம் செலுத்தாது. அதே போன்று கிராம சேவகர் முதல் மாவட்ட சேவை உத்தியோகத்தர் வரை தேர்தலிலேயே அவதானம் செலுத்துவர்.

    அடுத்ததாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு அனைவரும் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

    ஆனால் தேர்தல் என்பது பெருமளவான மக்கள் கூடுகின்ற ஒரு செயற்பாடாகும். எனினும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாகப் பெருமளவான மக்கள் வாக்களிப்பதற்கு முன் வரமாட்டார்கள். மாறாக மக்கள் வாக்களிப்பதற்காக ஒன்று கூடும் பட்சத்தில் வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வாக்குகளை எண்ணும் பணிகளும் ஒரு சிறிய அறையில் பல்வேறு உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெறும். 

    எனவே ஒட்டுமொத்த தேர்தல் செயற்பாடுகளுமே கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே தற்போது தேர்தலைப் பிற்போட்டுவிட்டு, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறினார்.
    Kesari -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தலைப் பிற்போடுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் நம்பிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top